
முன்கதை சுருக்கம்
சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி திருமணம் செய்தது என்கிறார் வாசு. உண்மையை புரிந்து கொள்ள சந்திரன் தனது பூர்வீகத்தினை தேடுகிறான். அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கிடையில் பனையில் இருந்து விழுந்து இறந்த லிங்க நாடாருக்கு ஏதாவது அரசு மூலம் நிதி உதவி கிடைக்குமா? என எதிர்பார்த்து வரதன் என்பவரை பார்க்க வந்தான். அவர் இறந்து விடவே அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் தவிக்கிறான். இதற்கிடையில் முத்துகிளி தனது அப்பா ரத்தினத்தினை நெஞ்சுவலி என 108ல் பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறாள். அப்போது சந்திரன் ரத்தினத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறான். அதோடு மட்டுமல்லாமல் அவன் ஒரு பாட்டிக்கு உதவி செய்கிறான். அந்த பாட்டியும் இறந்து விடுகிறார். இதற்கிடையில் சந்திரனின் பூர்வீக கதையை ஆசிரியர் அகஸ்தீஸ்வரன் அவனுக்கு சொல்ல ஆரம்பிக்கிறார். ஆர்வத்துடன் கேட்கிறான் சந்திரன்.
இனி.
51. திருநாமத்தினை விட்டுக்கொடுக்க மாட்டேன்
கள்ளவாண்டசுவாமி கோயிலில் நையாண்டி மேளம் கொட்டி பிடிமண்ணை எடுத்துக்கொண்டு செல்ல அந்த மக்கள் தயாரானார்கள்.
ராஜதுரை நாடார் ஓடியே வந்தார்.
அவர்களின் குறுக்கே வந்து அனைவரையும் மறைந்து நின்றார்.
“எங்க வந்து யாரு சாமியை கொண்டு போறீய. விடமாட்டேன்” என்று கர்ஜித்தப்படியே நின்றார்.
தீடீரென்று எதிரே ஆள் வரும் என எதிர்பார்க்காத அந்த மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.
“எங்களை கிச்சான் ஐயர்தான் எடுக்க சொன்னார்”. என்று அந்த மக்களின் தலைவன் குடும்பன் சொன்னார்.
“எவரு சொன்னா என்ன. இது எங்க சாமி. எங்க குலதெய்வம். கள்ளவாண்ட சாமி. இந்த சாமியை எங்க உயிர் போனாலும் யாரும் கொண்டு போவ விடமாட்டோம்”.
ராஜதுரை யாரையும் விடுவதாக இல்லை. அதற்குள் மொத்த பனையேறி கூட்டமும் அங்கு வந்து சேர்ந்தது. அடுத்த கட்டம் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் அந்த மக்கள் தவித்தனர்.
இந்த சமயத்தில் அந்த இடத்துக்கு 5 க்-கு மேற்பட்ட பிரமாணர்கள் வந்தனர்.
அதில் சிவராமன் அய்யர் தான் பேசினார்.
“என்னவோய், என்ன கோயிலு உங்க சாதிக்குன்னு பட்டாவா போட்டு வச்சிருக்கு. சாமி எல்லாருக்கும் சொந்தம். அவனுவ பிடிமண் எடுத்த எடுக்கட்டும். எவனும் பேச கூடாது வோய்” என்றார்.
எல்லோரும் அமைதியாகி விட்டனர்.
காரணம் சிவரமான் அய்யருக்கு சொந்தமான வயல்காடுகளும் பனைகாடுகளும் நிறைய உண்டு. அதையெல்லாம் கட்டுகுத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள்.
அய்யன் விளை, அய்யன் பத்து, குருவ குலையான் பத்து, புதுப்பத்து எல்லாமே அவருடைய காடுத்தான். பனையேறும் இடங்களில் பலதுர பனை மரங்கள் அவருக்கு சொந்தம் தான். பாட்டம் என்ற முறையில் அவருக்கு பணம் கட்டித்தான் தொழில் செய்கிறார்கள்.
எல்லா நாடாரும் அவர்கிட்டத்தான் 100 பனை 200 பனை என்று குத்தகைக்கு எடுத்து பனைத்தொழில் செய்து வருகிறார். அவரை எதிர்த்து நின்றால் அவ்வளவு தான் நாளைக்கு பொழைப்பு எல்லாம் போய் விடும். எனவே அமைதியாகி விட்டார்கள்.
ஆனால் ராஜதுரைக்கு கோவம் வந்தது. “சாமி இது உங்களுக்கு அவசியமில்லாதது. எங்க சாமி. அந்த சாமியை எப்படி பிடிமண் எடுத்து கொண்டு போவ விடுவோம்”.
“அதை தாண்டே அம்மி கேட்கேன். உங்க சாதிக்கு பட்டாவ போட்டு வச்சிருக்கு” சிவராமன் அய்யர் கோபமாக கேட்டார்.
“ஆமாம் சாமி பட்டாத்தான் போட்டு வச்சிருக்கு. எங்க இடத்தில சாமி இருக்கு. நாங்க வரி பிரிக்கோம். நாங்க கொடை கொடுக்கோம். எங்க மக்கத்தான் சாமி கொண்டாடியா இருக்காவ. அப்படின்னா எங்க சாமி தானே”.
ராஜதுரை பட் என்று சொன்னவுடன் சிவராமன் அய்யருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“அம்பி. எங்க நிலத்திலதான் பயிர் செய்கீறிங்க. பனை ஏறுதீங்க. இனிமே அது எங்க எடம் . ஒருபயலும் உள்ளே போக கூடாது”.
ஊர் நட்டாம்மை ராமசாமிநாடார் வந்தார். ” ஏலே ராஜ துரை நீ. சும்மா கிடக்க மாட்டே. சாமிக்கிட்டே போய் பேசிக்கிட்டு. அவிய நம்மளுக்கு பொழைப்பை கொடுக்கவிய அவிய சொல்லுத மாறி கேப்போம் டே” என்றார்.
சிவராமன் அய்யர். பூ நூலை கையில் எடுத்து திருக்கி விட்டுக்கொண்டார். அருகில் இருந்த அய்யரிடம் கண் அடித்து அழகு காட்டினார். “பயலுவ ஒரு அதட்டு அடங்கிட்டானுவ”
அதை பார்த்த ராஜ துரைக்கு கோபம் வந்தது.
