
சொரிமுத்து அய்யனார் கோயில் என்றாலே சிங்கம் பட்டி ராஜா தான். சுதந்திர இந்தியாவில் பட்டங்கட்டி வாழ்ந்த ஒரே ஒரு ராஜா நம்ம ஊரு ராஜா தான்.
இந்த பெருமை உலகத்தில் தாமிரபரணி கரையை தவிர வேறு எந்த இடத்துக்கும் கிடையாது: அதோடு மட்டுமல்லாமல் சிங்கம்பட்டி ஜமீன்தாரை சொரிமுத்து அய்யனார் என்றே இப்பகுதி மக்கள் நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த பகுதியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
நான் ஏற்கனவே கூறியபடி சிங்கம் பட்டி ராஜா கனவில் வந்தால், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு மக்கள் வரவேண்டும் என்ற சொரிமுத்து அய்யனாரே ராஜா ரூபத்தில் வந்து பேசுகிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆகவே ராஜா கனவில் வந்தாலே போதும் மறு நாளே சொரிமுத்து அய்யனாரை காண ஓடிச்சென்றுவிடுவர்.
தற்போது சாலை வசதி பெருகி விட்டது. போக்குவரத்து அதிகரித்து விட்டது. எனவே கோயிலுக்கு தடையில்லாமல் சுலபமாக சென்று விடலாம். ஆனால் அந்த காலத்தில் அப்படியல்ல. சொரிமுத்து அய்யனார் கோயில் செல்ல நடந்தே செல்ல வேண்டும். கைக்குழந்தைகளை தூக்கி தோளில் போட்டு கொண்டும், சிலர் புதிதாக மணமுடித்த புது மனைவியை கையில் பிடித்துக்கொண்டும், தங்களது பாட்டியையும் தாத்தாவையும் தங்களோடு இணைந்து கொண்டு, மூன்று தலைமுறையினர் சேர்ந்த படியே , சிணுங்கும் பொதிகை மலை தூறலில் நனைத்து கொண்டே கிட்டத்தட்ட 15கிலோ மீட்டர் நனைந்தே நடந்து வருவார்கள்.
கால்கடுக்க மனதில் சொரிமுத்து அய்யனை நினைத்துக்கொண்டு அவர்கள் வந்து தங்குவர்.
சொரிமுத்து அய்யன் கோயில் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் குடிசல் போட்டு சொரிமுத்து அய்யனார் திருவிழா முழுவதுதையும் கண்டு குதுகலித்து , அய்யன் அருள் பெறுவர். தினமும் காலையில் அய்யன் கோயிலில் இருந்து குறுக்கு பாதை வழியாக நடந்து சென்று பாணதீர்த்தத்தில் குளித்து, பின் அதே வழியில் நடந்து வந்து அய்யனை வணங்கி, அருள் பெறுவர்.
கிட்டத்தட்ட மூன்று நாள்கள் தங்கள் ஊரை மறந்து அய்யனே கதி என்று காத்து கிடப்பர்.
அங்கு சங்கிலி பூதத்தார் அருள் பெற்றவர்கள். ஆதாழி வந்து கோயில் முன்பு நின்று பெரிய சங்கிலியை எடுத்து தன் மார்பிலும் ,முதுகிலும் அடித்து தங்களது வல்லமையை வெளிப்படுத்துவார்கள்.
அவர்களிடம் சென்று அருள்வாக்கு பெறுவர்.
நான் ஏற்கனவே கூறியபடி, சொரிமுத்து அய்யனார் கோயிலில் உள்ள கூட்டறவில் சைவ படைப்பும் உண்டு, அசைவ படைப்பும் உண்டு. எனவே சைவத்தில் ஆரம்பித்து, இறுதியில் அசைவத்தில் விரதம் முடித்து வீட்டுக்கு வந்து சேர்வார்கள் பக்தர்கள்.
