
51. வெள்ளக்கோயிலுக்கு ஒரே நாள் இரவில் சாலை அமைத்த வெங்கு பாஷா
வெங்கு பாஷா குறித்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆங்கில துரைத்தனத்தாரின் அதிகாரிகளையும், கலெக்டர்களையும் அடிக்கடி அழைத்து பங்களாவில் விருந்து கொடுப்பது வெங்கு முதலியாரின் பழக்கம். இவர் எப்போது விருந்துக்கு அழைப்பார் என்று ஆங்கில அதிகாரிகளும், கம்பெனி தலைவர்களும் காத்துக்கொண்டிருப்பார்களாம். விருந்து முடிந்ததும் தங்கத்தால் ஆன அழகு பொருட்களையும் அவர்களுக்கு பரிசாக தருவாராம் வெங்கு முதலியார். இவரின் விருந்துச் செய்தி இங்கிலாந்து மன்னரின் கவனத்தைக் கூட கவர்ந்தது என்று கூடச் சொல்வார்கள்.
இதில் மகிழ்ந்த ஆங்கில பிரபுக்கள் இவருக்கு பாஷா என்ற பட்டத்தை கொடுத்தார்கள். தில்லியிலுள்ள மொகலாயப் பேரரசர்கள் பட்டப்பெயர் பாஷா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக வெங்கு முதலியார் என்ற பெயர் மெல்ல மறைந்து வெங்கு பாஷா என்று எல்லோரும் அழைக்கும் அளவுக்கு பிரபலமாயிற்று. இந்தப் பெயரை கேட்பதில் ஒரு தனி இன்பம் பிறந்தது.
இந்த சூழ்நிலையில் தான் லண்டன் லாட்டரியில் இவர் வாங்கிய சீட்டுக்கு ஒரு லட்சம் பரிசு கிடைத்திருந்த செய்தி வந்து சேர்ந்தது. இப்படி சீதேவி கடல் கடந்து வலிய வந்து தன்னை தழுவிக் கொள்வாள் என்று இவர் நினைக்கவே இல்லை. இப்பணத்தால் அவருக்கு மகிழ்ச்சியும் இல்லை. இதைவிட பல லட்சங்களுக்கு அவர் அதிபதியாகிவிட்டதால்,
செய்தியறிந்த கொஞ்ச நேரம் சிந்தனை வயப்பட்டு கிடக்கிறார் வெங்கு பாஷா. தன் குடும்பத்தை நினைத்து பார்க்கிறார். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கமும், இனி பிறக்ககூடிய சூழ்நிலை இல்லை என்ற உணர்வும் அவருக்கு ஏற்படுகின்றது. எவ்வளவு பணம் இருந்து என்ன செய்ய? மனைவி தங்கம்மாளையும் வயதான தன் தாயாரையும் தவிர உலகில் தனக்கு வேறு யாரும் இல்லை என்ற உணர்வு அவரது உள்ளத்தில் எழுகிறது.
தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தவராய் தனது கணக்கு பிள்ளையே அழைத்து லண்டனிலுள்ள காரியஸ்தருக்கு உடனே தகவல் அனுப்ப ஏற்பாடு செய்கிறார். லண்டனில் கிடைத்த பணத்தை அங்கேயே செலவிடுக. இங்கிலாந்து மன்னர் குடும்பத்தினரையும், பிரபுக்களையும், மந்திரிமார்களையும் தன் சார்பாக அழைத்து விருந்து கொடுக்கவும் அவரவர் தகுதிக்கேற்ப அவர்களுக்கு நினைவுப் பரிசும் தரவும், என்ற வெங்கு பாஷாவின் செய்தி லண்டன் காரியஸ்தருக்கு கிடைக்கின்றது.
இப்படி லண்டனில் கிடைத்த பணம் தேம்ஸ் நதிக்கரையில் கரைந்து விடுகின்றது. இங்கிலாந்தின் துரைமார்களும், பிரபுக்களும், அரச குடும்பத்தாரும், ஆச்சர்யமும், வியப்பும் அடைகிறார்கள்.
