
சொரிமுத்து அய்யனார் கோவில் மிகவும் புனிதமான இடத்தில் அமைந்து உள்ளது . சைவ சமயத்தின் சாஸ்திரப்படி எந்த ஆறும் கிழக்கு நோக்கி வந்து வடக்கே திரும்பினால் அதற்கு உத்திரவாகினி என்று பெயரிட்டு புனிதமாக மதிக்கின்றனர். இதேபோல் தாமிரபரணி ஆறு கிழக்கே நோக்கி சென்று வடக்கே திரும்பும் இடத்தில் இக்கோவில் அமைந்து இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
சொரிமுத்தையனாருடன் பூரண, புஷ்கலை தேவியர், மூலவர் மகாலிங்கம் , சப்தகன்னியர், சங்கிலி பூதத்தார், பிரம்ம ரட்சசி, தளவாய் மாடன், தூசிமாடன், பேச்சியம்மன், இருளப்பன், இருளம்மன் உள்பட 21 பரிவார தேவதைகளின் சன்னிதிகள் இக்கோயிலில் உள்ளது.
வாகனங்களாக நந்தி, யானை, குதிரை மூன்றும் ஒரே பீடத்தில் உள்ளன. பைரவர் சன்னிதிக்கு எதிரில் அவர் வாகனமான நாய் இருப்பது சிறப்பம்சமாகும்.
தாமிரபரணியில் 144 தீர்த்தக்கட்டங்களில் ரிஷிகளுக்கென 32 தீர்த்தம் மலை மீதே உள்ளது.
இதில் பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வேத தீர்த்தம் ஆகியவை மிக முக்கியமானவை. அகத்தியர் தாமிரபரணியை உருவாக்கும் முன்பு இந்த பகுதியில் ஓடிய ஆறு வேத தீர்த்தம் எனவே பெயர் பெற்றிருந்தது. பாபநாச தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம் போன்ற தீர்த்தத்தில் சித்திரை மாதம் மற்றும் ஆடி மாதம் நீராடுவது நன்று என்பர் ஆன்மிக பெரியேர். அகத்திய முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை என்பதால் இவ்விடத்தில் அடிஅமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர்.
பாணதீர்த்தத்தில் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்ற கூற்றும் உண்டு.
சொரிமுத்து அய்யனார் கோவிலை பொறுத்த வரை பருவ காலத்தில் மழை பெய்ய தாமதிக்குமானால் உடனே பக்தர்கள் ஒன்று கூடுகிறார்கள். அய்யனுக்கு பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். உடனே மழை பெய்வதை பார்த்து மகிழ்கின்றனர்.
அருள் பொழிந்து மழை சொரிவதனால் சொரிமுத்து அய்யன் என்று இவர் பெயர் பெற்றார். சொரிதல், பொழிதல் என்பது குறித்து கூறும் போது முத்து என்பது விலை மதிக்க முடியாத பெரும் பொருள். மழையை முத்து மழை என்றும் கூறுவர். அது போல் சொரிமுத்து அய்யனாரின் திருவருளும் விலை மதிக்க முடியாது. எனவே தான் இங்கு பக்தர்கள் கூடுகிறார்கள்.
இந்த திருவிழா நாட்களில் நெல்லை, அமாவாசை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுமார் 2 லட்சம் பக்தர்கள் குடும்பத்துடன் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே குடிசை அமைத்து 7 நாட்கள் தங்கி வழிபடுவது வழக்கம். இதில் ஆலங்குளம் சுற்றுவட்டார மக்கள் அதிகமானோர் வருவார்கள்.
இந்த கோவிலை நடுத்தர ஏழை மக்களின் சொர்க்கம் எனலாம். மக்கள் நிம்மதியாக புண்ணிய நதி தாமிரபரணி யில் நீராடி ஒருவாரம் வழிபாடு செய்கின்றனர். இத்தலத்துக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் சொரிமுத்தையனாரை தங்கள் குலதெய்வமாக வணங்குகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், திருமண பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்துக்கு பக்தியோடு வருகிறார்கள்.
பில்லி சூன்யம், செய்வினை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அத்தகைய துன்பங்கள் நீங்குகிறது என்பது வந்து சென்றவர்களின் கூற்று. நீதிமன்ற வழக்குகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இங்கு வருகை தந்து வழிபடுகின்றனர். இத்தலம் அமைந்துள்ள இடம் இயற்கை எழில் சூழ்ந்துள்ள இடமாக இருப்பதால் உடற்பிணிகள் நீங்குகிறது.
சொரிமுத்து அய்யனார் கோயில் வளாகத்தில் இலுப்பை மரம் இருக்கிறது. இதனை, மணி விழுங்கி மரம் என்கின்றனர். இதைப்பற்றி நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். பக்தர்கள் பிரார்த்தனைக்காக இம்மரத்தில் கட்டும் மணிகளை, மரம் விழுங்கி விடுவதைப் போல, உள்ளேயே பதிந்து விடுகின்றன. இது பக்தர்களின் காணிக்கையை சுவாமி, ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக கருதுகிறார்கள்.