கடந்த 25 வருடங்களுக்கு முன்பு சாலை வசதி சிறப்பாக அமைந்த காரணத்தினால் வில்லு வண்டி, மாட்டு வண்டி, மற்றும் வேன், பேருந்து கார்களில் கோயில் அருகில் வரை நமது மக்கள் சென்று விடுவார்கள். இதனால் அவர்களுக்கு ஆனந்தம் மிக ஆனந்தம். ஆடி திருவிழா மட்டுமல்லாமல் கோயில் விசேஷம் இல்லாத காலத்திலும் கூட இவ்விடத்துக்கு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருவதுண்டு. பாறை மீது ஓடி வரும் தாமிரபரணியில் குளித்து மகிழுவார்கள். இது ஒருவகையில் ஆபத்தானது தான். பட்டவராயன் கோயில் முன்பு உள்ள பாறையில் குளிக்கும் போது கவனமாக குளிக்கவேண்டும். இல்லையென்றால் பாறையில் வழு க்கி விழுந்து அகால மரணத்தினைதொட வேண்டும். அதற்கான எச்சரிக்கை பலகையும் இங்குண்டு.
ஆனாலும் பக்தர்களுக்கு வனத்துறை மூலமாக சோதனை வந்தது. வனத்துறை பாது£க்கப்பட்டதாக அறிவித்த பிறகு எல்லாமே மாறி விட்டது. 1992 புயல் வெள்ளத்துககு பிறகு சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து வாணதீர்த்தம் செல்லும் பாதையும் அடைபட்டு போய் விட்டது. வனங்கள் எல்லாம் வனத்துறை மூலம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. பொதிகை மலைக்கு யாத்திரியர்கள் இவ்விடம் வழியாக செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு விட்டது. குறிப்பாக கடந்த இரண்டு வருடம் கொரோனா தொற்று நோய் காரணமாக திருவிழா சிறப்பாக நடைபெற இயலவில்லை. அதற்கு முன்பே கட்டுபாடு மிக அதிகமாக இருந்தது. கொரோனா காலத்துக்கு பிறகு கட்டுபாடு அதிகரித்து விட்டது.
குறிப்பாக சுமார் 10 வருடங்களுககு முன்பே சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வருவோரிடம் வனத்துறை கெடுபிடி காட்ட ஆரம்பித்து விட்டது. பயணிகள் அனைவரும் சோதிக்கப்படுவார்கள். அவர்களிடமிருந்து பிளாஸ்டிக பைகள் பறிமுதல் செய்யப்படும். அதற்கு பதிலாக துணி பையை கொடுப்பார்கள். இந்த பணிக்காக வனத்துறையினருடன் கல்லூரி மாணவ மாணவிகள் சமூக சேவை தொண்டர்கள் நியமிககப்படுவார்கள்.
கட்டுபாடான காவலுக்கு மத்தியில்தான் பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலுககு செல்லவேண்டும். சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசையில் குளிக்கும் மக்களால் தாமிரபரணி மிகவும் அசுத்தமாகிறது என்று ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி பேராசிரியர் முருகேசன் தனது மாணவர்களுடன் நடத்திய ஆய்வின் மூலம் கண்டு பிடித்தார். எனவே வனத்துறை கட்டுபாடு சரித்தான் என எண்ணவும் தோன்றியது.
எனவே ஆடி அமாவாசை திருவிழா என்பதும், சொரிமுத்து அய்யனை தரிசனம் செய்வது என்பதும் வருடத்துக்கு வருடம் சவாலாகவே மாறிக்கொண்டு வருகிறது.
இரண்டு வருடம் கொரோனா நோயினார் அனுபவிக்க முடியாமல் போய் விட்டது. ஆடி அமாவாசையில் பெரிய அளவில் பக்தர்கள் கூட இயலவில்லை. இந்த வருடமாவது கூடி விடலாம் என்று நினைத்தால் அதற்கும் தடை வந்து விட்டது.