லண்டனில் வெங்கு பாஷாவின் விருந்தை சுவைத்த இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் தங்கள் நினைவாக தங்க முலாம் பூசிய, வெள்ளிசக்கரங்கள் பொருத்திய அரச குடும்பத்தினர் பயன்படுத்தும் கோச் வண்டி ஒன்றை அரசின் நினைவுச் சின்னங்களோடும் அரேபிய குதிரைகளோடும் வெங்கு பாஷாவுக்கு பரிசாக அனுப்பி வைக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு அதிபரான வெங்கு பாஷா திருச்செந்தூர் முதல் திருக்குற்றாலம் வரையிலுள்ள பல கோவில்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை தம் பெயரில் அறக்கட்டளை செய்து எழுதி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இருநூறு வருஷங்களுக்கு முன்னால் இவர் செய்து கொடுத்த வெள்ளிச் சப்பரம் இன்றும் திருச்செந்தூர் கோவிலில் உள்ளது. ஆவணி 7ம் திருநாளும், மாசி 7ம் திருநாளும் வெங்குபாஷா கட்டளையில் இன்றும் கொண்டாடப் படுகின்றது.
1802ல் தன்னுடைய மாளிகைக்கு எதிரில் கோபுரத்தோடு கூடிய பிரம்மாண்டமான சிவன் கோவிலையும் அதையடுத்து வைணவக்கோவில் ஒன்றையும் மக்களுக்காக கட்டிக் கொடுத்து அதற்கு பல நூறு ஏக்கர் நிலங்களையும் எழுதி வைக்கிறார்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய வழிபாட்டிற்காக சர்ச் ஒன்று கட்டி 26.6.1826ல் அதைத் திறந்து வைத்த போது இதற்கு நிரந்தரமாக ஒளிவிளக்கு ஏற்றும் பொறுப்பை ஏற்று அதற்காக பல ஏக்கர் நிலங்களை கட்டளையாக நிறுவுகிறார் வெங்கு பாஷா. இந்தக்கோவில் இன்று ஊசிக் கோபுரம் என்ற பெயரோடு விளங்குகிறது. 1826ல் அங்கு ஏற்றிய தீப ஒளி வெங்கு பாஷாவின் சமய ஒருமைப்பாட்டுணவர்வை இன்றும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இப்போது பரபரப்பாக இயங்கி கொண்டிருககும் ஊசிகோபுரம் அருகில் உள்ள சாலை ஒரு காலத்தில் வண்டித்தடமாக இருந்துள்ளது. அதுவும் வெங்கு பாஷா பெயரில், அதையும் மக்கள் பயன்பாட்டுககு கொடுத்து விட்டார்.
குழந்தைகள் என்றால் வெங்கு பாஷாவுக்கு கொள்ளை ஆசை. பெற்றோரை இழந்த ஞானமணி என்ற பிராமணக் குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்கி அவளுக்கு திருமணமும் செய்து வைத்தார். ஆனால் மணமான சில நாட்களிலேயே கொடிய நோயால் அவள் காலமாகி விட்டார். இதனால் மனம் உடைந்து போன இவர் தான் வளர்த்த ஞானமணியின் நினைவு என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆசையில் “ஞானமணி அம்மாள் சத்திரம்” என்று ஒன்றை நிறுவி அதற்கு 110 ஏக்கர் நஞ்சை நிலத்தையும் கட்டளையாக எழுதிவைக்கிறார்.
ஒரு ஏக்கர் நிலத்தில் பூங்கா அமைத்து அதற்குள் பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்றையும் கட்டி நூற்றுக்கணக்கான ஏழைகள் தினமும் அங்கு வந்து இலவசமாக உண்பதற்கும் ஏற்பாடு செய்தார். இக்கட்டிடத்தில் வேதபாடசாலை வைத்து வைதீகமானவர் 12 பேருக்கு இலவசமாக உணவும் இடமும் தந்து அவர்கள் வேதம் படிக்கவும் ஏற்பாடு செய்தார். தற்போது இந்த ஞானமணி அம்மாள் சத்திரம் நெல்லை&பாளை நெடுஞ்சாலையில் டி.வி.எஸ். நிறுவனத்துக்கு எதிரே கம்பீரமாக இல்லாவிட்டாலும் காலத்தின் சுவடுகள் பதிந்த காணப்படுகின்றது. வெங்கு பாஷாவின் பெயரால் இங்கே ஒரு மருத்துவமனையும் இயங்கி வந்தது.
