
பாஞ்சால நாட்டில் சூரியக் குல மதுராந்தகன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். நல்ல நீதிமான். தானங்களைச் செய்பவன். ஆனால் நதிதேவதைகளை மதிப்பதும் இல்லை. குலகுருவாகிய கன்வமகரிஷி பாவப் புண்ணியப் பலன்களைப் பற்றியும் ஜல தானத்தின் மகிமைகளையும் எடுத்துக் கூறினார். மன்னன் கேட்கவில்லை. தண்ணீர் தானம் செய்ய அவசியம் இல்லை என மறுத்து, மற்ற தானங்களைச் செய்தான். அவன் அடுத்த ஜென்மத்தில் பல்லியாகப் பிறந்தான். ராஜமாளிகையில் பூச்சிகளைப் தின்று கழித்தான். அந்த மாளிகை வணிகரைக் காண கன்வ மகரிஷி வந்தார். அவரை வணிகர் வரவேற்று பாதங்களை நீரால் கழுவினார். அப்போது நீரில் சிதறிய நீர்துளி பல்லியின் மீது பட்டது.
பல்லி உருவில் இருந்த மதுராந்தகன் மனிதக் குரலில் முனிவரிடம் கெஞ்சினான், ‘மகரிஷியே என்னைக் காப்பாற்ற வேண்டும்’ . உடனே கன்வ மகரிஷி பல்லி வடிவில் இருப்பது மதுராந்தகன் என்பதை உணர்ந்தார். ‘மன்னா உனக்குப் பலமுறை ஜலத்தில் பெருமைகளை எடுத்துரைத்தேன். அதிக அளவு மற்ற தானம் செய்திருந்தாலும் ஜலதானம் செய்ய ஏரிகுளங்களை அமைக்கவில்லை. ஆனாலும் நீ மன்னிக்கப்பட வேண்டியவன். பல்லியான உன்னை ஒரு சந்தனப் பேழையில் வைத்து தென்திசை அனுப்புகிறேன். அங்கு தாமிரபரணி தீர்த்தத்தில் உனக்கு மனித உருவமும் ஞானமும் கிடைக்கும்’ என்று கூறினார்.
தென்திசை வந்தப் பல்லி அங்கும் இங்கும் அலைந்து கடைசியாகத் தாமிரபரணிக் கரையில் உள்ள முன்னீர்பள்ளத்தை அடைந்தது. அங்கு தபசிகள் கூடி தாமிரபரணிக்கு புஷ்கரணி,யாகம் நடத்திக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட பல்லி சந்தோஷ மிகுதியில் அங்கிருந்தத் தபசியின் கமண்டல நீரில் விழுந்தது. தபசி கோபத்தில் கமண்டலத்தைத் தமிரபரணியில் வீசினார். அங்கு விழுந்த பல்லி அழகான மனிதனாக (மதுராந்தகன்) மாறியது.
அனைவரும் ஆச்சரியமுற்றனர். அதன் பின் மதுராந்தகன் பலகாலம் தங்கிச் சிவபெருமானை வழிபட்டு தீர்த்த நீராடி ஜலதானம், பானகம் மோர் போன்றவைகளைத் தானம் செய்தான்.
முன்னீர்ப்பள்ளம் கிராமம் கி.பி.1120-22 ஆண்டுகளில் “ஜெயசிங்க நாட்டு கீழ் களக் கூற்றம்” என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஸ்ரீ வல்லபன் என்ற மன்னன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்ரம பாண்டியன் ஆகிய இருவரும் சிற்றரசர்களாய் ஆண்ட காலத்தில் சிறப்புடன் விளங்கியது. பின்னர் 1544-ல் விஜயநகர மன்னன் அச்சுதராயரின் காலத்தில் மூன்று நீர்ப்பள்ளம் என விளங்கிய இத்தலம் தற்போது முன்னீர்ப்பள்ளம் என்றழைக்கப்படுகிறது.