இம்மரத்திற்கு கீழே சங்கிலிபூதத்தார், மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் அருள் தருகின்றனர். அருகிலேயே ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் இரண்டு யானைகள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. அகத்தியரும் இங்கிருந்து தான் ஞானதிருட்சியில் மகாலிங்கத்தினை கண்டு கழித்த இடமாகும்.
ஆடி அமாவாசை என்றாலே நமக்கு சொரிமுத்து அய்யனார் நினைவுககு வருவார். அவரை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். சொரிமுத்து அய்யனாரை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் சிங்கம்பட்டி ராஜா தான்.
முருகதாஸ் தீர்த்தபதி ராஜா கடந்த சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ராஜா தர்பார் நடத்திய இடம் சொரிமுத்து அய்யனார் கோயில். இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.
ராஜா இங்கு வந்து இரண்டு நாள் ராஜா தர்பாரில் காட்சி தருவார். இதற்கான ஏற்பாடுகள் எல்லோமே மிகவும் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பாக தடபுடலாக நடைபெறும். தீர்த்தப்பதி ராஜா ஆடி அமாவாசைக்கு கோயிலுக்கு புறப்படுகிறார் என்றாலே அவரது உறவினர்களும், நண்பர்களும் காரில் சிங்கம்பட்டி அரண்மனைக்கு வந்து விடுவார்கள். அது ஒரு பொற்காலம். அதோடு மட்டுமல்லாமல் மணிமுத்தாறு பட்டாணியனில் இருந்து போலீஸ் வண்டி இரண்டும் பாதுகாப்புக்கு அரண்மனைக்கு வந்துசேர்ந்து விடும்.
குறிப்பிட்ட நேரத்தில் ஆடி அமாவாசைக்கு முதல் நாள் ராஜா அரண்மனையை விட்டு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு கிளம்பி விடுவார். ஒருகாலத்தில் ராஜாவின் முன்னோர் பல்லக்கில் சென்று இருக்கிறார்கள் அதன் பின் சாரட் வண்டியை பயன்படுத்தி இருக்கிறார்கள். தற்போது மகிழுந்தை பயன்படுத்துகிறார்கள்.
நாட்டை ஆளும் ராஜா எப்படி படை சூழ வெளியிடத்துக்கு செல்வாரோ அதுபோலவே சிங்கம்பட்டி ராஜா போலீஸ் காவல் முன்னும் பின்னும் செல்ல, உறவினர்களும் நண்பர்களும் சுமார் 11க்கும் மேற்பட்ட காரில் பின் தொடர சொரிமுத்து அய்யன் கோயிலை நோக்கிசெல்வார்கள்.
செல்லும் வழியில் தடைகள் எதுவும் இல்லாமல் காவல் துறையினரும், வனத்துறையினரும் பார்த்துக்கொள்வார்கள். ராஜா கோயிலுக்கு வந்து பின், அங்கே பட்டவராயன் கோயிலுக்கு அருகில் உள்ள பங்களாவில் தங்குவார்.
மறு நாள் காலையிலேயே ஆடி அமாவாசை திருவிழா களைகட்டி விடும்.
சிங்கம்பட்டி ராஜா கோயில் ஊழியர்கள் மற்றும் அரண்மனை ஊழியர்களுக்கெல்லாம் புதுத் துணியை மகிழ்ச்சியோடு வழங்குவார்கள். அனைவரும் ரா-ஜாவிற்கு வணக்கம் சொல்லி, ஆசிர்வாதம் வாங்கி புதுத்துணியை வாங்கிச்செல்வர்.
ஆங்காங்கே தங்கி இருக்கும் பக்தர்கள் எல்லாம் மாலை 4 மணிக்கெல்லாம் பிரம்ம ராட்சசி அம்மன் கோயில் முன்பு கூடிவிடுவார்கள்.
அங்கே பூங்குழிக்கு தயாராக ஏற்பாடு நடைபெறும் பக்தர்கள் பூக்குழி இறங்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து விடுவார்கள். கட்டுகட்டாக விறகுகளை கொண்டு வந்து பெரிய அளவில் குவித்து வைத்திருப்பார்கள். குழி தோண்டி அதில் நெருப்பு கூட்டி தணலை உருவாக்குவார்கள்.
ஆடி அமாவாசை திருவிழாவில் சொரிமுத்து அய்யனார் கோயில் பட்டவராயன் அருகில் சன்னதி அமைக்கப்பட்டு உள்ள மேடையில் 31 -வது பட்டம் பெற்ற முருகதாஸ் தீர்த்தபதி ராஜா, ராஜ தோரணையில் வெண்கொற்றக் குடையின் கீழ், வாள் ஏந்தி அமர்ந்து இருப்பார். கோவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்குதல் நடைபெறும். சங்கிலி பூதத்தார், பிரம்மராட்சி அம்மன் மற்றும் பட்டவராயன் கோயில் என மொத்தம் மூன்று இடங்களில் பத்து அடி நீளத்துக்கு பூக்குழி அமைத்து இருப்பார்கள்.
