
முன்கதை சுருக்கம்
கிராமத்தில் வாழ்ந்த முத்துகிளி செல்போன் தொடர்பில் வீட்டுக்கு தெரியாமல் வயதான தம்பதியினருடன் மும்பை சென்று விடுகிறாள். அவளை நவீன போன் தொடர்பு வசதியுடன் கண்டு பிடிக்கிறான் நவீன். வயதான தம்பதிகளிடம் இருந்து முத்துகிளியை காப்பாற்றும் போது போலிசுக்கும் அவர்களுக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடக்கிறது. போலிசில் மாட்டிக்கொண்ட தம்பதிகள் கொரோனா நோயில் இறந்து விடவே, உடன் இருந்த முத்துகிளி உள்பட தேடிச்சென்ற உறவினர்கள் கொரோனா முகாமில் வைக்கப்படுகிறார்கள். அதன் பின் போலிஸ் கமிஷனர் உதவியுடன் இரண்டு காரில் ஈபாஸ் மூலமாக தமிழகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி திருமணம் செய்தது என்கிறார் வாசு. அதை பற்றி புரியாமல் தவித்தார் இளங்கோ. உண்மையை புரிந்து கொள்ள சந்திரன் தனது பூர்வீகத்தினை தேடுகிறான். அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கிடையில் பனையில் இருந்து விழுந்து இறந்த லிங்க நாடாருக்கு ஏதாவது அரசு மூலம் நிதி உதவி கிடைக்குமா? என எதிர்பார்த்து வரதன் என்பவரை பார்க்க வந்தான். அவர் இறந்து விட்டார். ஆனால் அங்கு மேலும் ஒரு பிரச்சனையை சந்திக்கிறான் சந்திரன். இனி.
44.விதவிதமான லைட்டுகளும், மறைந்து போன பேப்பர் பொட்டலமும்
கோபாலகிருஷ்ணன் புலம்பினார்.
“புத்தகம் ரிடிங் குறைஞ்சி போச்சு. புத்தகம் பாதுகாப்பு போச்சு. எல்லோரும் எதை நோக்கி ஓடிப்போறோம் முன்னே தெரியலை. ஒரு நல்ல நூலகர். நல்ல வாசகர். அவர் சேர்த்து வைச்ச புத்தகம், அவர் இறந்து புதைக்கப்பட்ட குழி மூடி காய்ந்து விடும் முன்பே அரவை மிஷினுக்கு போய் விட்டது. கடவுளே. இது என்னடா இது உலகம்”.
வரதன் எங்கோ இருந்து கதறுவது போல இருந்தது. “நண்பா காப்பாத்து என் புத்தகத்தை காப்பாத்து டா”.
கோபால கிருஷ்ணன் பதறினார்.
“நான் உடனே போகிறேன்.அரவை நிலையத்தினை நோக்கி போகிறேன்”.
வெளியே ஒடி வந்தார். தொடர்ந்து சந்திரன் காரில் ஏறினார். முதலாளி கொடுத்த அட்ரஸை வைத்துக்கொண்டு காரை கிளப்ப சொன்னார்.
சந்திரனுக்கு புரிந்தது . “கடவுளே இது என்ன சோதனை இது. வரதன் அய்யாவிடம் உதவி கேட்க வந்தேன். லிங்க நாடார் பனை இருந்து விழுந்து இறந்து விட்டார். அவருக்கு அரசு நிதி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று பேச வந்தேன். அவர் இப்போது தெய்வமாய் சுவரொட்டியில் இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இப்போது அவரது புத்தகத்தினை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேனே”
காரை கிளப்பினான்.
“ம். இதுவும் விதியின் விளையாட்டுத்தான். இந்த விளையாட்டையும் பார்த்து விடுவோம். இறைவன் என்னை எங்கோ கொண்டு செல்கிறான்”.
