
தாமிரபரணி என்றாலேச சுலோச்சன முதலியார் பாலத்தினை நினைவு கூறாதவர்கள் யாரும் இருகக முடியாது. அந்த அளவுககு அதன் வரலாறு மிகச்சிறப்பானதாகும். நெல்லை&பாளையங்கோட்டையை இணைக்கும் ஒரு முக்கிய பாலம் உருவான வரலாறு என பல்வேறு எழுத்தாளர்களும் இந்த பாலத்தினை பதிவு செய்யாமல் இருக்க மாட்டார்கள். ஆகவே நாமும் அந்த பதிவை பதிவிடாமல் சென்றால் குறையாகி விடும்.
குகன் அய்யா எழுதிய பெரும்புள்ளி என்னும் புத்தகத்தில் இந்த பாலத்தினை விளாவாரியாக பதிவிட்டுஇருப்பார்.
1840 மார்ச் மாதம் 10ஆம் தேதி இரவு, திருநெல்வேலி கலெக்டராக ணி.றி.தாம்சன் பொறுப்பேற்று ஐந்து நாட்கள் ஆயிற்று. படுக்கை அறையில் தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களாகவே தாமிரபரணி படகு துறையில் நடந்த சம்பவங்கள் அவருக்கு மிகவும் வேதனை கொடுத்திருக்க வேண்டும்.
திருநெல்வேலி&பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை பிரிக்கும் தாமிரபரணி ஆற்றில் அப்போதெல்லாம் வருஷம் முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். காடுகள் எதுவும் அழிக்கப்படாத காலம் அது. ஏப்ரல், மே மாதம் தவிர கொட்டோ கொட்டு என்று மழை பெய்கிற காலம். பாபநாசம் போன்ற இடங்களில் அணைக்கட்டுகள் கிடையாது. பிறகு கேட்கவா வேண்டும் வெள்ளப்பெருக்கு தான்.
ஆற்றைக்கடப்பது மிகவும் கடினம், இந்த இடத்தில் தாமிரபரணி 800 அடி அகலமாக இருந்தது. வியாபார பொருட்களை கொண்டு வருவது படகு மூலமாகவே நடைபெற்று வந்தன. ஆற்றங்கரையில் அமைந்த படகுத்துறையில் எப்போதுமே ஆண்களும், பெண்களும், வியாபாரிகளும் மொய்த்துக் கொண்டிருப்பது வழக்கம். கரையில் பல மணி நேரம் காத்திருந்தால் படகு கிடைக்கும். அதிலும் பத்து பேர் கொண்ட ஒரு குடும்பம்தான் போக வேண்டும் என்றால், அவர்கள் ஒரே படகில் ஏறி விட முடியாது. எல்லோருக்கும் ஒரே படகில் இடம் கிடைக்காது. முன்னால் இடம் கிடைத்தவர்கள் அக்கரைக்கு போய் மற்றவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் குழந்தைக் குட்டிகளோடு படகில் ஏறிச் செல்வது ஒரு சோதனை மிகுந்த காட்சி.
இந்த லட்சணத்தில் படகுத்துறையில் முந்தி இடம் பெற லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சர்வசாதரணமாகவே நடந்தது. தட்டுமுட்டு சாமான்களோடு வருபவர்களின் பொருட்கள் களவாடப்படுவதும் சமூகவிரோதிகள் ஆங்காங்கே குழப்பத்தை உண்டாக்குவதும், திடீர் என்று சாதிச்சண்டை தோன்றுவதும் அப்போதே நடைபெற்று வந்தன.
இப்படியாக திருநெல்வேலி ஜில்லா போர்டின் கட்டுப்பாட்டில் செயல் பட்டு வந்த இப்படகு துறைகளில் ஒவ்வொரு நாளும், பொழுதும் விடிந்து, பொழுது போவது என்பது ஒரு யுகமாகவே கருதப்பட்டது. 19&ம் நூற்றாண்டில் இடைப்பகுதி வரை படகுத்துறையில் நடந்த குழப்பங்களை பற்றி அப்போது ஆட்சி செய்த வெள்ளையக்காரர்களே வேதனையோடு எழுதியிருக்கிறார்கள்.