“தாத்தா சும்மா இரும்வோய். நம்மள கண் அடிச்சி அழவம் காட்டுதாரு இந்த அய்யரு. இவிய சாமி வெங்கடாசலபதி இருக்காவ. கருங்குளம் மலைமேலே. நம்மள கோயிலுக்குள்ள நுழைய விடுதாவளா. சப்பரத்தை சித்ரா பௌர்ணமி தோ-றும் மலையை விட்டு இறக்குதாவல. அதை நம்மள தொட விடுதாவுளா? அது ஏன் இவிய தெருவுக்குள்ள நம்மள விடுதாவளா. நம்மள அசிங்க பிடிச்சவியன்னு இந்த அய்யர்மாருவ நம்மளை கழிச்சு வச்சிடுக்கவ. எல்லா சாதிக்காரங்களும் தொட்டத்தான் தீட்டு. நம்மள் பார்த்தாலே தீட்டுன்னு சொல்லுவதா. நம்ம கோயிலை பத்தி பேச இவிய யாரு தாத்தா”.
ராஜதுரை ஓங்கி போட்ட சத்தம் அனைவருக்கும் நியாயமாக பட்டது.
“ஏலேய். பொழைப்புல மண்ணள்ளி போட்டுருவாருடே சாமி. பனை ஏறி பொழைப்பு நடத்துறோம். சாமி இடத்திலத்தான பனை இருக்கு. நம்மள ஏற விட மாட்டாருடே”. நாட்டாமை மெதுவாக ராஜதுரை காதில் பேசினார். ஆனால் ராஜதுரை வெளிப்படையாகவே பேசினார்.
“தாத்தா. நம்ம உடலை மூலதனமா வச்சி செய்யற தொழில் இது. எந்த களவாணி பயலும் இப்படி உடம்பை வருத்தி மரம் ஏறமாட்டானுவ. வேணுமுன்னா அய்யர் மாருவ பனை மரத்தை அவியளே வச்சிட்டு போவட்டும். மார்பை தொறந்து போட்டு பூனூல் போட்டுட்டு அலையிறாவியளா. அந்த மார்பை ஒரு நாளு இந்த பனை மரத்தில வைச்சி தேச்சிக்கிட்டு ஏறி பாக்கட்டும். அப்புறம் தெரியும்”.
“யாராவோய் பனை ஏற சொல்லுத? நாங்க யாரு தெரியுமா?” பக்கத்தில் நின்ற அய்யர் குதித்தார்.
“சும்மா இரும் சாமி. பொறவு உம்மை பனையில ஏத்தி உட்டுருவேன்”
அவர் அப்படியே அமைதியாகிவிட்டார்.
“தாத்தா அவிய சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டக்கூடாது. நம்ம சாமியை நாம விட்டு த்தரக்கூடாது”என்று கூறி விட்டு பிடிமண் எடுத்த குடும்பனிடம் சென்றான் ராஜ துரை.
“இங்க பாருங்க குடும்பன் அய்யா நாம தாயா பிள்ளையா பழகிட்டு இருக்கோம். இவிய நம்மளை எப்போதுமே பிரிச்சி வச்சி வேடிக்கை பாக்கிறவிய. உங்களை என்னைக்காவது சாமி கும்பிடக்கூடாதுன்னு நாங்க தடுக்காவ செய்றோம். வருசம் வருசம் முருகேசன் குடும்பன் வேட்டை பானை போடுறாவிய. எங்களோட எங்களா ஒரு பானையை பக்கத்தில வச்சித்தானே நாங்க தீ போட வுடுதோம். எங்க பானைக்கு நீங்க தீ போடுதீய. உங்க பானைக்கு நாங்க தீ போடுதோம். நம்ம என்னைக்கு சாமியை பிரிச்சி பாத்தோம். நம்ம இரண்டு சாதியும் என்னைக்கு பிரிஞ்சி நின்னுச்சி. இந்த அய்யர் பேச்சை கேட்டுட்டு இப்படி வந்து பிடிமண் எடுக்கீயளே. உங்களுக்கே நியாயமா இருக்கா?”.
குடும்பன் அமைதியானர். “உண்மைதானே இரண்டு சாதி காரர்களும் தாயா பிள்ளையாத்தான் பழகி இருக்காங்க. இது வரைக்கு இந்த பிரமாணவர் கும்பிடுற அம்மன் கோயிலுக்குள்ள இந்த இரண்டு சாதியும் நுழைய கூடாதுன்னு எழுதப்படாத சத்தம் போட்டு இருக்காவ. இன்னைய வரைக்கும் இரண்டு சாதி மக்களும் அம்மன் கோயிலுக்குள்ள நுழையிறது கிடையாதே. அப்படி இருக்கும் போது நாம ஏன் அய்யர் சொல்லை கேட்கணும்”.
குடும்பன் யோசித்தார், “சாமி இப்படி சண்டை போட்டு எங்களுக்கு சாமி வேண்டாம். நாங்க இங்க வந்தே கும்பிட்டுகிடுதோம்”.
“ஏய் சும்மா இருக்க மாட்டே. நீ. உழவு பாக்கிற வயலை பூராவூம் உன் கிட்டே இருந்து புடுங்கி விடுவேன். ஜாக்கிரதை”. அய்யர் கத்தினார்.
என்னடா இது அடி வயிற்றில கை வைக்கிறாரு. நமக்கு எதுக்கு வம்பு. யோசித்தார் குடும்பன். “அப்டின்னா இந்த அய்யா மாருக்கிட்டே இருந்து எங்களை காப்பாத்தி விடுங்க. நாங்க பிடிமண்ணை எடுத்துட்டு எங்க ஊருக்கு போறோம்”.
சிவராமன் அய்யர் கோபமாக சத்தம் போட்டார்.
“நீ. போ எவ தடுக்காணுன்னு பாப்போம்”.
“ஏய் அந்த காவல் காரனுவள வேல்கம்பு அரிவாளோட வர சொல்லியிருந்தேனே அவனுவள எங்க”.
“இங்கதான் இருக்கோம் சாமி” காவலாளிகள் வந்தனர். சுமார் 15 பேர் இருக்கும். முறுக்கிய மீசையுடன் உருட்டிய கண்களுடன் இருந்தார்கள். தொப்பை வயிறு. வேஷ்டிக்கு மேலே பச்சை பெல்ட் போட்டு கட்டியிருந்தார்கள். தார் பாய்ச்சு. அடிதடிக்கு சரியாக வந்து இருந்தார்கள். பட்டை சாராயம் குடித்திருப்பார்கள் போல நெடி அடித்தது.