சந்துபொந்துகளுக்கு இடையே கார் வேகமாக சென்றது. “சீக்கிரம் சீக்கிரம் தம்பி” என்ற கோபாலகிருஷ்ணன் அவரசத்தினை புரிந்த சந்திரன் காரை வேகமாக ஓட்டினான்.
“அரவை மிஷினில் போட்டு இருப்பார்களோ. இரண்டாயிரம் புத்தகம் அல்லவா? அய்யோ புத்தகம் முழுவதும் என்னவாயிருக்கும். அரைத்து இருப்பார்களோ?”.
இருவர் மனமும் படபடவென்று அடித்தது.
சரியாக 15 நிமிடம் இருக்கும், கார் அவர் சொன்ன அந்த இடத்தினை தொட்டு விட்டது.
அந்த கம்பேனி மிகப்பெரிதாக இருந்தது. மிகப்பெரிய காம்பவுண்ட் சுவர். நுழைவு வாயிலும் மிகப்பெரியதாக கேட் போடப்பட்டிருந்தது.
வாட்சுமேன் வாசலில் நின்று கொண்டிருந்தான்..
எனவே ஆட்டோவை வெளியே விட்டு விட்டு ஓடினார் கோபாலகிருஷ்ணன்.
உறவுகளின் உயிரை பறிகொடுத்தவர் போலவே ஓடினார். ஆனால் வாட்சுமேன் அவரை கண்டுகொள்ளவே இல்லை. இவர்களை உள்ளே விட மறுத்தான்.
ஏதோ ரத்த உறவு விபத்தில் சிக்கி கொண்டது. அந்த உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டு ம் என்ற எண்ணத்தில் அவனிடம் கெஞ்சினார். அவன் கேட்கவில்லை.
சந்திரன் காரை நிறுத்தி விட்டு அருகில் வந்தான்.
புத்தகம் தானே. அதற்கு உயிரா இருக்க போகிறது. என்று எண்ணியவர்கள் ஏராளம். ஆனால் இந்த புத்தகம் என்பது பல அறிவாளிகளை உருவாக்கும் ஆயுதம். ஒரு நூலகம் பல குற்றவாளிகளை திருத்தி விடும் என்பார்கள். ஒரு நாட்டில் அனைவரும் புத்தகம் படித்தால், அந்த நாட்டில் சிறைச்சாலை இருக்க வேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள். அதுபோலவே தான் இந்த புத்தகத்தினை அழிவில் இருந்து மீட்க வேண்டும். வரதனுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த வேண்டும் என்பது தான் கோபாலகிருஷ்ணனின் ஆசை. ஆனால் அந்த ஆசை பெரும் முட்டுகட்டையாக வாட்சுமேன் இருந்தான்.
வாட்சுமேன் அவரை இடை மறைத்தான், “என்ன அய்யா என்ன அவசரம்”. என கேட்டை திறக்க மறுத்தான்.
“நான் முதலாளியை பார்க்கணும். அவசரமாக பார்க்கணும்”.
“இல்லையய்யா. அவர் அரவை முடிய தண்டியும் மிஷினை விட்டு வெளியே வரமாட்டார்”.
“அய்யோ அரவை மிஷினை நிறுத்தணும்”.
“அது முடியாது அய்யா. முதல் தடவை மிஷின் ஓடி முடிந்து விட்டது”.
கோபாலகிருஷ்ணன் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.
“வரதன் சேர்த்து வைத்த வீடு வேண்டும். அவர் உழைப்பில் வளர்த்த அனைத்தும் வேண்டும். ஆனால் அவர் உயிராய் நினைத்த புத்தகத்தினை தெருவில் விட்டு விட்டார்களே. பாவிகள். என்ன செய்ய”.
