
5.
ராஜ கம்பீர சாத்தன் சாம்பவன் பராக்
“எங்க சாத்தான்குளத்தில இருந்து வாரீயளோ?” என்றார்.
“ஆமாம் சாமி. அங்க இருந்து தான் வாரேம். சாமி நாங்க பொன்டு புள்ளைய யெல்லாம் சிக்கலில மாட்டிக்கிட்டோம். எங்களை எப்படியாவது காப்பாத்துங்க சாமி”.
எல்லோரையும் பார்க்கிறார் பன்றி மாடன். “எனக்கு எல்லாமே தெரியும். நாம் முக்காலமும் உணர்ந்தவன். நீங்கள் என்ன சிக்கலில் மாட்டியுள்ளீர்கள் என எனக்கு நன்றாக தெரியும்”
தனது கண்களால் அவர்களை ஏறிட்டு பார்த்தார்.
அவரின் உருட்டு விழியும், வீரியமான கண் இமை மேல் வளர்ந்திருந்த முடியும் அனைவருக்கும் பயத்தினை ஏற்படுத்தியது.
திறந்த மார்பில் அவர் போட்டிருந்த துண்டு, ஒருபக்க மார்பை மறைந்திருந்தாலும், அவரின் சற்று உப்பிய வயிறும், வட்டமுகமும், தலை முடியில் போட்டிருந்த கொண்டையும் தீர்க்கமான பார்வையும் அவர் கண்ணை பார்த்து எதிர்த்து பேச முடியவில்லை. எனவே வந்தவர்கள் அவரிடம் எதுவும் பேச முடியாமல் அப்படியே அமைதியாகி விட்டனர் .
“தப்பு பண்ணிட்டாம்பா. தப்பு பண்ணிட்டான். உங்கள் கூட்டத்தில ரங்கன் சாம்பானும், முத்து சாம்பானும் தப்பு பண்ணிட்டாங்கம்மா. சாத்தன் மாமன்னன் சாதரண மன்னனான என்ன. அவன் யார் தெரியுமா?. கொடுத்து கொடுத்து சிவந்த கைகளை கொண்ட வள்ளல். வாரி வாரி மக்களுக்-கு இடங்களை வழங்கிய தன் மானத் தலைவன். அவன் கிட்டே வேண்டி வணங்கி நின்னாலே உங்களுக்கு பொன்னும் பொருளும் அள்ளித் தருவானே. இதுக்காக ஒரு அப்பாவி பொண்ணை கொன்னுபுட்டியளே. அந்த பொண்ணு கோபம் மட்டுமா? மகா ராஜா சாத்தன் சாம்பவன் கோபமுல்லா இப்போ உங்களை துரத்திக்கிட்டு இருக்கு.
எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
பன்றிமாடன் சோவியை எடுத்து உருட்டி போட்டார். அதன் பிறகு அவருக்கு ஆதாளி வந்தது. அவர் உடலுக்கு சாமி புகுந்தது. எனவே ஆட ஆரம்பித்தார்.
அருகில் இருந்த இளநியை எடுத்தார். அதை வேகம் கொண்ட படியே வாயில் வைத்து கடித்து துப்பினார். மேலே உள்ள இளநியை உரித்து உள்ளே இருந்து தேங்காயை எடுத்தார். தன் தலையில் அடித்து உடைத்தார். தண்ணீரை குடித்தார். அதன் பின் சிரட்டையோடு தேங்காயை கடித்தார். சிரட்டையை மட்டும் துப்பி விட்டு தேங்காயை கடித்து நற நறவென சவைத்தார்.
அவரை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
“மன்னன் எங்க மன்னன்
சாத்தன் எங்க மன்னன்
சாம்பவ குலத்து திலகம்
மக்களை காக்க வந்த சிங்கம்
பாவி பயல பழிவாங்க
பெண் ரூபத்தில எமன் வந்தானே
காதல் சொல்லி வந்தவளை
நம்ப வச்சு சோலி முடிச்சாங்களே
வஞ்சகத்தை வச்சி, குழியில் தள்ளி கொன்னாங்களே”
“பாசம் மிகுந்தவண்டா எங்க ராஜா
நேருக்கு நேர் வந்திருந்தா முடியுமாடா
6 அடியில் நிமிர்ந்த சிங்கம்
வெள்ளை குதிரையில வந்தாலே
எதிராளிகளே அஞ்சும்.
