
ஏமி லூயிசு சாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.ஏமி சாக்சன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் சனவரி 31, 1992ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.