தீடீரென்று ஆக்கிரோசமாய் எழுந்தார். கேட்டை வேகமாக தள்ளினார். கேட் திறந்தது. அரவை மிஷின் உள்ளே இருந்த இடத்தினை நோக்கி ஓடினார். ஆனால் வாட்சுமேன் அவரை தடுத்தார். அவரை தட்டி விட்டு விட்டு அரவை மிஷின் நோக்கி ஓடினார்.
“அய்யா. ஓடாதீர்கள்” என வாட்சுமேன் அவர் பின்னால் ஓட இருவரும் ஒருவரை ஒருவர் விரட்டியபடியே ஓடினர்.
அவர்கள் பின்னால் சந்திரனும் ஒட ஆரம்பித்தான்.
மூன்றுபேரும் ஓடி வருவதை முதலாளி உள்ளே அமர்ந்து கமராவில் பார்த்து விட்டார். என்ன ஏது என்று தெரியாமலேயே வெளியே ஓடி வந்தார்.
கோபாலகிருஷ்ணனுக்கு மூச்சி வாங்கியது. வயதுக்கு மீறிய ஓட்டம்.
“அய்யா மிஷினை நிறுத்துங்க. மிஷினை நிறுத்துங்க. புத்தகத்தை காப்பாத்துங்க”.
முதலாளி அருகில் சென்று விட்டார்.
தொடர்ந்து மூச்சு வாங்க ஆரம்பித்தது. என்ன செய்வது என்று அறி£மலேயே மூச்சு வாங்கிய கோபாலகிருஷ்ணன் அப்படியே மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.
மயங்கிய நிலையில் விழுந்த அவரை தாங்கிப் பிடித்தான் சந்திரன்.
“ஏய் மிஷினை நிறுத்துங்கப்பா” முதலாளி வேகமாக சத்தமிட்டார்.
உடனே மிஷின் நிறுத்தப்பட்டது.
கோபாலகிருஷ்ணன் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. 10 நிமிடம் , ஹார்ட் அட்டாக்கா இருக்குமோ. பயந்தே போய் விட்டார் முதலாளி.
அந்த அளவுக்கு அவரது இதயம் படக் படக் கென்று அடித்தது.
தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தார் முதலாளி.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தார் கோபாலகிருஷ்ணன். “அய்யோ புத்தகத்தினை காப்பாத்துங்க” .
முதலாளிக்கு புரியவில்லை.
கோபாலகிருஷ்ணன் அவரை உற்று நோக்கினார்.
முதலாளிக்கு 25 வயது தான் இருக்கும். “தம்பி தம்பி புத்தகம் புத்தகம்”.
வரதன் ஆவியே இவர் உடலுக்கு புகுந்து பேசுவது போலவே இருந்தது.
“என்னய்யா சொல்றீங்க”.
“அரவை மிஷினை நிறுத்தச்சொல்லுங்க. புத்தகத்தை காப்பாத்துங்க”.
“அய்யா மிஷினை நிறுத்தியாச்சி. உங்க பிரச்சனை என்ன விவரமாக சொல்லுங்க”.
சந்திரன் பேச ஆரம்பித்தான். ஆனால் கோபாலகிருஷ்ணன் அவனை பேச விடாமல் தடுத்து விட்டு தானே பேச ஆரம்பித்து விட்டார்.
“என் நண்பன் வரதன் வீட்டில 2 ஆயிரம் புத்தகம் இருந்தது. எல்லா புத்தகமுமே சிறப்பானது. அதை எடைக்கு போட்டுட்டாங்க. அந்த புத்தகம் வேணும். தம்பி பிளிஸ் எவ்வளவு ரூபாய் வேணுமுன்னாலும் தாரேன். அரவை மிஷினுக்கு அனுப்பிடாதீங்க”
முதலாளிக்கு எல்லாமே புரிந்தது.
சிரித்தார்.
