
நாகேஷ் – இயற்பெயர் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன், 27 செப்டம்பர் 1933 – 31 சனவரி 2009 தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார். புது வசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த் பாபு இவரது மகனாவார்.