ஸ்ரீவல்லபமன்னன் ஆண்ட காலத்தில், தன் சொந்த வழிபாட்டுக்கென ஒரு சிவலிங்கம் செய்து தர ஒரு சிற்பியை நியமித்தார். சிற்பி முறையாகச் சிவலிங்கமொன்றைச் செய்தார். அப்போது அங்கே வந்த ஆண்டி, அந்த லிங்கத்தைத் தரும்படி கேட்டார். சிற்பி தரமறுத்து விட்டான். பொதிகை மலை போய்விட்டு வந்த ஆண்டி மீண்டும் லிங்கத்தினைக் கேட்டார். மீண்டும் மறுத்தார் சிற்பி. ஆண்டி கையில் கொண்டு வந்திருந்த மூலிகைச் சாற்றை இரண்டு சிவலிங்கங்களின் மீதும் வீசி எறிந்தார். லிங்கங்கள் தீப்பிழம்புகளாகி எரிந்தன. பயந்து போன சிற்பி, மன்னனிடம் தெரிவிக்க, மன்னன் ஆண்டியை மிரட்டினார். “சிற்பியால் உருவாக்கப்பட்ட இரண்டு சிவலிங்கக் கற்களிலும் தேரை குடி கொண்டிருப்பதால் பூஜைக்குரியதன்று” என ஆண்டி கூற, அனைவரும் தவறை உணர்ந்தனர். பின் அவரையே லிங்கம் செய்து தர கூறினர்.
ஆண்டியும் மனமகிழ்ந்து, ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர், ஆகிய மூன்று நீர்நிலை உள்ள இடங்களிலும் மூன்று லிங்கங்களைத் தோற்றுவித்து மன்னனிடம் ஒப்படைத்து விட்டு மறைந்தார்.
“ஆண்டியாக வந்தது சிவனே” என அறிந்தான் மன்னன். மனமகிழ்ந்து, ஒன்றைத் தன் வழிபாட்டுக்கும், இரண்டாவதை முன்னீர்ப் பள்ளத்திலும், மூன்றாவது தருவை என்ற ஸ்ரீவல்லப நகரிலும் ஸ்தாபனம் செய்தார். இரண்டு இடங்களிலும் கோயில்களைக் கட்டி கும்பாபிஷேகமும் செய்தார்.
சிவனும், முன்னீர்பள்ளத்தில் பரிபூர்ண கிருபேஸ்வரராகவும் தருவையில் வல்லப பாண்டீஸ்வரராகவும் அருளாட்சி செய்யத் தொடங்கினார். சரியானபடி கல் தேர்வு செய்யத் தவறிய சிற்பி சாபத்தால் பல்லியாக அம்பாள் கோயிலில் இருந்தான். பின்னர் கி.பி.1554&ல் விஜயநகர மன்னன் அச்சுதராயர் அனுப்பிய மல்லப்ப நாயக்கர், அருகிலிருக்கும் ஊர்களிலிருந்து 87 அந்தணர்களைக் குடியமர்த்தி, லஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலைக் கட்டி அக்ரகாரம் அமைத்து, நில மான்யங்களை ஏற்படுத்தி, நீர் வசதிக்காகக் கால்வாய்களை அமைத்தார்.
சிவனையும், திருமாலையும் வழிபடும் போதுதான் வழிபாடு முழுமையடைந்து பரிபூர்ணக் கிருபை பெறமுடியும். எனவே இவ்வூரில் சிவன் விஷ்ணு ஆலய வழிபாடுக்கு ஏற்பாடு செய்தார். சௌந்தர்ய கயிலாயம் என இவ்வூர் போற்றப்படுகிறது. பரிபூர்ணக் கிருபேஸ்வரர், கிழக்கு நோக்கியச் சந்நிதியிலும், தனிசந்நிதியில் பேரழகுச் சிலையாக அம்பாள் பரிபூர்ண கிருபேஸ்வரி தெற்கு நோக்கியும் அருள்பாலித்து வருகிறார்கள். இவ்விரு சந்நிதிகளுமே எழில் நிறைந்த அழகு விமானங்களுடன் விளங்குகின்றன.
விநாயகர் முதல் நந்தி முடிய சிவ பரிவாரங்கள் புடை சூழ ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ள இங்கு, முன் மண்டபம் கயிலாய மண்டபம் எனப் போற்றப்படுகிறது. இங்கு திருமாலின் தசாவதாரத் தோற்றத்துடன் பல பரிவாரத் தேவதைகளும் அருள் தருகிறது. சாபத்தால் பல்லி வடிவான சிற்பி, அம்பாள் கோயிலில் காலிடுக்கில் ஒரு லிங்கரூபம் கொண்டதாகத் தலைகீழாக இறங்கும் நிலையில் இருக்கின்றான். சாபம் தீரத் தவமிருந்த அவனது பக்திக்கு, மனமிரங்கிய மகேசன் சாப விமோசனம் பெற நாராயணனை வழிபடச் சொன்னார். அதன்படி மனித உருவம் பெற்ற சிற்பி, சிவன் அருளால் திருமாலின் மரகதக்கல்லால் அழகான சிலை செய்தான். அதன்பின் நாராயணனின் அருளையும் பெற்று, மீண்டும் ஸ்ரீ வல்லப மன்னரிடம் ஆஸ்தானப் பிரதம ஸ்தபதி பதவி வகித்தான்.