“அய்யா என் அப்பா எனக்கு 20 வயது இருக்கும்போது இந்த தொழிலை என் கையில் கொடுத்து விட்டு இறந்து போய் விட்டார். அவர் என்னிடம் சொன்னது. நல்ல புத்தகம் நல்ல நண்பர்கள் மகனே. அதனால் நல்ல புத்தகம் எதுவும் வந்தால் அதை பிரிந்து பழைய புத்தக கடை நண்பர்களுக்கு விற்பனைக்கு அனுப்பு. கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அப்படியே இல்லாட்டியும் உனக்கு நல்ல லாபம் கிடைத்தாலும் கிடைக்காட்டாலும் பரவாயில்லை கை பணம் போட்டு வாங்கி அதை நூலகத்துக்கு அனுப்பு. எந்த காரணத்தினையும் கொண்டு அரைத்து விடாதே என்பார். ஒரு எழுத்தாளன் ஒரு நூலை எழுதுவது அவ்வளவு கடினம். அதை அழித்து விடாதே என்பார். அதை இப்போதும் நான் கடை பிடிச்சிக்கிட்டுத்தான் இருக்கேன்.
அதுபோலவே தான் இந்த புத்தகத்தனை பார்த்தேன். 2000 ஆயிரம் புத்தகம் ஒருவர் சேர்த்து வைத்திருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார். அனைத்தும் அருமையான புத்தகம். இதை சேர்க்க இந்த மனிதன் என்ன பாடு பட்டு இருப்பார். எனவே எனக்கு சிந்தனை வந்தது.
லோடு மேனிடம் இந்த புத்தகத்தினை பற்றிக் கேட்டேன், அவருடைய பையன்தான் இந்த புத்தகத்தினை எடைக்கு போட்டார் என்று கூறினார். அப்போதே புரிந்துகொண்டேன். இந்த புத்தக்தை சேமித்த மகான் மிகப்பெரியவர். அவர் அருமை குடும்பத்துக்கு தெரியவில்லை என புரிந்து கொண்டேன். எனவே அவர் புத்தகத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். எனவே அதை எல்லாமே தனியாக எடுத்து வைத்திருக்கிறேன்.
என்றார்.
“வாட்சுமேனை பார்த்து நீங்க போங்க” என்று கூறினார்.
வாட்சுமேன் கேட்டை நோக்கி கிளம்பினார்.
புத்தகத்தை பார்த்தவுடன் அதை ஒடிப்போய் கட்டி பிடித்துக்கொண்டார் கோபாலகிருஷ்ணன்.
“வரதா உன் புத்தகத்தை காப்பாற்றி விட்டேன்”. என கதறி விட்டார்.
சந்திரன் மெய் மறந்து நின்றான். தான் ஒரு உதவி கேட்டு வந்தால், அவர் இல்லை. அவர் இல்லையென்றாலும் அவர் ஆசையை பூர்த்தி செய்ய ஒரு அணிலாய் இருந்து விட்டேன் . மகிழ்ச்சியாக இருந்தது.
கம்பேனி முதலாளி. வேலையாளை அனுப்பி இரண்டு பேருக்கும் டீ வாங்கிட்டு வா என அனுப்பினார்.
அதன் பின் இருவர்களையும் கூட்டிக்கொண்டு அலுவலகத்துக்குள் வந்தார்.
ஏ.சி.போட்டு விட்டு அமர ஆரம்பித்தார்.
கோபாலகிருஷ்ணன் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்தது.
சிரித்தார் முதலாளி. 25 வயது வாலிபன் போல அவர் தெரியவில்லை. மிகப்பெரிய மகானாக இருந்தார்.
முதலாளியே பேசினார்.
ஒரு காலத்தில் படிக்கு செய்தி தாளை மட்டும் தான் பார்சல் அனுப்புவார்கள். புத்தகத்தினை அனுப்பவே மாட்டார்கள். அப்படியே புத்தகம் அனுப்பினாலும், அதை நன்கு பார்த்து வார இதழ் போன்றவை என்றால் மட்டுமே பார்சல் போடுவார்கள். அதிலேயும் நல்ல செய்தி என்றால் அந்த பேப்பரை எடுத்து வைத்துக்கொள்வார்கள்.