அள்ளி அள்ளி கொடுப்பான் எங்க வள்ளல்
அவனையே பழி வாங்கிட்டாங்களே.
வருமா?. இனிமே அவன் போல வருமா?”
“ராஜாவை கும்பிடுங்க. ராட்டிசிக்கு பூடம் போடுங்க.
ராட்டிசி பேரை உங்க புள்ளையளுக்கு வையுங்க.
இனிமே முள்ளு மொறிவும் இல்லை.
உங்களுக்கு நோய் நொடி வருவதுமில்லை.
சாத்தனை கும்பிடுங்க. அவனோட
காதலி பாப்பாத்தியை வணங்குங்க”
உடுக்கையை அடித்த பாடியே பன்றி மாடன் மாமன்னன் சாத்தன் சாம்பவன் புகழை பாடிக்கொண்டே இருந்தான்.
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே சாத்தன் மன்னின் வரலாறு நம் கண் முன் விரிந்தது.
அவரின் பிரமாண்டமான, அந்த அரண்மனைக்குள் நாமும் நுழைகிறோம்.
மரிக்கொழுந்த நல்லூர்.
பார் போற்றும் நல்லூர். வந்தோரை பசி அமர்ந்தும் கொடை வள்ளல் ஆளும் ஊர்.
அங்கு. அரசவையே கூடியிருந்தது.
வெள்ளை குதிரையில் குலசை ரஸ்தாவில் வேகமாக வந்து கொண்டிருந்தார் மாமன்னன் சாத்தன் சாம்பவன்.
திரண்ட தோளுக்கு சொந்த காரர். முறுக்கிய மீசை. உருட்டிய கண்கள். வயதோ சொர்ப்பம் தான். ஆனால் சீரும் சர்ப்பம். பகைமையை வென்றெடுக்கும் ஆற்றல். முதுமையை அரவணைத்து செல்லும் பேராற்றல். வாளெடுத்து சண்டையிட்டால் எதிராளிகள் நடுநடுங்கி செல்வர். புரமுதுகிட்டு ஓடுவர்.
பறந்து வந்த வெண்குதிரை முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி கர்ஜித்தது. அதன் மேலே அமர்ந்திருந்த சாத்தன் மாமன்னனின் கழுத்தில் கிடந்த நகைகளும் விண்ணில் பறப்பது போல் பறந்து, மீண்டும் மார்பில் தவழ்ந்தது. நெஞ்சில் சந்தனமும், நெற்றில் குங்குமமும் அவரின் அழகுக்கு மெருகு சேர்ந்தது.
இவன் தேவேந்திரனோ. இல்லை கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தமான கர்ணனோ. பொறுமையின் இலக்கணமாக திகழும் தர்மனோ. வில்வித்தையில் வீரம் காட்டும் அர்ச்சுணனோ, யானை படைகளையும் துவசம் செய்யும் பீமனோ. கருத்தில் அழமாய், அறிவில் சிகரமாய் விளங்கும் கண்ணனோ என எண்ணி தோன்றிது. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த உருவமாகவே காட்சியளித்தான் சாத்தன் மாமன்னன்.
இதோ அரண்மனை முன்னாள் குதிரை நின்று விட்டது.
குதித்தான். அவன் இடுப்பில் இருந்த வாளை சரி செய்து கொண்டு வாயில் வழியே நுழைந்தான்.
அவன் பின்னே மெய்காப்பாளர்களும், படைவீரர்களும் குதித்து ஓடிவந்தனர். வாயிலே காத்து கிடந்த அமைச்சர் அப்பு சாமி சாம்பவன் மாமன்னனுடன் சேர்ந்து கொள்ள வீர நடையுடன் தர்பார் மண்டபத்துக்குள் சென்றான்.
தர்பார் மண்டபம்.