அவர்கள் வேல்கம்பு அரிவாளுடன் பிடிமண் எடுத்து நின்றவரை சுற்றி நின்றனர்.
அவரை அப்படியே ரவுண்ட் கட்டி கூட்டிச்செல்ல முயற்சித்தனர்.
ராஜ துரை பயப்படவில்லை.
“பராவாயில்லை. எங்க சாமியை நீங்க எடுத்துட்டு போறீய. என்னை வெட்டி போட்டுட்டு எடுத்துட்டு போங்க. எங்க சாமி மனிச ரத்தத்தை கோக்குதுன்னு நினைக்கேன். அதை என் உடம்புல இருந்து கொட்டிட்டு நீங்க சாமியை கொண்டு போங்க”.
அந்த கூட்டம் முன்பு போய் படுத்துக்கொண்டான் ராஜதுரை.
அனைவரும் ஸ்தபித்து போய் நின்று விட்டார்கள்.
அவரை தாண்டி யாருக்கு போக தைரியமில்லை.
குடும்பன் யோசித்தார். அவரோடு முக்கிய புள்ளிகள் ஆலோசனை நடத்தினர். “மச்சான் நமக்கு இந்த சாமியோட பிடிமண் வேணுமுன்னு ஆசைப்பட்டோம். அதுக்காக கலவரம் பண்ணி, ரத்தம் சித்தி கொண்டு போவ வேண்டாம். நாடக்கமாரு என்னைக்கு நம்மள சாமி கூம்பிடக்கூடாதுன்னு சொன்னாவ. அவுக சொன்ன மாறி நாமா தாயா பிள்ளையாத்தான் இருக்கோம். எதுக்கு வம்பு போயிருவோம்”. என்றனர்.
குடும்பன் சிவராமன் அய்யரிடம் வந்தார்.
“சாமி தப்பா நினைச்சிகிடாதீய. நாங்க இப்படி நடக்குமுன்னு நினைக்கல. நாடக்கமாருக்கிட்டே பேசி பிடிமண் எடுத்தாலும் விட்டு இருப்பாவ. எனக்கு நல்லா தெரியும். அவுகளுக்கு இலகிய மனம் தான். ஆனால் நீங்க வீராப்பை காட்டி எழவை இழுத்திட்டீய. இப்போ எங்களை இடியாப்ப சிக்கலில சிக்க வைச்சிட்டீயளே”.
சிவராமன் அய்யரின் கண் சிவப்பானது. உதடுகள் துடித்தது. கோபத்தில் பூணுலை மேலும் கீழுமாக ஆட்டினார்.
காவல் காரர்களை பார்த்தார். “இந்த சாணப்பயலை அள்ளி ஆத்தில போடுங்க”.
அனைவரும் கையில் உள்ள வேலகம்புகளை எடுத்துக்கொண்டு ராஜதுரையை தாக்க வந்தனர். அப்போது அருகில் நின்ற லிங்க நாடாரின் முருக்குதடியை பிடிக்கினார் ராஜதுரை. அடுத்த நிமிடம் சிலம்பு கோல முருக்கு தடியை சுற்றி தாயாராகினார்.
“ஏலே எவனாவது ஆம்பிள்ளைன்னா எங்கிட்ட வாங்களே” என்றபடி முருக்கு தடியை சுற்றினார். அதை சுற்றிய வேகம் காற்றில் இறைச்சலை கொடுத்தது. அந்த சத்தம் கூ இருட்டில் அனைவர் மனதில் பயத்தினை ஏற்படுத்தியது.
ராஜலிங்கத்தினை எல்லோரும் அதிசயமாக பார்த்தனர்.
“ஏடே இந்த ராஜ லிங்கம் நாகர்கோயிலு பக்கம் கொஞ்ச நாளு இருந்தாமுல்லா. அப்போ சாமியார் மடம் கருத்தான் ஆசான் கிட்ட களரி படுச்சான்டே. அவரு அரண்மனன யில ராஜ வைத்தியம் பாக்கிற வைத்தியரு. பொறவு விடுவானா. ஏடே இப்போ அவன் மேலே எவன் கல் எறிஞ்சாலும், வென்னியை ஊத்தினாலும், வேல்கம்பு கொண்டு குத்தினாலும் ஒன்னும் செய்ய முடியாது” உலக்க நாடார் சத்தமாக சொன்னார்.
காவல்காரர்கள் அப்படியே அதிர்ந்து விட்டனர்.
குடும்பனுக்கு என்ன செய்வது என்று தர்மசங்கமாகிவிட்டது. அதற்குள் பனையேறி ஒரு நிலைக்கு வந்தனர். அத்தனை தலைகட்டுகளும் “என்ன நடந்தாலும் சரி. நமக்கு சாமி தான் முக்கியம்” என அனைவரையும் மறித்தபடி வரிசையாக உட்கார்ந்து விட்டனர்.
சிவராமன் அய்யரால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே கோபமாக கிளம்பினார். அவர் பின்னாலே காவல் காரர்களும் கிளம்பி விட்டனர். அவரோடு வந்த எல்லா அய்யரும் அங்கிருந்து கிளம்ப நட்ட நடு வீதியில் குடும்பன் மற்றும் குடும்பத்தார் நின்றனர்.
ராஜதுரை எழுந்தார். “குடும்பன் அய்யா நான் சொன்னா தப்பா நினைக்காதீங்க. உங்களை ஏவி விட்டாவளே இந்த அய்யர் மாரு. உங்க தெருவில பிணம் விழுந்தா நம்ம மெயின் ரோட்டு வழியா தூக்கிட்டு வர விடுதாவளா. மார்கழி மாதம் நடுவைநேரத்தில் நீங்க வயக்காட்டு வழியா பாடையை தூக்கிட்டு வாரீயளே. கொஞ்சம் யோசனை பண்ணி பாத்தியளா?”
அமைதியாக இருந்தனர்.
“அவிய கோயிலுக்கு நம்ம ரெண்டு சாதி மக்களும் போக கூடாது. தீட்டு. நாம ஒத்து போயிட்டமுன்னா நாளைக்கு அவியளுக்கு வேட்டு வச்சிருவோமுன்னு பயந்து போய் நம்மள பிரிக்க பாக்காவ. அதுக்குத்தான் இந்த ஆட்டம். அது தெரியமா நீங்க அவிய விரிச்ச வலையில விழுந்திட்டீயளே.”