படகுத்துறை என்றால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும் என்பது கலெக்டருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அன்று மார்ச் 10 ம் நாள் படகுத்துறையில் சாதிக்கலவரம் உச்சகட்டத்தை அடைந்து நாலைந்து கொலைகள் கூட விழுந்து விட்டன. அன்று வரை இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தது கிடையாது. எனவே தான் தாம்சன் தூக்கம் வராமல் நிம்மதியற்று புரண்டு கொண்டிருக்கிறார்.
தாமிரபரணியின் குறுக்கே ஒரு பாலம் கட்டியிருந்தால் இப்படி படகுத்துறையை நம்பியிருக்க வேண்டியதில்லையே! அந்த ஜில்லாவின் வடக்கும், தெற்கும் தாமிரபரணியால் பிளவுபட்டு தொடர்பற்று இருக்கின்றதே. இதனால் வியாபாரம், கல்வி, கலாச்சாரம் இவை அனைத்தும் முடக்கப்பட்டு கிடக்கின்றதே, என்று சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த கலெக்டர் எப்போது தூங்கினார் என்று அவருக்கே தெரியவில்லை.
மறுநாள் காலை எழுந்திருக்கும் போது காலை ஏழு மணி ஆகிவிட்டது. தாமிரபரணி பாலத்தை பற்றி தனக்கு முந்தி கலெக்டராக இருந்த ஆர்.ஈடன் என்பவர் 1836ல் எழுதி வைத்த குறிப்பை படித்துப் பார்க்கிறார். திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆகிய இரு நகரங்களை இணைக்க வேண்டும். இதற்காக தாமிரபரணி ஆற்றில் 800 அடி நீளத்தில் ஒரு பாலம் கட்ட வேண்டும். இதற்கு அவசரமும், அவசியமும் கூட. இதன் மூலம் குழப்பமும், வன்முறையும அகலும். திருநெல்வேலி ஜில்லா எல்லா நிலைகளிலும் வளர்ந்து செழிக்கும். என்று எழுதியிருந்ததை மீண்டும் படித்து பார்த்தார்.
எப்படியும் இப்பெரும்பணியை தன் காலத்தில் முடித்துவிட வேண்டும். என்ற முடிவுக்கு வந்தவராய் தனது தனி அலுவலரை அழைத்து உயர் அதிகாரிகளின் கூட்டத்தை அன்று மதியம் கூட்டும்படி ஆணையிடுகிறார் கலெக்டர்.
கூட்டத்திற்கு பல ஆங்கிலேய அதிகாரிகள், பாலங்களுக்கு வரைபடம் தயாரிக்கும் புகழ்பெற்ற கேப்டன் பேபெர் தொழில் நுட்ப வல்லுநர் இஞ்சினியர் கேப்டன் டபிள்யூ.எச்.ஹார்ஸ்லி ஆகியோர் வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தராக வேலை பார்த்துக் கொண்டிருந்த சுலோச்சன முதலியாரும் அழைக்கப் பட்டிருந்தார்.
தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் திருநெல்வேலியையும் பாளையங் கோட்டையையும் இணைத்து பாலம் கட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறினார். உடனடியாக அந்த வேலையைத் தொடங்க வேண்டும் என்று வற்புறுத்தி வரைபடம் தயாரிக்கும் பொறுப்பை கேப்டன் பேபெரிடம் ஒப்படைக்கிறார். அவரும் இதை ஒரு புனித பணியாக நினைத்து இரவு பகலாக உழைத்து அழகான வரைபடம் ஒன்றை தயாரித்துக் கொடுத்தார். அது லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தை ஒத்திருக்க மகிழ்ந்து அதற்கு ஒப்புதல் தருகிறார்.
வரைபடத்தில் பாலத்தின் அடிமட்ட நீளம் 760 அடியாகவும், அகலம் 21 1/2 அடியாகவும், 11 ஆர்ச்சிகளோடு, ஒவ்வொரு ஆர்ச்சின் விட்டமும் 60 அடியாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு ஆர்ச்சையும் தாங்குகின்ற இரட்டைத் தூண்கள் ரோமானிய அரண்மனை தூண்களை நினைவுபடுத்தின. அதை கட்டி முடிக்க அரைலட்சத்திற்கு சற்று அதிகமாகவே ஆகும் என்று கேப்டன் பேபெர் சொல்லக் கலெக்டர் உட்பட அனைவரும் மலைத்து போகின்றனர். ஏன் என்றால் அன்றைய அரை லட்சம் இன்றைய மதிப்பீட்டில் இருபத்து ஐந்து கோடி ரூபாய்.