தொடர்ந்து முதலாளியே பேசினார்.
“முன்பெல்லாம் திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் முதற்கொண்டு அனைத்து இனிப்பகங்கள், பலசரக்குக்கடை போன்றவற்றில் பலகாரங்கள், பொருட்களை தாளில் பொட்டலமிட்டுத்தான் கொடுப்பார்கள். பலசரக்குக் கடைக்கு வேலைக்குப் போகணும்னா பொட்டலம் போடத் தெரிஞ்சிருக்கணும். அதைத்தான் முதலில் சொல்லிக் கொடுப்பாங்க”.
கோபாகிருஷ்ணன் தொடர்ந்தார். “நான் கிராமத்தில சின்ன பிள்ளையா இருக்கும் போது பொட்டனம் பொட்டனமாகத்தான் இருக்கும். 5 பைசாவுக்கு கடுகு பொட்டனம், பெருஞ்சீரகம், சீரகம், மிளகு, காப்பித்தூள், புகையிலை எல்லாமே பொட்டனம் தான். எண்ணை வாங்க வருவாங்க. 100மிலி எண்ணெய் வாங்க பாட்டில் கொண்டு வருவாங்க. இல்லாட்டி அதுக்க தக்க போனி கொண்டு வருவாங்க. காய் கறி வாங்க பை கொண்டு வருவாங்க. இல்லாட்டு பாட்டி தன்னோடு முந்தானையில வாங்கின சாமானை கட்டி கொண்டு போவங்க. தாத்தா வந்தா தூண்டில தான் சாமான்கள கட்டுவாரு. வெளியூருக்கு பொருள் கொண்டு போன நாரு பெட்டி. எல்லாமே மக்கும் பொருள். இன்னைக்கு பாத்தியளா. மக்கு பயலுவ மக்கும் பொருளை விட்டுட்டு மக்கா பொருளுக்கு வந்து சுற்று புரத்தினையே சீரழிச்சிட்டானுவ.”
“உண்மைத்தான் அய்யா. என்னைக்கு இந்த பாழாப்போன பிளாஸ்டிக் வந்தததோ அன்னிக்கே பொட்டலம் வழக்கொழிஞ்சுப் போச்சு. இப்ப எதுக்கெடுத்தாலும் பிளாஸ்டிக் கவர்தான். பண்டம் வாங்குற கடை, பருப்பு, அரிசி, பலசரக்கு வாங்குற கடை என எங்கெங்கிலும் பிளாஸ்டிக் கவர் மயம்தான்! சாப்பாடு பார்சல் வாங்குற இடத்திலயும் சட்னி, சாம்பார், கூட்டு, பொரியல் என சகலத்துக்கும் பிளாஸ்டிக்தான். இதுனால கெடுதல் நெறய. கெடுதல் இருக்குண்ணு எவ்வளவு சொன்னலும் கேட்கவே மாட்டங்காங்க”. சலித்துக்கொண்டார் முதலாளி.
இந்த சின்ன வயதில் எவ்வளவு அறிவு. பொது அறிவு எல்லாமே அவரோட தந்தை சொல்லிக்கொடுத்தது. நல்ல பழக்க வழக்கம்.
முதலாளி தொடர்ந்தார், ” முதல்ல சூடா உணவுப் பதார்த்தத்தை ஊத்துறதுல பிளாஸ்டிக் கொஞ்சம் இளகி நம்ம உடலுக்குள்ள போகுது. இது கேன்சர் விளைவிக்கும் நச்சப்பொருளா உருமாற்றமடைகிறது. பாவம் கொத்துவேலை, தச்சு வேலை மாதிரி வேலைபார்க்கிறவங்க பார்சல் டீன்னு இதுல வாங்கி வந்து குடிக்காங்க. நச்சுப்பொருள் தினமும் உடம்புல வெலவாசி மாறி ஏறிக்கிட்டே இருக்கு. அப்புறம் இந்த பிளாஸ்டிக் பைகளை தனியா இதுவரைக்கும் பிரிச்சு மறுசுழற்சி செய்ய முயற்சிக்கல்ல ,இதுவரைலயும் முடியவும் முடியல. ஆரம்பத்துல கொஞ்சம் இருந்தது. இப்போ காணவே காணோம்”.
