
50. லண்டன் லாட்டரி பணத்தினால் கட்டப்பட்ட பாலம்
சுலோசனா முதலியார் பாலத்தினை பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பாளையங்கோட்டையிலிருந்து இடிந்து போன கோட்டைகளிலிருந்து கருங்கற்கள் வருகின்றன. கலை அழகுமிகுந்த கிருஷ்ணாபுரம் கோவிலின் வெளிப்பிரகாரத்தின் கற்களை கொண்டு தான் பாளையங்கோட்டையின் கோட்டை சுவர்கள் கட்டப்பட்டன என்பதும் கட்டியவன் யூசுப்கான் என்பதும் ஒரு தனி வரலாறு. தற்போது அந்த வரலாறுக்குள் செல்லவேண்டாம்.
இக்கற்களை கொண்டே பாலத்தின் அஸ்திவாரமும், தூண்களும் உருவாகின்றன. சிமெண்ட் இல்லாத அந்த காலத்தில் சுண்ணாம்புடன், பதனி, கருப்புக்கட்டி இவைகளை சாந்தாக்கி செங்கல்லை கொண்டு பாலம் உருவாகின்றது. இந்த வேலைக்காக சிறையில் இருந்த ஆயுட்கைதி 100 பேரை அரசாங்கம் தந்து உதவுகின்றது. இஞ்சினியர் டபிள்யூ.எச்.ஹார்ஸ்லி மேற்பார்வையில் பால வேலை வேகமாக நடைபெறுகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்தாவது பாலத்தை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. பணத்தட்டுப்பாடு இல்லாமல் சுலோசன முதலியார் பார்த்துக்கொள்ள ஏனைய மேற்பார்வை பணியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் அரசாங்கம் தந்து உதவுகின்றது. 60 அடி விட்டத்தில் ஆர்ச் வடிவில் 11 தூண்களும், பிரமாண்டமான தூண்களும், 21 1/2 அடி அகலமும், 760 அடி கீழ் நீளமும்கொண்ட பாலம் 1843ல் கட்டி முடிக்கப்படுகின்றன. இதற்கு சுலோசன முதலியாரின் பெயரும் சூட்டப்படுகின்றன.
பால வேலை நடந்து கொண்டிருக்கும் போதே கலெக்டர் தாம்சனுக்கு மாற்றம் ஏற்பட கலெக்டர் தாமஸ் என்பவர் கலெக்டர் பொறுப்பை ஏற்கிறார். பாலத்தின் திறப்புவிழா 1843 நவம்பரில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. திறப்புவிழா அன்று அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று முதல் பயணி அல்லது முதல் குடிமகன் என்ற பெருமிதத்தோடு பாலத்தில் முன்செல்கிறது. இதை தொடர்ந்து ஆங்கில வீரர்கள் அடங்கிய காலட்படை சென்றது. அதைதொடர்ந்து சீறிய பீரங்கிபடைப் போகிறது. இவர்களை தொடர்ந்து சுலோசன முதலியாரும், இவருக்கு பின்னால் நீதிபதி டக்லஸ், கலெக்டர் தாமஸ் அவருக்கு பின்னால் மேற்பார்வையிட்டு பாலத்தை கட்டிமுடித்த இஞ்சினியர் ஹார்ஸ்லி ஆகியோர் சென்றனர். இவர்களையெல்லாம் தொடர்ந்து திருநெல்வேலி நகரின் மக்கள் வெள்ளம் நடந்து சென்றது. இப்படியாக ஒரு கோலாகல திறப்பு விழா ஊர்வலம் யானையின் தலைமையில் அன்று நடந்தது.
150 வருடங்களுக்கு முன்னால் அரசால் சாதிக்க முடியாத ஒரு சாதனையை தனி ஒரு மனிதர் தம் வள்ளல் தன்மையால் சாதித்து விட்டார். திருநெல்வேலியின் தெற்கு முனையும் பாலமும் சந்திக்கும் இடம் வீரராகவபுரமாக இருந்தது.
இப்போது இது “திருநெல்வேலி பாலம்” என்ற பெயர் பெறுகின்றது. ரயில் நிலையமும், தபால் நிலையமும் கூடத் “திருநெல்வேலி பாலம்” என்ற பெயரால் அழைக்கப்பட்டன. முதலியாரின் வள்ளல் தன்மையை பாராட்டி தனிப்பாடல்களும் பிறந்தன.