பணத்துக்கு எங்கே போவது? அன்றைய அரசிடம் பணம் இல்லை. மக்களிடம் வசூல் செய்து தான் இந்த பாலப்பணியை முடிக்க வேண்டும். என்று தீர்மானம் செய்த கலெக்டர் தன்னிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோச்சனா முதலியாரின் முகத்தை பார்க்கிறார். சுலோச்சன முதலியார் தென்மாவட்டங்களிலேயே மிகப்பெரிய செல்வந்தர். கௌரவமாக உத்தியோகம் பார்ப்பவர். அந்த காலத்தில் குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்கு சமமாக அலுவலகத்துக்கு வருபவர். நீளமான அல்பேகா கறுப்பு கோட்டு, தலையில் ஜரிகை தலைப்பாவும், கழுத்தை சுற்றி அங்கவஸ்திரமும், காதில் வைரக்கடுக்கனும் அணிந்து அவர் அலுவலகத்துக்கு வரும் அழகே தனி அழகாம்.
இவர் வீட்டில் பாளம் பாளமாக தங்கக்கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமாம். அவ்வளவு பெரிய கோடீஸ்வரர். 18ஆம் நூற்றாண்டில் தொண்டைமண்டலத்திலுள்ள திருமணம் என்னும் ஊரிலிருந்து திருநெல்வேலியில் வந்து குடியேறியவர்கள் இவரது முன்னோர்கள். எனவே இவரை திருமணம் சுலோச்சன முதலியார் என்றே மக்கள் அழைப்பார்கள்.
கலெக்டர் தன்னை கூர்ந்து பார்க்கிறார் என்றவுடன், முதலியார் எழுந்து அவரை வணங்க “மிஸ்டர் முதலியார் திருநெல்வேலி மக்களிடம் வசூலிக்கப் போக வேண்டும். உங்களுக்கு தெரிந்த பணக்காரர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். பாலம் அமைக்க அவர்களின் உதவி நம் அரசுக்கு தேவை. நாளைக் காலை நாம் வசூலுக்கு போகிறோம்”, என்று கலெக்டர் அன்புடன் கட்டளையிடுகிறார்.
முதலியாருக்கு இது ஒரு தர்மச்சங்கடமான நிலையாகும். “இந்த பாலத்திருப் பணியை எப்படி தொடங்கி முடிப்பது? யாரிடம் சென்று பணம் கேட்பது? கேட்டால் தருவார்களா?” என்ற சிந்தனையோடு கோச் வண்டியில் ஏறி வீடு திரும்புகிறார்.
வீடு வந்த முதலியார் அன்று நடந்த செய்தியை மனைவி வடிவம்பாளிடம் சொல்கிறார். “சரி! நிம்மதியாக படுத்து உறங்குங்கள். காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று வடிவம்பாள் கூறுகிறார்.
தூக்கம் வந்தால் தானே, முதலியாருக்கு என்னவெல்லாமோ நினைவுகள். நாளைக் காலை கலெக்டரையும் அழைத்துக்கொண்டு தெருத்தெருவாக வசூல் செய்ய வேண்டும். தானே ஒரு கோடீஸ்வரராக இருக்கும் போது யாரிடம் சென்று பணம் கேட்பது? அப்படியே கொடுத்தாலும் ஐஞ்சும், பத்தும் தானே கொடுப்பார்கள். இது வந்து எங்கே நிறைய போகிறது. கலெக்டரோ தன்னை மலை போல் நம்பியிருக்கிறாரே, என நினைக்கும் போது தன் தந்தை காலஞ்சென்ற இராமலிங்க முதலியாரின் ஞாபகம் அவருக்கு வருகிறது.