இப்படி பல நிலைகளிலும் வித்தியாசமாகவே வாழ்ந்த வெங்குபாஷாவின் அன்பு மனைவி தங்கம்மாள் மறையக் கூடாத வகையில் திடீரென்று காலமாகிவிட்டார். இதனால் எதற்கும் கலங்காத வெங்குபாஷா அதிர்ந்து போகிறார். ஏழைக்கு அள்ளி அள்ளி தந்த வள்ளல் மனம் பேதலித்து போகின்றது. பாளையங்கோட்டையிலுள்ள வெங்கு பாஷா இல்லம் மக்களின் சோக வெள்ளத்தால் பொங்கி வழிகின்றது. மனைவியின் உடலைப் பார்த்துக்கொண்டு பித்து பிடித்தது போல அமர்ந்திருந்த வெங்கு பாஷா அமைதியாக வெளியே வந்து காரியஸதர்களை அழைத்து, சுடுகாடு இருக்கும் வெள்ளைக்கோவில் பகுதி இங்கிருந்து இரண்டு மைல் தூரம் இருக்கிறது. இந்த இரண்டு மைலும் வயற்காடாக இருக்கின்றது. வயலின் வரப்புகளில் தட்டு தடுமாறி என் மனைவியின் உடலை தூக்கி கொண்டு போக நான் விரும்பவில்லை. அவள் உடம்பு அலுங்காமல் குலுங்காமல் சுடுகாட்டுக்கு போக வேண்டும். எனவே அந்த ரெண்டு மைல் தூரமும் அஞ்சடி அகலத்தில் வயக்காட்டுக்கு ஊடே பாதை அமைக்க வேண்டும். இன்னும் சில மணி நேரத்தில் இந்த பாதை அமைய வேண்டும். என்று மெல்லிய குரலில் உத்தரவிட ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும்தங்கள் சோகத்தை மறந்து இந்த வேலையில் ஈடுபடுகின்றனர்.
அன்று அவர் மனைவிக்காக போட்ட பாதை தான் இன்று தார்ரோடாக காட்சி தருகின்றது.
பாளையங்கோட்டையில் இவருடைய மாளிகையாகிய “வெங்கு பாஷா நிலையம்” இருநூறு வருஷங்களாக உடையாமல் அப்படியே நிற்கின்றது. ஒரு ஏக்கர் பரப்பிலுள்ள இந்த மாளிகையினுள் நாம் செல்லும் போது அதன் அற்புதமான வளைவுகளும், பிரம்மாண்டமான தூண்களும், இரண்டரையடி அகலம் உள்ள சுவர்களும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இவ்வளவுக்கும் அந்த மாளிகை பச்சவட்டுச் செங்கல் என்று சொல்ல கூடிய சுடாத செங்கல் மூலம் களிமண் கலவையால் கட்டி சாந்து பூசிய கட்டடம் தான்.
உள்ள அறைகள் அனைத்தும் “ட” வடிவத்தில் அமைந்துள்ளது தான் இதன் சிறப்பு. ஒரு அறையிலிருந்து ஒரு அறையை பார்க்க முடியாது. அப்படி ஒரு அமைப்பு.
வயது அதிகமாகிவிட்டாலும், அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியால் வெங்குபாஷா தம்முடைய சொத்துக்களையெல்லாம் 2.5.1828ல் ஒரு உயில் எழுதுகிறார். இந்த உயிலின் மூலம் இவரின் சொத்தின் மதிப்பையும், நிலத்தின் பரப்பையும் நாம் பார்த்து ஆச்சரியமும் அதியசமும் பட்டு போகிறோம். இதில் குறித்துள்ள தங்க பாத்திரங்களையும், நகைகளையும், பவுன்களையும், படித்து பார்த்து மலைத்து போகிறோம். “அடே அப்பா! எவ்வளவு சொத்துக்கள்!இது ஒரு வித்தியாசமான உயில். தன்னுடைய உறவினருக்கெல்லாம் சொத்தை பங்கு வைத்து எழுதுகிறார். தங்க பாத்திரங்களும், வெள்ளிப்பாத்திரங்களும் யாருக்கு சேர வேண்டும் என்று குறிக்கிறார். தன்னிடம் பண்ணை வேலை பார்த்தவர்களையும் ஒரு சொத்தாக நினைத்து பங்கு வைத்துக் கொடுக்கிறார். அப்போது உயிரோடு இருக்கும் தன் தாயாரை கவனித்துக் கொள்ளவும், ஒரு பகுதி சொத்தை ஒதுக்குகிறார். தான் அதுவரை ஏற்படுத்தியிருந்த அறக்கட்டளைகளையும் இதில் குறிப்பிட்டு அதற்கு தேவையான சொத்துக்களையும் இதில் சுட்டி காட்டுகிறார். இவையெல்லாம் போக மீதி சொத்தை தன் சுவீகார மகனுக்கு எழுதி வைக்கிறார்.