இவருடைய வள்ளல் தன்மை மக்கள் மனதில் என்றும் நிற்பதற்காக திருநெல்வேலி பகுதியிலிருந்து பாலம் தொடங்கும் இடத்தில் சதுர வடிவமான “கருங்கல் தூண்” அமைக்க அரசு ஆணை பிறப்பித்தது. அதில் அவருடைய பெயரும் பெருமையும் எழுதப்பட்டன. அதன் பிறகு இந்தபாலத்துக்கு பெரிய சோதனை ஏற்பட்டது.
1869ல் தாமிரபரணியில் ஏற்ப்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக இப்பாலத்தின் நான்கு தூண்கள் சேதமடைந்தன. 1871ல் அரசு செலவில் இது செப்பனிடப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சி தவைராக இருந்தபககிள் துரை இந்த பாலத்தினை செப்பனிட்டார். இதன் நினைவாக பக்கிள் துரை பெயரை இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து அழகு பார்க்கிறார்கள். தற்போதும் கூட பக்கிள், பக்கிள் துரை, பக்கிள் பாண்டியன், பக்கிள் நாடார் என்ற பேரில் பல பெரியவர்களை தாமிரபரணி கரை கிராமங்களில் சந்திக்கலாம்.
விடுதலைக்கு பின் இப்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று,. தென்வடலாக இருக்கும் இப்பாலத்தின் பழைமை கெட்டுவிடாமல் பாலத்தின் மேற்குப்பகுதியை மட்டிலும் விரிவுபடுத்தினர் அப்பகுதியில் அமைந்திருந்த வளைவுகள் அதனுள் அடங்கிவிட்டன. காங்கிரீட் முறையில் இது அமைக்கப்பட்டது. 21 1/2 அடியாக இருந்த பாலம் 50 அடி அகலம் கொண்ட பாலமாக விரிவுபடுத்தப்பட்டு 1967 திறந்து வைக்கப்பட்டது. அன்றைய முதல்வர் பகதவத்சலம் இதை திறந்து வைத்தார். தற்போது 2021 ல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது அருகில் புதிய பாலம் ஒன்றையும் அமைத்துள்ளார்கள். நெல்லை தாமிரபரணி ஆற்றில் தற்போது பல பாலங்கள் பெருகி விட்டது. ஆனாலும் சுலோச்சனா முதலியார் பாலத்தின் பெருமை நம் மனதை விட்டு நீங்கவில்லை.
1966ல் பாலம் விரிவுபடுத்தப்பட்ட போது அந்த பழைய கல்தூண் எப்படியோ மாயமாக மறைந்துவிட்டது. அந்த தூணின் கற்களும் எழுதியிருந்த புகழ் மொழிகளும் எங்கே இருக்கின்றன என்று தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. 1845ல் நிறுவிய ஒரு வரலாற்று சின்னம் இப்படி அழிந்து போனது வேதனையை தான் தருகிறது.
150 வருஷங்களுக்கு முன்னால் இப்பாலத்தை உருவாக்க விரும்பிய தாம்சன், தாமஸ், லண்டன் வாட்டர்லூ பாலம் போல இதை அமைத்த வரைபட நிபுணர் கேப்டன் பேபெர், புகழ்பெற்ற இஞ்சினியர் ஹார்ஸ்லி, கொடை வள்ளல் சுலோசன முதலியார், தாம் அணிந்த நகையை அள்ளி பாலத்திற்காக கொடுத்த சுலோசன முதலியாரின் மனைவி வடிவாம்பாள் இவர்களின் படங்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் இவர்களின் சிந்தனையிலும் செயலிலும் பொருளிலும் உருவான திருநெல்வேலி சுலோசன முதலியார் பாலம் இன்றும் நின்று நிலைத்து அவர்கள் புகழை கூறுகின்றது. இந்த பாலத்தை கடந்து செல்லும் போதெல்லாம் அவர்களின் நினைவுதான் நமக்கு வருகின்றது. அதோடு 1845ல் சுலோசன முதலியாருக்கு நன்றி தெரிவிக்க ஆங்கில அரசு நிறுவிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நினைவுத்தூணை சுவடே தெரியாமல் அழித்துவிட்டார்களே என்ற ஆதங்கமும் ஏற்படுகின்றது.