இருபுறமும் கல்வியாளர்களும், கருத்து சொல்லும் முதியோர்களும், சாத்தன் சாம்பவனின் மூத்த குடிகளும் எழுந்து நிற்கிறார்கள். காவலன் உரத்த குரலில் அறிவித்தான்.
“ராஜாதி ராஜா
ராஜா குலோத்துங்க
ராஜா மார்த்தாண்ட
மரிக்கொழுந்த நல்லூர் மாமன்னன்
சாத்தன் சாம்பவன்
பாரக் பாரக்”
என்று குரல் கொடுக்க. அரே கம்பீரத்துடன் தர்பார் மண்டபத்துக்குள் நுழைந்து, அங்கே உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
ஒரு கையில் அவனது ஆடைகளை பிடித்துக்கொண்டு, தனது நெற்றியில் விழுந்த முடியை திருத்திக்கொண்டு அமர்ந்த அவன் அழகை பார்க்க கண் கோடி வேண்டும்.
“அமைச்சர் அவர்களே. நம் மண்ணில் மும்மாரி பொழிகிறதா-?”
“ஆம். அரசே அதில் எதுவும் குறை இல்லை. வானம் பார்த்த பூமி என்று நமது தேரி பூமியாம் மரிக்கொழுந்த நல்லூரை சொன்னாலும் கூட, கருமேனியாற்றில் வந்த தண்ணீரில் நமது குளங்கள் எல்லாம் செழிப்பாகி மூன்று போகமும் விளைகிறது மன்னா”.
“மக்கள் குறை இன்றி இருக்கிறார்களா?”.
கம்பீரமாக கேட்டார் மாமன்னர்.
“எந்த குறையும் இல்லை மன்னா”.
“சந்தோசம். வேறு யாருக்காவது எந்த குறையும் உள்ளதா?”.
அப்போது அரண்மனை காவலன் வந்தான். அவன் வரும் போதே பரபரப்பு.
“ ராஜாதி ராஜா. மன்னாதி மன்னா. தங்களை காண வறுமையில் வாடும் அந்தணர் ஒருவர் வந்து இருக்கிறார்”.
அனைவரும் மன்னரை பார்த்தனர்.
“என்ன வறுமையில் வாடும் அந்தணரா? எனது ஆட்சியில் அந்தணர் ஒருவர் வறுமையில் வாடுகிறாரா?. யாரங்கே. அவரை உள்ளே வரச்சொல்”.
அடுத்த நிமிடம் அந்த அந்தணர் உள்ளே வந்தார்.
அவர் வறுமை அவருடைய உடலில் நன்கு தெரிந்தது. மெல்லிய தேகம். அதன் மீது வறுமையை காட்டும் அழுக்கு பூநூல். கந்தல் கோலத்தில் மேலே ஒரு துண்டை போர்த்தியிருந்தார். அவர் தலையில் ஒரு முடிச்சி போட்டிருந்தார். அவரின் தலைமுடி எண்ணெய் கண்டு பல ஆண்டுகளை கடந்திருக்கும் போல. நடக்க முடியவில்லை. ஒரு வேளை சாப்பிட்டு பல நாள்கள் ஆகி இருக்கும் போல.
ஆகா. வறுமையில் வாடும் இந்த அந்தணர் இங்கே எதுக்கு வந்திருக்கிறார்.
வந்தவரை இருக்கையில் அமரும் படி பணித்தார் மகராஜா.
அவர் நடுங்கியபடியே, அந்த ஆசனத்தில் ஒரு ஓரத்தில் அமருவதற்கே தயங்கிய படி அமர்ந்தார்.
அவர் தனது தோளில் தொங்கி கொண்டிருந்த மிகவும் கந்தல் கோலமாக இருந்த துணி பையிக்குள் இருந்து ஒரு ஓலைச்சுவடியை எடுத்தார். அந்த ஓலைச்சுவடியை நடுங்கி கையோடு காவலன் கையில் கொடுத்து, “இதை உங்கள் மாமன்னிடம் காட்டுங்கள்” என்றார்.