குடும்பன் யோசித்தார்.
உலக்க நாடார் “குடும்பா எத்தனை தடவடே நம்ம ரெண்டு பேரும் பேசி இருக்கோம். இப்படி பிடிமண்ணு வேணுமுன்னு சொன்னா நாம பேசி ஒரு முடிவுக்கு வந்து இருக்கலாமே டே”.
குடும்பனுக்கு அவர்கள் பேசுவது எல்லாமே சரி என்றே பட்டது.
“வாஸ்தவம் தான் அய்யா. இந்த அய்யமாரு பேச்சை கேட்டு இளம் பயலுவ ஆர்வப்பட்டுட்டானுவ. நானும் அவசரப்பட்டுட்டேன். எங்களை தப்பா நினைக்காதீங்க அய்யா”.
நாட்டாமை யோசித்தார்.
“சரி. உங்களுக்கு எங்க சாமி பிடிமண்ணு வேணும். அப்படித்தானே”.
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.
“மொதலுல இந்த கள்ளவாண்ட சுவாமிக்கும் எங்க நாடார் இனத்துக்கு உள்ள ஒரு தொடர்பை சொல்றேன் கேட்டுக்காங்க”
நாட்டாமை நாடார் பேச ஆரம்பித்தார்.
“கள்ளவாண்ட சாமி சாதாரண சாமி இல்லை. அவிய ராமர் சாமிதான். வாலியை வதம் செய்ய ராமரை அனுமன் சுக்கிரிவனுக்கு சப்போட்டா கூட்டிட்டு வாராவ. வாலியை யாராலும் எதித்து நிக்க முடியாது. யார் நின்னாலும் அவிய பலம் வாலிக்கு போயிரும். அதனால ராமர் மறைஞ்சு இருந்து தான் வாலி தாக்குனாவ. அதனால வாலி சாகும் போது கள்ள ராமான்னு சொல்லி செத்து போயிட்டாரு. அதனால தான் நம்ம சாமியை கள்ள ஆண்வருன்னு கூப்பிட்டு பின்னால கள்ளவாண்ட சாமியா கும் பிடுதோம்”.
எல்லோரும் அந்த கதையை கேட்டு அமைதியானார்கள்.
“ஆனால் வாலியை கொன்ன பாவம் ராமருக்கு பிடிச்சிருச்சு. அனுமன் வழியில வந்தவியதான் நாங்க. அதனால தான் பனை தொழில் எங்களுக்கு கை வந்த கலையா மாறிட்டு. மனுசனே குரங்கில இருந்து தான் வந்தான்னு சொல்லுதவ. ஆனாலும் நாடார் இன மக்கள் தான் வானர பட்டாளம் வேலையை செய்துக்கிட்டு இருக்காங்க. பிற்காலத்தில நாடார் சமுதாய மக்கள் ராமர் வாலி நினைவா கள்ளவாண்ட சு£மியை உருவாக்குனாவ. இந்த கோயில மட்டும்தான் கழு மரம் இருக்கும். அண்ணா இருக்கு- பாத்தியளா. அது தான் கழு மரம். இது தான் வாலி நினைவா நடப்பட்ட மரம். வாலியை கொன்ன பாவத்துக்கு ராமர் கள்ளவாண்ட சாமியா இருந்து வேட்டை பானை போடுதாரு. அதான் உங்களுக்கு தெரியுமே. கோயில் கொடையில் முக்கிய நிகழ்ச்சியே இதுதான். 21 பானையில் சோற்றை கொதிக்க வைச்சி. அந்த கொதி நீரை தலையில ஊத்தி சாமி ஆடுவாவ. அதில அனுமன் சாமி ஆடுதவரு. இந்த பாவத்துக்கு காரணம் நான் தானே . நான் தானே வாலியை கொல்ல ராமரை கூட்டிட்டு வந்தேன்னு கள்ளவாண்ட சாமியாடுத கோமரத்தான் கொதிக்கு தண்ணீரை தலையில ஊத்துபோது தானும் கொண்டு போய் தலையை கொடுப்பாரு. இப்ப கூட கோயில் கொடையில அந்த சம்பவத்தை நீங்க பாக்கலாம்”.
நாட்டாமை அமைதியாக மூச்சி விட்டார்.
“அது எதுக்கு எங்க நாடார் சமுதாய மக்கள் தான் அனுமானா இருந்து ராமருக்கு உதவி இலங்கைக்கு போயி சீதா தேவியை காப்பாற்ற காரணமா இருந்தாவீய. அதனால ராமர் அனுமான் கிட்ட, நீ செஞ்ச உதவிக்கு அடுத்த அவதாரத்தில நான் உங்க வீட்டு குழந்தையா பொறப்பேன்னு சொன்னாரு. அது படித்தான் அய்யா வைகுண்டர் எங்க சமுதாயத்தில் அவதரிச்சாரு. இவரு ராம அவதாரத்தோட மறுபிறப்பு. அது மட்டுமா. முதல் முதலில சமூக சீர்திருத்த வாதி. எங்க மக்களுக்கு மட்டுமில்ல தாழ்ந்தப்பட்ட மக்க, ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உதவுனாவ. அப்படி எங்க இனத்தோட ஒன்றி போய் இருக்கிற கோயிலு குடும்பா இந்த கள்ளவாண்ட சுவாமி”
எல்லோரும் அமைதியாக இருந்தார்.
நாட்டாமை தொடர்ந்தார். “சரி.குடும்பா நமக்குள்ள என்ன இருக்கு நீ. நம்ம சாமி பிடி மண்ணை தான் எடுத்து இருக்க. சரி கொண்டு போ. எதுக்கும் எங்க சாமி கிட்ட ஒரு உத்தரவை கேட்டுறுவோம். அடிடா மேளத்தை” என்றார்.
தொடர்ந்து மேளம் அடிக்கப்பட்டது. தூரத்தில் ஆற்றுக்குள் இறங்கி மறுகரைக்கு சென்ற சிவராமன் அய்யர் குழுவிற்கு இங்கே என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஆனா£லும் கோபத்தோடு சென்று கொண்டிருந்தார்.
மேளத்தின் அடி உச்சக்கட்டத்தினை அடைந்தது.
