
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா நடந்தது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
விழாவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை வகித்தார். ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் சியாமளா, காக்கும் கரங்கள் குழந்தைகள் இல்ல நிர்வாகி மோசஸ் டேனியல் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் கருத்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
பெண் குழந்தை மகிழ்ச்சியாக வாழ இந்த உலகம் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடமாக மாற வேண்டும் என்பதே ஒவ்வொரு தனி நபரின் கனவாக இருந்து வருகிறது. தற்போது பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மிகக் குறைந்து வருகிறது. இதனால் நாட்டில் கலாச்சார சீர்கேடுகளும், வன்முறையும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பெண் குழந்தைகளை போற்றி பாதுகாத்து வளர்க்க வேண்டும். பெண் பாலினத்தை உள்ளடக்கிய மற்றும் சமத்துவம் கொண்ட சமூகத்தை நோக்கி ஒன்றிணைய இந்த நாடு பெண்களுக்கு பாதுகாப்பான, அதிகாரம் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த இடமாக மாற்ற ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் வகையில், பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் இருக்கும் தவறான பிற்போக்கு எண்ணங்களை அகற்றி, ஆரோக்கியமான சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும். இதை முன்னெடுத்து செல்லும் விதமாக தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, பெண் குழந்தை பாதுகாப்பிற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டும் பல்வேறு சிறப்பு திட்டங்களையும், சலுகைகளையும் செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய முடியாத நிலைதான் நிலவி வருகிறது .இதை மாற்றவே, ஆண் குழந்தைகளுக்கு, நிகராக பெண் குழந்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டு என கூறினார்.
மேலும் இதனைத் தொடர்ந்து பணியாளர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் குழந்தைகளுக்கான சட்டங்கள், குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பாலியல் குற்றவியலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் குறித்து பேசினார்.
இதில் ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் லட்சுமி, ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை தேவ மலர் செல்வி, பொறுப்பு ஆசிரியை பட்டு டால்மி, பட்டதாரி ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.
முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மதர சமூக சேவை நிறுவன மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.