பூக்குழி தயாராகும் வரை சொரிமுத்து அய்யனார் சாமியாடிகள் வெள்ளிப் பிடி போட்ட பிரம்புக் கம்புகளை வைத்துக்கொண்டு, எதிர் எதிராக நின்று விளையாட்டாகக் கம்புச்சண்டை போடுவது வழக்கம். பூக்குழி தொடங்கும் முன்பாக சாமி கொண்டாடிகள் மேளம் முழங்க ராஜா முன்பு மண்டியிட்டுக் கோயில் பிரசாதமான விபூதியைக் கொடுத்து “நாங்கள் பட்டவராயரின் பிரதிநிதிகள். பூக்குழிக்கு அனுமதி தாருங்கள் அரசே” என்று கேட்பார்கள்.
மரியாதையை ஏற்றுக்கொண்ட ராஜா, பதிலுக்குத் தாம்பூலத்தில் தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்குடன் கருப்பட்டி, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவைகளை வைத்துக் கொடுத்து ”தொடங்கட்டும் பூக்குழி” என்றுச் சொல்லி அனுமதி தருகிறார்.
குலவைச் சத்தம், கொட்டுச் சத்தத்தோடு நடந்து முடிகிறது பூக்குழி இறங்குதல். இந்த காட்சியை காண கண்கோடி வேண்டும். இதுபோன்ற ராஜ உத்தரவுடன் சுவாமி ஆடிகள் பூக்குழி இறங்கும் திருவிழா எங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும். தொடர்ந்து திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கிய பின், ராஜதர்பார் நிறைவடைகிறது.
இந்த வேளையில் ராஜதர்பார்ல் வீற்றிருக்கும் சிங்கம் பட்டி மகராஜாவை பார்க்க கண்கோடி வேண்டும். அதே போல் மறுநாளும் திருவாங்கூர் மகராஜா கொடுத்த முத்திரை மற்றும் வாளோடு ராஜா தர்பாரில் காட்சி தருவார் சிங்கம்பட்டி மகராஜா. இதுவும் கண்கொள்ளா காட்சியாகும்.
தற்போது இவையெல்லாம் கடந்த காலமாகி போய்விட்டது.
இந்தியாவிலேயே பட்டங்கட்டிய ஒரே ஒரு ராஜா தற்போது நம்மிடம் இல்லை.
இரண்டு வருடம் கொரோனா நோய் தொற்று காரணமாக ஆடி அமாவாசை திருவிழா நடைபெறவில்லை. இதனால் மக்கள் அய்யனின் திருவருளை காண முடியவில்லை. இதற்கிடையில் ராஜா நம்மை விட்டு சென்று விட்டார்.
நம்மையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு இந்த மண்ணுலகினை விட்டு பிரிந்து விட்டார். ராஜா இல்லாத திருவிழா இந்த வருடம் (2022) சொரிமுத்து அய்யனார் கோயிலில் எல்லாமே மாறிப் போய் விட்டது. ராஜாவின் அருளாசி இல்லை. ஆனாலும் அவர் அருளாசி அங்கு அனைவரிடத்திலும் நிரம்பி இருந்தது என்றால் மிகையாகாது.
அவரின் படத்தினை வைத்து, அவரின் உடை வாளையும் வைத்து ராஜா உயிரோடுஇருந்து அருளாசி தருவதாகவே பாவித்து , ராஜ தர்பாரில் அவர் படத்துக்கு உத்தரவு வாங்கியபடியே கோமரத்தாடிகள் பூக்குழி இறங்கினார்கள்.
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் வாகனங்கள் அனைத்தும் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்படுகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு சுமார் 500 க்கு மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை திருநெல்வேலி, தென்காசியில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது.
அங்கிருந்து அரசு பஸ்கள் மூலம் தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலுக்கு நேர்த்தி கடனுக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, பாத்திரம் உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் இல்லாமல் அரசு பேருந்துகளில் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக அகஸ்தியர் பட்டியிலிருந்து நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். பொது மக்களின் உதவிக்காக தீயணைப்பு துறையினர் படகுடன் ஆற்று படுகையில் காத்திருந்தனர்.
பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பக்தர்கள் குளிக்க வேண்டுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் காவலர்களோடு இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தனர். தடைசெய்யப்பட்ட பகுதியில் குளிக்க செல்லக் கூடாது. கூட்டத்தில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் தென்பட்டால் உடனடியாக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது உள்பட பல ஆலோசனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தாண்டி பகதர்கள் அய்யனை காண குடும்பத்துடன் வந்தனர்.
ஆனால் அங்கு சிங்கம்பட்டி ராஜா மட்டும் இல்லை. ஆனால் அவர் அங்கே தாமிரபரணியாக, வானமாக, மரஞ்செடி கொடிகளாக, 7 பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் தெய்வமாக மககள் மனதில் நீக்கமற நிறைந்து இருக்கிறார்.
அடுத்து ஒரு ஆக்ரோசமான தெய்வத்தினை பற்றி நாம் காணலாம்.
(பொருநை ரகசியத்தினை தேடிபயணிப்போம்)