தீடீரென்று கள்ளவாண்ட சாமியாடி ராமகிருஷ்ண நாடார் ஆதாளி வந்து ஆடினார்.
சாமி பூடம் முன்னால் போய் நின்றார்.
“யப்பா. உன் பிள்ளைய. அவியளும் வேறே யாரும் இல்லை. வருசம் வருசம் இங்க வந்து வேட்டை பானை போடுதவியத்தான். உன்னை ஆசைப்பட்டு கேக்காவ. நீ. அவிய கூட போறீயா. சொல்லு”.
ஓங்கி உயரமா இருந்த பூடத்தினை நோக்கி கேட்டார். பதில் இல்லை. “அடிடா மேளத்தை”
மேளமடிக்க ஆதாளி போட்டு ஆடினார் சாமியாடி. தீடீரென்று நின்றார். தீருநீறு எடுத்துக்கொண்டு வந்தார். “யப்பா என்னை கொண்டு போ. சந்தோசமா கும்பிடு . உங்கள முள்மொறிவு இல்லாம காப்பாத்துதேன். ஆனால அங்க போய் என்னை நீ கள்ளவாண்டன்னு கூப்பிட கூடாது. உங்க ஊருக்கு காவலா இருக்கதால ஊர்காவலன்னு வைச்சி கும்பிடு. என்ன இருந்தாலும் இந்த கோயிலுக்கு நீ கொடை நடக்கும் போது வேட்டை பானை போடுறதை நிம்பாட்ட கூடாது. போயிட்டு வா. பிடி திருநீரை”.
குடும்பன் தீருநீரை வாங்கி கொண்டு மேளம் அடித்து விண்ணை பிளக்க அங்கிருந்து பிடிமண்ணுடன் கிளம்பினார்.
மனநிறைவோடு சந்தோசமாக அந்த மக்கள் சென்றனர். ஆனால் சாமி ஆட்டம் நிற்கவில்லை. ராஜதுரையை கூப்பிட்டார். திருநீரை கொடுத்தார். நெற்றியில் திருநீரை பூசினார். நெஞ்சை தடவினார். “யய்யா உனக்கு மட்டுமில்லை. என் மக்களுக்கே பிரச்சனை வரப்போவுது. நீ தான் காப்பாத்தனும். கவனமா இரு. நான் உன் கூ டஇருப்பேன்” என்றார்.
அதன் பின் சாமி அவரை விட்டு இறங்கியது.
அன்று அனைவரும் பனையேற செல்லாமல் வீட்டுக்கு சென்றனர்.
யாருக்குமே தூக்கம் வரவிலலை. சிவராமன் அய்யர் மூக்கை அறுத்து விட்டான் ராஜதுரை. அவனை சும்மா விடுவாரா?
எல்லோருக்கு அந்த எண்ணம் தான் தோன்றியது.
ஆனால் ராஜ துரை அதைப்பற்றி யெல்லாம் கவலை படவில்லை. தனது ஓலைப்பரை வீட்டுக்குள் குனிந்தபடியே நுழைந்தார். அங்கே உள்ள தாழ்வாரத்தில் கயிறு கட்டிலை தூக்கிப்போட்டார். நடுவீட்டுக்குள் இருந்து வானத்துக்குள் உள்ள நட்சத்திரத்தினை பார்த்தார்.
எட்டாத இடத்தில் இருந்து கொண்டு வெளிச்சத்தை தருகிறாய்.
மற்ற நாள் என்றால் கவிதை சொல்லி விடுவார். ஆனால் இன்று கவிதை தோன்ற வில்லை. மனதில் பயமில்லை. ஆனால் ஏதோ நடக்க போகிறது என்பது மட்டும் தெரிந்தது. ஆனாலும் இளம் கன்று பயமறியாது என்பார்களே. அது போலவே ராஜ துரைஇருந்தார். அடுத்த 10 நிமிடம் தூங்கியே போய் விட்டார்.
ஆனால் அக்ரகாரத்தில் சிவராமன் அய்யர் தூங்க வில்லை.
அந்த அக்கிரகாரத்தில் உள்ள அய்யர்கள் எல்லோரும் வெங்கடாசலபெருமாள் கோயில் முன்பு கூடினார்கள்.
“சாணப்பயலுவளுக்கு எத்தனை நெஞ்சழுத்தம். இது வரைக்கு எதுத்து பேசாத பயலுவ. இப்ப பேச ஆரம்பிச்சிட்டானுவ”.
“அவன் யாருடா. சிலம்பு சுத்துன பய”.
காவல்காரர்களை பார்த்து கேட்டனர்.
“அவன் ஒரு களரி வீரன் சாமி”.
“ஏன் உங்களுக்கு அவனை மாறி சிலம்பு வீச தெரியாதா?”.
காவல்காரன் முன்னே வந்தான்.
“களரியை ஆசான் மாரு எல்லாத்துக்கு சொல்லி கொடுக்க மாட்டானுவ சாமி”.
“ஏன் வேல் கம்பு கையில வைச்சியிருந்தியவோய். குத்தவேண்டியதுதானே”.
“அவன் மேலே வென்னீயை ஊத்துனா கூட மேலே படாது சாமி . அந்த வேகத்துல சுத்துவான் சாமி”.
“முட்டா பயளுவ. 10 பேர் நீங்க. அவனுவளுவள பாத்து பயபடுறீய”.
கிச்சான் அய்யர் அவர்களை பார்த்து எச்சில் உமிழ்ந்தார்ட.
அந்த காவல்கார்கள் தலை கவிழ்ந்த படி நின்றனர்.
கிச்சான் அய்யர்தான் சொன்னார். “யானைக்கு தன் பலம் தெரியாது. அந்த மாறித்தான் இந்த சாணப்பயலுவ. அவனுவ மார்பு பனையேறி பனையேறி காய்த்து போய் இருக்கும். உரலை தூக்கி எரிஞ்சா கூட அவனுவளுக்கு ஒண்ணும் ஆவாது. கை காய்ப்பு பிடித்து இரும்பு போல இருக்கு, அவனுவ ஓங்கி அடிச்சா ஆயுதமே வேண்டாம் நாம பாடு சிவபாடு தான். ஆனால் இது எல்லாம் தெரியாம உங்க கிட்ட கும்பிடு போட்டு கிட்டு இருக்கானுவ. அவனுவள சண்டை போட்டு ஜெயிக்க முடியாது. வேறே மாதிரிதான் பலி வாங்கனும். சரி. விடு சாமியை வெளியே கொண்டு வந்தாச்சு. இன்னொரு கோயிலுல உரு ஏத்தியாச்சு. அந்த சாமி துடியாத்தான் இருக்கும். இப்போ அவனுவ கிட்ட போக கூடாது. 41 நாள் பூஜை முடியட்டும். இந்த பனையேத்து முடியதுக்குள்ள அவனுவளுக்கு ஒரு பாடம் கத்து கொடுக்கணும்”.