உயில் எழுதிய சில மாதங்களுக்குள்ளே 1828ல் வெங்கு பாஷா காலமாகிறார். ஆனால் ஊசிகோபுரத்தின் ஒளி விளக்கும், திருச்செந்தூர் போன்ற கோவில்களின் கட்டளைகளும் உள்ளவரை வெங்கு பாஷா வாழ்வார், வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்.
தற்போதும் வெங்கு பாஷா பெயர் சொல்லும் கட்டிடங்கள் பாளையங்கோட்டையிலும் முருகன் குறிச்சியிலும் மிக பிரமாதமாக இருக்கிறது. இவர் அமைத்துக்கொடுத்த சாலை இன்று வெள்ளக்கோயில் தாமிரபரணி கரை இடுகாட்டுக்ச்செல்ல வசதியாக உள்ளது.
இது போலவே தாமிரபரணி வரலாறுகள் பல்வேறு போற்றப்படுகிறது.
தாமிரபரணியை பொறுத்தவரை ஒவ்வொரு ஊரில் உள்ள ஒவ்வொரு கல்தூணும் ஒவ்வொரு வரலாற்றை பறைசாற்றிககொண்டே இருககிறது.
அப்பப்பா என்னவென்று சொல்வது. எந்த தலைப்பை எடுத்துக்கொண்டாலும், எழுதலாம். நதி எப்படி வற்றாமல் ஓடுகிறதோ.அதுபோலவே பொருநை நதியின் வரலாறும் ஓடிக்கொண்டே இருககிறது.
நாமும் நதி கரையின் வழியே நடந்தே வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் கடற்கரையை சென்று அடையவே இயலவில்லை. ஏன் என்றால் ஒவ்வொரு ஊரிலும் வரலாற்று கொட்டிக்கிடக்கிறது.
முதல் பாகம் தலைத்தாமிபரணி எழுதி முடித்து விட்டேன். இரண்டாவது பகுதியாக இடைத்தாமிரபரணியை இந்த ஆண்டு கொண்டு வர ஆயத்தப்பட்டு கொண்டிருக்கிறேன். கடைத்தாமிரபரணிக்காக தொடர்ந்து நடந்து செல்ல ஆயத்தப்படுகிறேன்.
விரைவில் எனது ஆசை நிறைவேறும் என்றே நினைக்கிறேன்.
தற்போதும் பொருநை ரகசியத்தினை தேடி நாம் எழுதிய தொடர் நதியை பற்றிய ஒரு முழுமையான தொடர் என்று கூறி விட முடியாது.
கரையில் நின்று தலையில் சிறு துளி தண்ணீரை விட்டது போலதான். முழ்கினால் மட்டுமே முத்தெடுக்க முடியும்.
தாமிரபரணியில் முத்தெடுக்க முடியுமா?
நிச்சயம் முடியாது. ஆனால் தாமிரபரணி வரலாற்றில் ஒரு துளியை பற்றி கூறினால் கூட, அது நமக்கு கிடைத்த பெருமை. அந்த பெருமையில் தான் இந்த தொடரை இத்துடன் முடிக்கிறேன். இது வரை எனககு பேராதரவு தந்த நெல்லை டைம்ஸ் பத்திரிக்கைக்கும், நிறுவனர் மாலை ராஜா அவர்களுக்கும், பொறுப்பாசிரியர் தம்பான் அவர்களுக்கும் , ஆசிரியர் குழுவிற்கும், வாசகளான உங்களுக்கும் நன்றி.
மற்றுமொரு தாமிரபரணி தலைப்புடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
(முற்றும்)