மல்லப்ப நாயக்கர் கட்டிய லஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலில் இந்த மரகதச்சிலை உள்ளது. சிறந்தக் கட்டடக்கலையின் உயர்ந்த நுணுக்கங்களுடனும், ஒரு சுற்று பிரகாரமும் கொண்ட இக்கோயிலில் திருமகளை மடியில் அமர்த்திய திருமாலின் அருள் வெள்ளம் அனைத்துப் பக்தர்களையும் அரவணைக்கிறது. இக்கோயிலுக்கும் சிவன் கோயிலுக்கும் ஒரே நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அழகிய கிராமத்தில் நாராயண தீர்த்தம், அக்னி தீர்த்தம், பித்ரு தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும் உள்ளன.
இரண்டு திருக்கோயில்களிலுமே ஆண்டுதோறும் மாதந்தோறும் நடக்கவேண்டிய உத்ஸவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பில்லி, சூனியம், குஷ்டம், தீராத நோய் போன்றவை தீரவும், வீடுகளில் உள்ள தோஷங்கள் நீங்கவும், குழந்தைப் பாக்கியம் பெறவும் பக்தர்கள் வழிபாடுகள் செய்கின்றனர். வியாபார அபிவிருத்திக்காகவும், சகல ஐஸ்வர்யங்கள் பெறவும் பிரார்த்தனை நடைபெறுகிறது. குலதெய்வம் எதுவெனத் தெரியாத குடும்பத்தினரும் அந்தக் குறை தீர இங்கு பூஜை செய்கின்றனர். இந்த கோயிலில் தம்பதி சகிதமாக நவகிரகங்கள் உள்ளனர்.
ஒற்றைப் பல்லி வழிபாடும், காஞ்சிபுரத்து இரட்டைப் பல்லி வழிபாட்டைப் போன்ற சிறப்பு பெற்றுள்ளது. பல்லியைத் தொட்டு வணங்கும்போது நான்கு வகை திருஷ்டிகளும் மறைகின்றன. பரிபூரணம், பூரணம், பூர்ணிமா, பூரணலிங்கம் போன்ற பெயர்கள் வழங்கினால், அவர்களின் பூர்வீகம் முன்னீர் பள்ளமாகதான் விளங்கும். இந்த ஆலயத்தில் சித்திரை விசு திருவிழாவும், வைகாசியில் சூரசம்காரமும், ஆனி மாதம் அனுச நட்சத்திரத்தில் வருஷாபிசேகமும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி பூரத்தின் போது மனோன்மணியம் அம்மைக்கு வளைகாப்பு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இந்த வேளையில் ஊர் மக்கள் அனைவரும் வளையல்கள் வேண்டுதலோடு வந்து குவியும், மறு வருடம் வேண்டுதல் நிறைவேறி நன்றி செலுத்த வரும் பக்தர்கள் கூட்டம் மிகுதியாகக் காணப்படுகிறது.
புரட்டாசி மாதம் நவராத்திரி கொலுவில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மிளிருவாள். ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா நடைபெறும். கார்த்திகை மாதம் திங்கள் கிழமை தோறும் கட்டளையார் சார்பில் சோமவரம் நடத்துவார்கள். திருக்கார்த்திகையில் 1008 தீபம் ஏற்றப்படும். மார்கழி மாதம் திருவாதிரை பண்டிகை சிறப்பாக நடைபெறும். மாசிமாத சிவராத்திரி பூஜையும், பங்குனி மாதம் குலதெய்வ வழிபாடும் மிகச்சிறப்பாக நடைபெறும்.அம்பாளுடன் இணைந்த பரிபூர்ண கிருபேஸ்வரர் தரிசனம் பெற்று ஆனந்தம் அடைவோம். இந்தக் கோயிலில் நடை காலை 6 மணிமுதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.
இந்தக் கோயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் முன்னீர் பள்ளம் உள்ளது. நெல்லை புது பஸ் நிலையத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 10 வது கிலோ மீட்டரில் முன்னீர்பள்ளம் சிவன் கோயில் உள்ளது ஆட்டோ வசதியும் உண்டு.
(நதி வற்றாமல் ஓடும்)