காவலர் அந்த ஓலைச்சுவடியை வாங்கி கொண்டு. “மாமன்னா . உத்தரவு” என்றபடியே அந்த ஓலைச்சுவடியை மகராஜா கையில் கொடுக்க முயன்றார்.
மாமன்னன் தனது கண் அசைவில் மந்திரியை அடையாளம் காட்ட, மந்திரி அப்பு கையில் அந்த ஓலைச்சுவடி சென்றடைந்தது.
“ம். மந்திரியாரே. அந்த சுவடியில் என்ன இருக்கிறது . படியுங்கள்”.
ராஜா உத்தரவிட, மந்திரி படிக்க ஆரம்பித்தார்.
“உத்தரவு மன்னா, இப்போதே படிக்கிறேன்”.
ஓலைச்சுவடியை கையில் வாங்கி படிக்க ஆரம்பித்தார்.
“மாமன்னரே. இப்போது உன் அரசவைக்கு வந்து இருக்கும் அந்தணன் என் மகன். நான் உன் தந்தையோடு பழகியவன். உன் தந்தை மாமன்னனிடம் நான் ஒரு சாவல் விட்டிருந்தேன். இளம் வயதிலேயே உன் மகன் மாமன்னமாக வருவான். உன்னுடைய ஆயுள் ரேகை சரியில்லாமல் இருந்தாலும் கூட உன் மகன் சிறுவயதிலேயே மன்னராக மாறி விடுவார். என்றேன். நீரோ. எனக்கு ஆயுசு கெட்டி. என் மகனோ 50 வயதுக்கு மேல் தான் ஆட்சியை பிடிப்பான் என கூறினீர். இல்லை. அவன் 20 வயதிலேயே ஆட்சியை பிடிப்பான் என கூறினேன். அதுபோல என் மகன் ஆட்சிக்கு வந்தால். நீரோ அல்ல து நீர் அனுப்பும் யாரோ இந்த ஓலைச்சுவடியை கொண்டு வந்தால் அவர் கேட்டதை கொடுக்க வேண்டும். என நாம் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளோம். அதன் படி நாம் இருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்வோம்”.
என்றுபடித்து முடித்தார். “என்ன மந்திரியாரே இது என்ன மிக வித்தியாசமான ஒப்பந்தமாக இருக்கிறது”.
“ஆம் மன்னா உமது தந்தையான மாமன்னரும், இதோ இங்கே வந்திருக்கும் ஏழை அந்தணரின் தந்தையும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்”.
“ம். சரி. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்”.
“மன்னா. இந்த ஒப்பந்தப்படி நீங்கள் சிறுவயதிலேயே ஆட்சி க்கு வந்து விட்டீர்கள் . எனவே உங்கள் தந்தை வாக்கை நீங்கள் காப்பாற்ற வேண்டும்”.
“அப்படியென்றால்”.
இந்த அந்தணர் கேட்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
“மந்திரியாரே. எனது தந்தை கூற்றை நான் நிறைவேற்றுவேன். அவருக்கு என்ன வேண்டும் என்று கேளும்”.
மந்திரி யோசித்தார். “வேண்டாம் மன்னா. யாரோ நமக்கு முன்னால் சாட்சியே இல்லாமல் செய்த காரியம். இந்தகாரியத்திற்காக நாம் ஏன் சிரத்தை எடுத்து கொள்ள வேண்டும் . வேண்டாம் மன்னா”.
“ என்ன மந்திரியாரே என்ன கூறுகீறிர்கள்”.
மந்திரி அமைதியாக இருந்தார்.
மந்திரிக்கு பயம். எது கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் இட்டு உள்ளார்கள். தற்போது இந்த வறுமையில் இருக்க அந்தணன் சூழ்ச்சியாக இந்த நாட்டுக்கு நான் ராஜாவாக வேண்டும் என்று கேள்வி கேட்டால் என்ன செய்வது என் யோசித்தார்.
உண்மைதானே.
அவர் பயந்தது போலவே அடுத்து ஒரு காரியம் நடந்தது.
(மாமன்னன் தொடர்ந்து கம்பீரமாய் செல்வான்)