சிவராமன் அய்யருக்கு கோபம் தீரவில்லை. ராஜதுரை அவர் கண் முன்னே வந்து கொண்டே இருந்தார். அவரை போலவே 10 காவல்காரர்களும் கோபத்துடன் இருந்தனர். 41 நாள் என்ன 41 நாள் அதற்குள் ராஜதுரை கதையை முடிக்க வேண்டும் என்று அய்யருக்கு தெரியாமல் தனிக்கணக்கு போட ஆரம்பித்தனர். அதற்காக ஒரு ஏற்பாட்டையும் செய்தனர்.
அகஸ்தீஸ்வரன் சொன்ன வரலாறு மெய்சிலிர்க்க வைத்தது. சந்திரன் தன் தாத்தா ராஜதுரை நாடார் வரலாற்றை கேட்டு ஆச்சரியப்பட்டான். “என் தாத்தா இவ்வளவு பெரிய வீரனா. அந்த ரத்தம் தான் துப்பாக்கி முனையில் முத்துகிளியை நான் காப்பாத்த காரணமாக இருந்து இருக்கு”. பெருமை பட்டுக்கொண்டான். இந்த வேளையில் தான் நர்ஸ் வந்தார். “யப்பா ரத்னம் அட்டெண்டர் யாரு-“.
“என்னம்மா நான் தான்”. சந்திரன் ஓடிச்சென்றான்.
“ரத்னத்தை மல்டி பெஷல் ஆஸ்பத்திரிக்கு மாத்திட்டாங்க. அவர் ஐ.சி.யூவிட்டு சாதா வார்டுக்கு போகப்போறார். 108 இப்போ வந்துரம். அவர் கூட ஒரு அட்டெண்டர் மட்டும் ஏறுங்க. அவர் திங்ஸ் எல்லாம் எடுத்துக்கோங்க” என்றார்.
சந்திரன் உள்ளே ஓடினான். அவருடைய பொருள்கள் எல்லாவற்றையும் சேகரித்தான். அதன் பின்வெளியே ஓடிவந்தான்.
அகஸ்தீஸ்வரன் வாத்தியாரையும், வாசு தாத்தாவையும் காத்திருக்க சொல்லிவிட்டு சந்திரன் மீண்டும் வார்டுகுள் நுழைந்தான். அதற்குள் ரத்னத்தினை வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வாசலுக்கு சென்றான். அங்கே 108 வந்து காத்திருந்தது. அதில் ரத்னத்தினை ஏற்றி மல்டி ஸ்பெஷல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்கள். அங்கே காத்திருந்த பணியாளர், ரத்னத்தினை வீல்சேருக்கு மாற்றினார். அதன் பின் லிப்ட் வழியாக 2 மாடிக்கு கொண்டு சென்றார்கள். அங்கே உள்ள பெட் ஒன்றில் ரத்னத்தினை கிடத்தினார்கள்.
அவர் பின்னாலே ஓடி வந்தான் சந்திரன். அவரை படுக்கையில் கிடத்தும் வரை உதவி செய்தான். அவர் பொருள்களையெல்லாம் அருகில் உள்ள செல்பில் அடுக்கி வைத்தான். அதன் பின் அவருக்கு தலையணை கொடுத்து படுக்க வைத்தான்.
“அய்யா எப்படி இருக்கு”. ரத்தினத்திடம் கரிசனத்துடன் கேட்டான் சந்திரன்.
சிரித்தார். “எப்படியோ உள்ளே வரும் போது படுக்க வைச்சி கூட்டிட்டு போன. இப்போ வீல் சேருல கூட்டிட்டு வந்திருக்க. 2 நாளுல நடந்தே வந்து உன் காரில் ஏறி வீட்டுக்கு போயிறலாம்”. நம்பிக்கையுடன் சந்திரன் கையை இறுக்க பிடித்துக்கொண்டார்.
சந்திரனுக்கு சந்தோசமாக இருந்தது.
இப்படியரு பாசம் அவனுக்கு பிறந்ததில் இருந்தே கிடைக்க வில்லை. வேறேருவர் இது போன்ற பாசப்பிணைப்பில் பேசவில்லை.
“அய்யா நீங்க படுத்துருங்க”. என கூறி ரத்னத்தினை படுக்க வைத்தான். போர்வையை எடுத்து அவர் மீது போர்த்தினான். அவருக்கு மேலே இருந்த மின்விசிறியை சுழல விட்டான். உடன் வந்தவர் அந்த ஆஸ்பத்திரியை போல வெளியே போய் படுக்க வேண்டாம். அவர் பக்கத்தில் உள்ள பெட் கூட காலியாக கிடந்தது. அதிலே படுத்துக்கொள்ளலாம் போல இருந்தது. ஆனாலும் சட்டத்துக்கு புறம்பாக செய்ய சந்திரனின் மனம் இடம் தரவில்லை. “எதற்கும் நர்ஸ் இடம் கேட்போம்” என நர்ஸிடம் சென்றான்.
நர்ஸ் இவனை பார்த்தவுடன் சிரித்தார்.
“சிஸ்டர். என் பேரு சந்திரன்”
“தெரியும். நீங்க மும்பையில முத்துகிளியை காப்பாற்றிய சந்திரன். டிவியில பார்த்தேன்”.
நர்ஸ் மீண்டும் சிரித்தார்.
“இந்த பெரியவர் யாரு?”.
“முத்துகிளியோட அப்பா”.
“ஓ. அப்படின்னா நீங்க இங்கத்தான் இருக்கீயளா? மும்பை போகலியா?”.
“இல்லை. ஒரு வேலையா தங்கிட்டேன்”.
“என்ன வேலை”
முத்துகிளிக்காக தங்கினேன் என வெளிப்படையா சொல்ல முடியுமா?. எனவே அமைதியாக இருந்தான்.