இந்த வருடம் ஆடி அமாவாசை வருகிற 28.07.2022 நடைபெறவுள்ளது. தற்போது மலை பாதையில் சாலை செப்பனிடும் பணி நடைபெறுவதால் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் கண்டிப்பாக பகதர்கள் செல்ல இயலாது. ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் அகத்தியர் பட்டியில் வாகனத்தினை நிறுத்தி விட்டு , அங்கிருந்து அரசு பேருந்தில் தான் கோயிலுக்கு செல்ல வேண்டும் என அரசு கூறிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் கோயில் குடில் அமைப்போர்கள் இன்று (24.07.2022) தங்கள் வாகனத்தில் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பொருளை கொண்டு இறக்கி வைத்து விட்டு வாகனத்தோடு வந்து விட வேண்டும் என்று அறிவித்து உள்ளார்கள்.
அய்யன் சொரிமுத்து திருவிழாவை காண பக்தர்களுக்கு பல்வேறு பிரச்சனை தான். ஆனாலும் மனம் தளராமல் அய்யனை காண குடும்பத்தோடு கிளம்ப ஆயத்தமாகி வருகிறார்கள் பக்தர்கள்.
ஒரு காலகட்டத்தில் வனத்துறை அதிகாரியாக வெங்கடேஷ் அவர்கள் பணியாற்றிய போது மலைகளில் உள்ள மரத்தினை வெட்டும் மக்களிடம் இருந்து காட்டை காப்பாற்ற படாத பாடு பட்டார். அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த சொரிமுத்து அய்யன் வேடமணிந்த தொண்டு நிறுவனத்தினர் மக்கள் மத்தியில் தோன்றி காட்டை அழிக்காதீர்கள் என கூறுவது போலவே நாடகத்தினை வீதிதோறும் நடத்தி வந்தனர். அதோடு மட்டுமல்லாமல் இக்கோயிலுக்கு அதிகமாக வரும் தென்காசி ஆலங்குளம் பகுதி மக்களிடம் பிளாஸ்டிக் விழிப்புணர்வையும் சொரிமுத்து அய்யன் கூறுவது போலவே ஊர் ஊராக சென்று வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஒரு காலத்தில் வனத்துறைககுள் நுழைந்து பொதுமக்கள் மரங்களை வெட்டியும் கடத்தியும் வந்தனர் என்பது மறுக்கப்படாத உண்மை . இவர்களின் செயல் வனத்துறைக்கு மிகப்பெரிய சவலாக இருந்தது.
ஒருபக்கம் வனத்துறையினர் வழியை மறித்தால் மற்றொரு பக்கம் வழியாக களவாட ஆரம்பித்தனர்.
இதைப்பற்றி நான் நெல்லை தமிழ் முரசில் “நதிக்கரையோரத்து அற்புதங்கள்” தொடரை எழுதும் போது குறிப்பிட்டுள்ளேன். அந்த தொடர் தற்போது “தலைத்தாமிரபரணி” என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகத்திலும் உள்ளது. அந்த நூலில் எழுதிய சில பக்கங்களை இவ்விடத்தில் நினைவு படுத்துகிறேன்.
தாமிரபரணி ஆற்றில் படகு ஓடும் ஒரே ஒரு கிராமம் புலவன் பட்டிதான். ஐயா திரைப்படத்தில் சரத்குமாரும், நெப்போலியனும் இந்த படகில் வரும்படியாக காட்சி ஒன்றை காட்டுவார்கள். அதை திரைப்படம் பார்த்த நாம் அறிந்திருப்போம். புலவன் பட்டியின் எதிர்புறம் கேஸ் கீப்பர் தோப்பு, திருப்பதியா புரம், இந்திரா நகர், கோரைகுளம் போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மிக அதிகமான மக்கள் பிழைப்பு தேடி வெளியூரிலிருந்து வந்த மக்கள்தான். இவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ இங்குள்ள விளைநிலங்கள் உதவியதால் மில் தொழில் போக மீதி நேரங்களில் விவசாயம் செய்ய முன்வந்தனர்.