“என்ன செய்ய தம்பி திருடனை பாத்து திருந்தினாத்தான் திருட்டை ஒழிக்க முடியுமுன்னு சொல்லுவாங்க. அது மாதிரிதான். நம்ம முந்தின அரசு எடப்பாடி முதல்வரா இருக்கும் போது பிளாஸ்டிக் ஒழிப்பு கட்டாயமுன்னுகொண்டு வந்தாங்க. ஆனா என்னாச்சி. ஒரு கதையும் நடக்கல. பிளாஸ்டிக்கு பிரச்சனை ஏற்பட்டுக்கிட்டே இருக்கு தம்பி”.
கோபாலகிருஷ்ணன் விடவில்லை. முதலாளியும் தன் ஆதாங்கத்தினை கொட்டி தீர்த்தார். “பைகள் மழைத்தண்ணீரை பூமி உறிஞ்சவிடாம தடுக்குது. மழைவரத்து கொறையுது. தண்ணித் தட்டுப்பாடு தலை விரிச்சாடுது. இதனால சண்டை பிடிக்க வேண்டியிருக்கும். கூடிய வரை நாம இந்த பிளாஸடிக் பைகளை வாங்காம தடுப்போம். சும்மா 40 மைக்ரானுக்கு மேல உபயோகப்படுத்துறதுல தப்பில்லைன்னு சொல்றத எல்லாம் ஏத்துக்க முடியல. வீட்டிலேயே மட்கும், மட்காத பொருள்னு பிரிச்சு வைச்சு, அதை அப்படியே துப்புரவுப் பணியாளர்கிட்ட கொடுக்கணும். அவர் அதைத் தனியா பிரிச்சு தனித்தனியா வைச்சு மறுசுழற்சிக்கு பயன்படுத்தணும். அரசு படிப்படியா மதுவை ஒழிக்கேன்னு சொன்ன மாதிரி இந்த உற்பத்தியை படிப்படியா கொறைக்கணும். இல்லீண்ணா குடிதண்ணீக்கு சண்டை போடவேண்டி வரும். அரசும் திட்டமிடணும், மக்களும் ஆதரவு தந்த ஒத்துழைப்பு கொடுக்கணும்”.
என்றார். கோபாலகிருஷ்ணன் தொடர்ந்தார்.
“எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணாச்சி பலசரக்கு கடை வைச்சி இருக்காரு. சில்லறைக்கு அரிசி வாங்கும் அனைவருக்கும் தாள்ப் பொட்டலத்திலேயே அரிசியை பொட்டலம் போட்டுக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவரிடம் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு இல்லவே இல்லை. கேட்டதற்கு யார் யாரெல்லாமோ என்னவெல்லாமோ முயற்சி செய்யும்போது நான் இதை என்னுடைய முயற்சியா பண்றேன்னு பணிவுடன் சொல்லுவாரு”.
“பாளையங்கோட்டையில ஒரு பொறிகடலை கட இருக்கு. அந்த கடையில விதவிதமா கடலை கிடைக்கும். ஆனா அதையெல்லாம் அப்படியே தாளில பொட்டலம் போட்டுத்தான் கொடுக்காங்க இதுவரைக்கும் மாறல- அதபோலவே எல்லோரும் மாறணும். உண்ணும் உணவுப்பொருள் உற்பத்தியைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பையை தடுப்பதுல நம்மாலான எளிய பங்குன்னு” சொன்னார் முதலாளி .