கட்டபொம்மன் புகழ் மேஜர் பானர்மெனிடம் மொழிப்பெயர்ப்பாளராக இருந்தவர். கட்டபொம்மனை தூக்கில் போடுவதற்கு முன்னால் 1799&ல் கயத்தாறு சத்திரத்தில் பானர்மென் தலைமையில் நடந்த விசாரணை அதில் தன் தந்தை சொன்ன முதல் சாட்சியம். அதன் பின் திருவாங்கூர் கொச்சி சமஸ்தான ரெசிடெண்டாக இருந்த கர்னல் மெக்காலே தம் தந்தையின் திறமையை அறிந்து ஏஜெண்டாக நியமித்து திருவனந்தபுரத்துக்கு அழைத்துக்கொண்டது. கருணாகடாட்சத்தில் செல்வம் குவிந்த நிலை. இதன் காரணமாக செல்வச் சீமான் ஒருவரின் மகள் தன் மனைவியாக வாய்த்தது. இவை அனைத்தையுமே நினைத்துப் பார்க்கிறார்.
தன்னுடைய ஒரே மகன் வேதாத்திரிதாச முதலியார் கோடீஸ்வர குடும்பத்தில் கல்யாணம் செய்து தற்போது புகழ்பெற்ற வக்கீலாக திருவனந்தபுரத்தில் இருப்பது இவை அனைத்தும் நிழல்படம் போல அவர் நினைவுக்கு வருகின்றது. வக்கீல் வேதாத்திரிதாச முதலியார் திருவாங்கூர் சமஸதானத்தில் உயர்நீதிமன்ற 3&வது நீதிபதியாக இருந்து 1903ல் தமது 93&வது வயதில் காலமானார். இதுபோன்று அவரது குடும்ப பெருமையை கூறிக்கொண்டே செல்லலாம்.
சுலோசன முதலியார் நினைத்து பார்க்கிறார். தன்னுடைய செல்வம் முழுவதும் என்னுடைய தந்தை சம்பாத்தியம் செய்தது. அதுவும் ஒருவருக்கொருவர் மொழி தெரியாத வெள்ளைக்காரர்களுக்கும் பாளையக்காரர்களுக்கும் மொழிப்பாலமாக இருந்து சம்பாத்தியம் செய்தது. எனவே மொழிப்பாலத்தில் பெற்ற செல்வம் அனைத்தையும் ஆற்றுப்பாலத்தில் போடுவேன். நானே பாலம் கட்டும் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வேன். என்று தீர்மானம் செய்து கொண்டு மனைவியை எழுப்பி தன் முடிவைச் சொல்ல கணவன் இப்படித்தான் முடிவு செய்வார் என்பது எதிர்பார்த்திருந்த வடிவாம்பாள் அம்மையார் அகமகிழ்ந்து போகிறார்.
“வடிவு! நாம் முடிவு செய்த படியே இப்பமே கலெக்டரிடம் போறேன். நம்ம செலவிலேயே பாலத்தை கட்டிடலாம்னு சொல்லிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு முதலியார் புறப்படுவதற்கு ஆயத்தம் செய்தார். இந்த சமயத்தில் வடிவு அம்மையார் ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் தன்னுடைய நகையையும், கொஞ்சம் பணத்தையும் வைத்து, “இதை கொண்டு போய் பாலம் கட்ட நமது அச்சாரக் காணிக்கை என்று சொல்லி கொடுத்துவிட்டு வாருங்கள்” என்று சொன்னார்.
எல்லையற்ற மகிழ்ச்சியுடன் பரவசப்பட்டு போன முதலிலயார் கலெக்டரை பார்த்து தன் எண்ணத்தை சொல்லி தாம்பாளத்தை அவர் முன் சமர்ப்பித்தார். இன்ப அதிர்ச்சியால் பரவசப்பட்டு திக்குமுக்காடிப் போன கலெக்டர் மரபுகளையெல்லாம் மீறி முதலியாரை அப்படியே ஆவிசேர்த்து ஆலிங்கனம் செய்து பேச வார்த்தை வராமல் தவிக்கின்றார்.
பாலத்திருப்பணிக்கு கிடைத்த தனிமனிதர் நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்கச் செய்கிறது. கலெக்டருக்கு புதுவேகம் பிறக்கின்றது. மளமளவென்று பால வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டார்.
தொடர்ந்து பாலத்துக்கு மேலும் ஒரு சோதனை ஏற்பட்டது.
(பொருநை ரகசியத்தினை தேடி )