இந்த பகுதியில் வசிப்பவர்களை தவிர மலையில் இருந்து விறகு வெட்டி அதை கடத்தி வந்து விற்பனை செய்வோர்களும் அருகில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் இந்த வழியாக விறகுகளை வெட்டி கடத்தியதை நினைவுபடுத்தும் சில இடம் தற்போதும் உள்ளது.
புலவன்பட்டி கிராமத்தில் உள்ள பாறைக்கு Ôவில்லடிச்சான் பாறைÕ என்ற பெயருண்டு. இந்தப் பாறை அருகில் தான் வேலையில்லாத மக்கள் பலர் நின்று ஊர் வம்புகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேச்சு வில்லடித்ததை போல் விளங்கும். முடிவே வராது. ஆகவேதான், இந்த பாறைக்கு Ôவில்லடிச்சான் பாறைÕ என்று பெயர்.
சிவந்திபுரத்தில் தாமிரபரணி வடக்கு கரைக்குச் செல்லும் பாதை தைப்பூச சாலை. ஆற்றுக்குள் உள்ள தைப்பூச மண்டபம் செல்லும் சாலை என்பதால் இதற்கு அந்த பெயர் ஏற்பட்டது.
முற்காலத்தில் வடகரையில் இருந்து விறகு வெட்டி வருபவர்களும், வேட்டையாடி மான், மிளா போன்ற மிருகங்களைக் கொன்று அதைத் தோளில் போட்டுக் கொண்டு ஆற்றைக் கடந்து தென்கரைக்கு ஓடிவருவார்கள். வனத்துறையிடம் இருந்து குறிப்பிட்ட இடத்தினை கடக்க ஓடி வருவார்கள். அந்தந்த இடங்களில் உள்ள கற்களுக்குப் ஒவ்வொரு பெயர் வைத்து இருப்பார்கள். சின்னக் கடவு என்று ஒரு கல்லுக்கு பெயர். மற்றொன்றுக்கு பெரிய கடவு என்று பெயர்.
ஒவ்வொரு இடத்தினையும் கடக்கும்போதும், இது பெரிய கடவு என்று அதைத் தாண்டும் போது “சின்ன கடவை தாண்டிட்டேன்” என்று சத்தமாகச் சத்தம் போட்டு ஓடி வருவார்களாம். இதனால் அவர்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தினை கடந்து ஓடுகிறார்கள் என்பது கூட வருபவர்களுக்கு புரியும். ஆகவே அந்த மைல் கற்கள் தற்போதும் சின்னக்கடவு, பெரிய கடவு என்று அழைக்கப்படுகிறது.
இது போன்று பல் வேறு மலை அடிவார கிராமங்களில் மரங்கடத்துதலும் வேட்டையாடும் மிருகங்களை கடத்தும் நிகழ்வுகளும் நடந்தது. இவர்களை கட்டுபடுத்த வனக்குழு அமைத்தல், அவர்களுக்கு கடன் வழங்கி வேறுதொழிலை ஊக்குவித்தல் போன்ற பணிகளில் அரசு ஈடுபட்டது. சொரிமுத்து அய்யனார் போல வேடமணிந்து சென்றவர்கள் போட்ட நாடகத்தினை கூட அய்யனே சொல்வது போல நினைத்து பலர் வேட்டைக்கு செல்வதை நிறுத்தினர்.
அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து வனத்துறை கிடுக்கு பிடி போட்ட காரணத்தினால் தற்போது முழுவதுமாக மரங்கடத்தல் நின்று விட்டது.
விறகு வெட்டுதலும் இல்லாமல் போய் விட்டது. ஆனாலும் ஆடி அமாவாசை திருவிழா என்றால் சொரிமுத்து அய்யனாரை தேடிச்செல்லும் பக்தர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஆடி அமாவாசைக்கு சொரிமுத்து அய்யன் கோயிலுக்கு , 15 கிலோ மீட்டர் நடந்தே செல்ல பக்தர்கள் தயராகி வருகின்றனர்.
(பொருநை ரகசியத்தினை தேடிபயணிப்போம்)