“சொல்லுங்க”. நர்ஸ் கேட்டார்.
“இல்லை”. இழுத்தான் சந்திரன். நர்ஸ் யோசித்தார். இவன் கதை நமக்கு எதுக்கு என தோன்றியது. எனவே அமைதியானார். “அய்யாவுக்கு எப்படி இருக்கு. என்ன செய்யனும். குணமாகிட்டா. இன்னும் டிரிட்மெண்ட இருக்கா”
நர்ஸ் அவருடைய ரிப்போர்ட் எல்லாவற்றையும் நன்றாக பார்த்தார்.
“வேறே ஒண்ணுமில்லை. ஆஞ்சியோ பண்ணி பார்க்க சொல்லியிருக்காங்க”.
“அப்படின்னா?”
“இதயத்தில அடப்பு இருக்குன்னு டாக்டர் சந்தேக படுறாங்க. அதனால என்ன ஏதுன்னு பார்க்க ஆஞ்சியோ பண்ண சொல்லியிருக்காங்க”.
“பிரச்சனை இல்லையே சிஸ்டர்”.
“இல்லை. நீங்க முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு கொடுத்துட்டீங்களா?”.
“எங்கிட்டதான் இருக்கு”. Êசந்திரன் காப்பீடு திட்டத்தினை எடுத்துகாட்டினான்.
“ வைச்சிருங்க. நாளைக்கு அதுக்குன்னு ஒரு ஆளு வருவாரு. அவருக்கிட்டே கொடுங்க. அப்ரூவல் வந்தவுடனே ஆஞ்சியோ பாப்பாங்க. அதுக்கப்புறம் அடப்பு இருந்தா என்ன செய்யணுமுன்னு சொல்லுவாங்க. அடப்பு இல்லைன்னா வீட்டுக்கு அனுப்பி விடுவாங்க”. நர்ஸ் ரிப்போர்ட் அட்டை மூடி வைத்தார்.
“சரி சிஸ்டர்”. சந்திரன் திரும்பினான்.
இவனே எதிர்பார்க்காத விதமாக நர்ஸ் கூறினார்.
“இன்னைக்கு கூட்டம் பெரிசா இல்லை. பக்கத்து பெட் சும்மாத்தானே கிடக்கு. அதுல நீங்க படுத்துக்காங்க” என்றார்.
“தேங்க்ஸ் மேடம்” என்று கூறியபடி வந்தவனுக்கு படுக்க மனம் இல்லை. அவன் மனம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. விடுபட்ட வரலாற்றை கேட்கவேண்டும். அகஸ்தீஸ்வரன் சார் எங்கேயும் போயிடக்கூடாது. இன்னைக்கே மீதி கதையை கேட்டே ஆகணும்.
வாசு தாத்தாவுக்கு போன் செய்தான். “தாத்தா இங்க பெட்ல அய்யாவை படுக்க வச்சிட்டேன். நான் உங்களை கூப்பிட வாறேன்”.
“எப்படி வருவ”.
“ஏதாவது ஆட்டோ கிடைக்குதான்னுபாக்கேன்”
“நடுராத்திரிடா உனக்கு எவன்டா ஆட்டோ ஓட்டுவான்”.
“பராவயில்லை. நடந்தே வாரேன். அங்கே வந்து காரை எடுத்துக்கிட்டு உங்களை கூட்டிட்டு வாரேன். சார்வாளை எங்கேயும் போக விட்டுறாதீங்க”.
“சரி சரி வா”.
போனை வைத்தான். திரும்பி பார்த்தான்.
ரத்னம் தூங்க ஆரம்பித்தார்.
நர்ஸ் இடம் வந்தான். “சிஸ்டர் கொஞ்சம் அய்யாவை பார்த்துக்கோங்க. நான் போய் அந்த ஆஸ்பத்திரியில இருக்கிற ஆளுகளை கூட்டிட்டு வாறேன்” என்றார்.
“ஓ. நீங்க போங்க. நான் பார்த்துகிறேன்” என நர்ஸ் வழியனுப்பி வைத்தார்.
வெளியே வந்தான். பிரமாண்ட அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வாசலுக்கு வந்தான். ஆட்டோ ஒன்றும் இல்லை.
அங்கிருந்து பழைய ஆஸ்பத்திரி நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடக்க ஆரம்பித்தான் என்று சொல்லி விட முடியாது. ஓட ஆரம்பித்தான்.
“தாத்தா ராஜதுரைக்கு என்ன ஆச்சு. ஏதாச்சு”. அகஸ்தீஸ்வரன் சார்வாளிடம் கதை கேட்கவேண்டும்.
அடுத்த 15 நிமிடம் பழைய ஆஸ்பத்திரி வந்தான்.
அங்கே அகஸ்தீஸ்வரனும் வாசுவும் கார் அருகே வந்து நின்றனர்.
இருவரையும் ஏற்றிக்கொண்டு கார் புது ஆஸ்பத்திரிக்கு கிளம்பியது. அவன் தவிப்புடன் அகஸ்தீஸ்வரன் சார் மூஞ்சை பார்த்துக்கொண்டே இருந்தான்.
வாசு சிரித்தார்.
“உன் பழைய வரலாறு வேண்டும். இதற்காக தவியாய் தவிக்கிற. சார்வாள் சொல்லுங்க சார்வாள். அவன் வரலாற்றை சொல்லுங்க”
அகஸ்தீஸ்வரன் மீண்டும் பேச ஆரம்பித்தார். அவர் கூறிய வரலாறு அப்படியே சந்திரன் கண் முன் காட்சியாக விரிந்தது.
கிச்சான் அய்யர் சிவராமன் அய்யரிடம் கேட்டார்.
“வொய் சிவராமன் 41நாள் முடிஞ்சுதா-?”
“முடிஞ்சுதுவோய். எல்லாம் முடிஞ்சி. அவனுவ அவனுவ வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டானவு வோய்”
“பொறவு என்னவோய் அமைதியாய் இருக்கீறு?. அந்த சாணப்பயலை ஒரு வழிப்பண்ண வேண்டாமவோய்”
“நான் எங்க அமைதியாய் இருக்கேன். அதுக்குள்ள நம்ம காவலாளியிய அவன் ஜோலியை முடிக்கணுமுன்னு சொன்னானுவோய். நான் தான் அடக்கி வசிக்க சொல்லியிருக்கன்வோய்”.