அதே நேரம் லண்டன் லாட்டரி பணத்தினால்தான் இந்த பாலம் கட்டப்பட்டது என்ற ஒரு வரலாறும் பேசப்பட்டு வருகிறது. அந்த வரலாறும் சுவையானது தான். அதாவது லண்டனுக்கு வெள்ளைத்துரைகளோடு சுலோசனா முதலியார் சென்ற போது அங்கு ஒரு லாட்டரியை வாங்குகிறார். அதில் 1 லட்ச ரூபாய் பரிசு விழுகிறது. அந்த சமயம் வெள்ளையனை எதிர்த்து இந்தியாவில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே வீட்டில் கூட ஆங்கிலேயரிடம் வேலை பார்த்த சுலோசனா முதலியாருக்கு எதிர்ப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது . தாயாரிடம் வந்து , “அம்மா எனக்கு லண்டன் லாட்டரியில் ஒரு லட்சம் விழுந்து இருக்கிறது என்ன செய்ய” என்று கேட்டாராம். அதற்கு அவர் “இங்கிலிஸ்காரன் பணம் அதை கொண்டு போய் ஆத்தில போடு”. என்று கூறி விட்டாராம். அதிர்ந்து போன சுலோசன முதலியார் வெளியே வந்து விட்டார். கலெக்டர் ஆபிஸ் வேலைக்கு வர ஆற்றில் படகில் -ஏற நிற்கிறார். அப்போது படகில் ஏறுவோர் சண்டை போடுகிறார்கள் அங்கு வந்த போலீஸ் அவர்களை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு செல்கிறது. இதனால் வேதனை பட்ட அவர், “தாயார் லண்டன் பணத்தினை ஆற்றில் போடு என்று சொன்னாரே, பேசாமல் ஆற்றில் பாலமாக போட்டுவிட்டால் என்ன” என்று பாலம் கட்ட ஏற்பாடு செய்தாராம் என்றும் சுவையாக ஒரு வரலாறு சொல்வார்கள்.
எது எப்படி என்றாலும் அந்த பணம் சுலோசன முதலியார் பாலம் தான். அந்த பாலத்தில் நாம் செல்லும் போதெல்லாம் அவரின் நினைப்பு நம்மை மென்மையாக வருடிக்கொண்டே தான் இருக்கும்.
அடுத்ததாக பாளையங்கோட்டையில் பல பாதைகள் விஸ்தரிமாக காரண கர்த்தா வெங்கு பாஷா அவர்கள். இவர் முயற்சியால் அருமையான ஆலயங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இவர் பல நல்லகாரியங்கள் செய்துள்ளார். இந்து, கிறிஸ்தவ கோயில்களுக்கு வாரி வழங்கியவர், தனது மனைவியை அடக்கம் செய்வதற்காக மிகப்பெரிய சாலை ஒன்றை உடனே உருவாக்கியுள்ளார். எனவே சாலைக்கு அவர் செய்த உதவியை பேசும் போது, அவர் வரலாற்றையும் பேசலாம் என்று நினைக்கிறேன்.
எனவே அவர் வரலாற்றை கொஞ்சம் அசைபோடுவோம்.
18ம் நூற்றாண்டின் பிற்பகுதி 1790ஐ ஒட்டி இருக்கலாம். வருஷமும் மாதமும் துல்லியமாக தெரியவில்லை.
பாளையங்கோட்டை சிவன் கோவில் கீழத் தெருவில் அரண்மனை போல ஒரு பங்களா உள்ளது. அந்த பங்களாவில் மேல் நாட்டு லஸ்தர் விளக்குகளும், குளோப் களும் தொங்கி கொண்டிருந்தது. மத்திய ஹாலில் விஸ்தாரமான ஒரு சோபாவில் அமர்ந்து அன்றைய கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் திருவேற்காடு வெங்கு முதலியார் என்ற வெங்கு பாஷா. கணக்கு பிள்ளைகளும், வேலைக்காரர்களும் அங்குமிங்கும் சுறுசுறுப்பாக தங்கள் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது தான் லண்டனிலுள்ள வெங்கு பாஷாவின் காரியஸ்தர் அனுப்பிய செய்தி கிடைத்தது. கிழக்கிந்திய கம்பெனியாரின் வற்புறுத்தலுக்காக அவர் வாங்கிய லண்டன் லாட்டரி சீட்டில் ஒரு லட்சம் பரிசு விழுந்த செய்தியை காரியஸ்தர் அதில் எழுதியிருக்கிறார்.