“சரித்தான் . அவனுவ மூச்சி காட்டாம இருக்கணுவ. இப்போ என்ன செய்ய போறீரு”
“மொதலுல இவனுவள நடுத்தெருவுக்கு கொண்டு வரணும். அதுக்கு சரியா வேலை செய்யணும். கொஞ்சம் கவனமாவும் இருக்கணும்”.
ஆமாம். இப்படி சொல்லிக்கிட்டேஇரும்வோய். இது நாயக்கரு ஆட்சியில்ல. நாம நினைச்சது நடப்பதற்கு. இப்போ வெள்ளைக்காரனுவ ஆட்சி நடக்கு. ஆ. ஊன்னு எவனோ பாளையங்கோட்டையில ரேணியனுக்கு ஒரு வெள்ளக்காரன் இருக்கானாம். அவன் கிட்டே போயிருதானுவ. நம்மள ஓச்சிபுடுவான். அவன் இந்த சாணப்பயலுவளுக்கு ஒரு ஆல யத்தை கட்டி கொடுத்து, அங்கே ஒரு பள்ளி கூடத்தை வச்சி அதுக்கு வாத்தியாரா இந்த பயலுவள போட்டு புடுதானாம். வசவப்புரத்தில நம்ம புள்ளையாண்டனுவ காசிராம அய்யரும் அந்த வெள்ளைக்காரன்கிட்டே போய் எங்களுக்கு ஒரு பள்ளிகூடம் வேணுமுன்னு கேட்டு பள்ளி கூடம் வாங்கியிருக்காராம்.
கிச்சான் அய்யர் கொந்தளித்து போனார்.
“போறப் போக்க பாத்தா நம்ம கிட்ட ஒரு பயலும் படிக்க வரமாட்டான், திண்ணை பள்ளிகூடம் எல்லாம் ஜோலி முடிஞ்சுரும் போலவே தெரியுது?”
“அது எப்படியும் போகட்டும். நம்ம கிட்ட சேட்டை பண்ணினானேவோய் அந்த சாணப்பயலை சும்மா விடக்கூடாது”.
“ என்ன செய்யப்போறீரு”.
“ சொல்ல மாட்டேன். ஆனால் செய்வேன்”.
சிவராமன் கோபமாக எழுத்தார். அவர் வீட்டு கொள்ளை புறத்தில் 10 காவல்காரர்களும் இவர் ஆணைக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் காதில் அந்த திட்டத்தினை சொன்னார் சிவராமன்.
மறுநிமிடம் ஆவேசமான கிளம்பினர் அனைவரும்.
கையில் கொழுந்து விட்டு எரியும் பந்தத்தினை கையில் பிடித்த படியே ஆற்றுக்குள் இறங்கினர். அவர்களின் பிம்பம் தண்ணீரில் பட்ட பிரதிபலித்தது. 10 தீ பந்தமும் 20 மேற்பட்ட பந்தமாக பிரதிபலித்தது.
அனைவர் கண்ணிலும் வெறி இருந்தது. “இன்றோடு ஜோலியை முடித்து விடவேண்டும்”
தூரத்தில் நாய் குரைக்கும் சந்தம்.
“ஏதோ ஆபத்து வருகிறது” என எச்சரிப்பது போலவே இருந்தது.
எப்போதும் போலவே குடியிருப்பில் யாருமே இல்லை. அனைவரும் பனையேற சென்று விட்டனர். வயதானவர்கள் ஐந்து பேரை தவிர யாரும் இல்லை.
தாமிரபரணி ஆறே தீ பிடித்து எரிவது போல இருந்தது. தீ பந்த வெளிச்சமும், அவர்கள் தண்ணீருக்குள் சல சல என ஓடி வரும் சத்தமும் விடிலி காட்டில் பனை ஏறிக்கொண்டிருந்தவர்களுக்கு கேட்கிறது.
பனையின் உச்சியில் பாளை சீவிக்கொண்டிருந்த பொன்னுநாடார். ஏறிட்டு பார்க்கிறார். ஆற்றுக்குள் வரும் கூட்டம் அவர் கண்ணில் படுகிறது.
“ ஏலே ராஜ துரை ஒரு கூட்டம் ஆத்துக்குள்ள கை பந்தம் வச்சிட்டு இறங்குதுடே. யாரா இருக்கும்?”. அப்பாவியாக கேட்டார்.
“எங்க”.
“அங்க பாருடே . நம்ம ஊருக்கு கிழக்கால ஆத்துக்குள்ள வாரவ”.
அடுத்த பனையில் இருந்த ராஜதுரை பார்த்தார். அவர் கண்ணிலும் அந்த கூட்டம் தென்பட்டது.
“அவிய ஏதாவது வேட்டைக்கு போயிட்டு வருவாவ”.
அமைதியாக இருந்தார் பொன்னுநாடார். யோசனை செய்து விட்டு பேசினார்.
“ஏலே வேட்டைக்குன்னா கிழக்க மலைக்கு போனும். இல்லாட்டி தெக்க காட்டுக்குள்ள போனும். இங்க ஊருகாட்டை பாத்து வாரவ. எனக்கு என்னவோ ஒரு மாதிரி தெரியுடே”.
பொன்னு நாடார் சொல்வது சரித்தான். ஏதோ நடக்க போவுது. “மாமாவோய். நீரு. பனையேறிட்டு வாரும். எதுக்கும் நான் என்ன ஏதுன்னு பாக்க நம்ம ஊருக்குபோறேன்” என பனையை விட்டு மள மளவென கீழே இறங்கினார் ராஜதுரை.
அடுத்து கட்டம் ஊருக்கு கிளம்ப தயாரானார்.
இதே பரபரப்பு அங்கே பனையேறிக்கொண்டிருந்த அனைத்து பனையேறிகளிடமும் இருந்தது.
த அனைவரும் பனையை விட் டு சரசரவென்று கீழே இறங்கினர். எல்லோருக்கும் மனதுக்குள் பயம் இருந்தது.
100 குடிசை வீடு. வீட்டுக்குள் உழைத்த உழைப்பு கருப்பட்டியாய் இருக்கிறது. வயசானவங்க வேறே வீட்டுக்குள்ள படுத்து கிடக்காங்க. இந்த கூட்டம் அங்கே போய் குடிசைக்கு தீ வைத்தால். அதே கதிதான்.
ஒரு விதமான பயம் அனைவரையும் தொற்றிக்கொண்டது.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)