சென்னை மாகாணத்தில் தென்பகுதியில் பருத்தி வியாபாரம் நடத்தி கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கொள்முதல் தரகராகவும், மொழிப்பெயர்ப்பாளராகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் வெங்கு முதலியாரின் தாய்மாமன்.
சாமர்த்தியமான பேச்சுதிறமையும், ஆங்கில மொழியை சரளமாக பேசும் புலமையும் இவருக்கு கைவந்த கலை. எனவே இவரை கம்பெனியாருக்கு பிடித்து போனதில் ஆச்சர்யமில்லை. கரிசல்காட்டு பருத்தியை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பும் கம்பெனியாருக்கு இவர் துணை மிகவும் தேவைப்பட்டது. இந்த வகையில் கம்பெனியாரின் “துபாஷாக”(மொழி பெயர்ப்பாளராக) அந்த வட்டாரத்திலே ஒரு பெரும்புள்ளியாக மதிக்கப்பட்டார். செல்வாக்கும், செல்வமும் சேர்ந்தன.
எனவே திருவேற்காட்டில் இருந்த தன் சகோதரி மகனான வெங்கு முதலியாரை தனக்கு ஒத்தாசைக்காக அழைத்துக்கொண்டார். இப்படியாக மாமன் அழைக்க தனது சிறு வயசில் பாளையங்கோட்டை வந்த வெங்கு முதலியார் தன் மாமனிடம் சில வருஷங்கள் நுட்பத்தை பழகி அவருடைய திறமையையும், வியாபார நுட்பத்தையும் சுவீகரித்து கொண்டு மாமனையும் மிஞ்சுகின்ற அளவுக்கு வளர்ந்து கம்பெனியாரின் பாராட்டுகளையும் பெறுகிறார்.
பிறகு கேட்கவா வேண்டும் செல்வ செழிப்புக்கு?
தனது இருபத்தைந்தாவது வயதுக்குள் அங்குள்ள வெள்ளைக்கார்களின் அபிமானத்தையும், நம்பிக்கையேயும் பெற்று பஞ்சுத்தரகர்களாகவும், அவர்களின் துபாஷாகவும் ஆகிறார் வெங்கு முதலியார். பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. மாமாவை விடவும் செல்வாக்கு கொடி கட்டி பறக்கிறது. நிலபுலன்களும், தோப்பு துரவுகளும், அரண்மனை போன்ற பல பங்களாக்களும் அவருக்கு வந்து அமைகின்றன. இப்படியாக பாளையங்கோட்டை, திருநெல்வேலி பகுதியில் ஒரு கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார் வெங்கு முதலியார். செல்வ வளம் பெருக பெருக இவருடைய மன வளமும் பெருகிற்று. கூடவே தரும சிந்தனையும் வளர்ந்தது.
மேல்நாட்டு பாணியில் அமைந்த இவருடைய பங்களாக்கள் அனைத்தும் சுதேச சமஸ்தானத்து மன்னர்களின் அரண்மனை போல ஆடம்பரமும், அழகும் கொண்டு விளங்கிற்று. அவற்றுள் குறிப்பிட தக்க ஒன்று தென்னம்பிள்ளை பங்களா. இருநூறு வருஷங்கள் ஆகிவிட்டாலும் இன்றும் இப்பங்களாவின் பொலிவும், உள் அமைப்பும் நம்மை வெகுவாக கவர்கின்றன. பாளையங்கோட்டை முருகன்குறிச்சி கால்வாய் கரையில் பல ஏக்கர் பரப்பில் உள்ள இப்பங்களாவை இன்றும் நாம் காணலாம். அங்கே தான் மற்றுமொரு வரலாறு ஒழிந்து கிடக்கிறது.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)