பாராட்டப்பட வேண்டியவர் மட்டுமல்ல, இவரை கண்டு நாமும் பின்பற்றவேண்டும்.
சந்திரனுக்கு ஒரு சந்தோஷம் எப்படியோ புத்தகத்தினை காப்பாத்தியாச்சி. இப்போ இரண்டு பேரும் நல்ல காரியத்தை பேசிக்கிட்டு இருக்காங்க. இதுபோல நல்லவங்க இருக்கப்போயித்தான் நல்ல மழை பெய் யுது.
நாமும் இன்றுமுதல் பிளாஸ்டிக் கேரி பேக்கினை வாங்குவதைத் தவிர்ப்போம். என தனது மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டு வந்தான்.
அப்போது டீ கொண்டு வந்தான் பையன்.
அண்ணாச்சியோ டீ.
“ஏலே கெடுத்துப்புட்டியே இவ்வளவு நேரம் நாங்க. மாங்கு மாங்குன்னு பேசிக்கிட்டு இருக்கோம் ஒரு நிமிசத்தில உடைச்சி புட்டியே” சந்திரன் சிரித்தான்.
பிளாஸ்டிக் கப்பில் டீ இருந்தது.
“இங்க பாருடா நம்ம உலகத்தை பத்தி, திருத்தி விட பேசிக்கிட்டு இருக்கோம். இந்த நேரமே பிளாஸ்டிக் நம்ம கம்பேனிக்குள்ள நுழைஞ்சிட்டு பாருங்கய்யா”.கோபாலகிருஷ்ணன் விரக்தியாக பேசினார்.
“டேய் பேப்பர் கம்பேனிக்குன்னு சொன்னீயா. சொல்லியுமா முதலாளி இந்த பிளாஸ்டிக் கப்பில டீ கொடுத்து விட்டாரு”. முதலாளி அதட்டினார்.
அந்த பையன் திரு திருன்னு முழித்து கொண்டிருந்தான்.
அப்போது கண்ணாடி டீ டம்ளருடன் டீயை கொண்டு வந்தபடி ஓடியே வந்தார் முதலாளி.
“ஏலேய் அறிவு கெட்டவனே முதலாளி என்னைகுல்ல பிளாஸ்டிக் கப்பில டீ குடிச்சாவ. கொண்டு போலே அவுகளுக்குநான் நான் டீ கொடுக்கேன்”. என்று கண்ணாடி டம்ளரை கொண்டு வைத்தார்.
பையன் திருதிருவென்று முழித்த படி பிளாஸ்டிக் கப்புடன் திரும்பினான்.
“ஏன் செட்டியாரே எனக்குன்னு ஒண்ணு மத்தவங்களுக்குன்னு ஒண்ணா. பேசமாக பிளாஸ்டிக் கப் கிடையாதுன்னு சொல்லிற வேண்டியது தானே”. முதலாளி கேட்டார்.
“அதை ஏன் கேட்கீறீங்க முதலாளி. நானும் சொல்லித்தான் பாக்கேன். எவன் கேக்கான். யோவ் செட்டியாரை அடுத்தவன் குடிச்ச கிளாஸை கழுவி கழுவி எனக்கு தாறீரோ. எனக்கு கொரானா வரப்போவுது. பேசாமா பிளாஸ்டிக் கப் தாருமுவே. அதுதான் யூஸ் அன் தூரோ என்கிறான். பொறவு என்ன செய்ய . நான் பிளாஸ்டிக் கப் கொடுக்கலேன்னா வேற கடைக்கு போயிருவானுவ. வியாபாரம் விழுந்து போவும் முதலாளி. நீங்க மன்னிச்சிருங்க. உங்களுக்கு கண்ணாடி கிளாஸ்ல தான் தரு«வ்ன்”. என்றார் செட்டியார்.
“பாருங்க அண்ணாச்சி. இந்த நாட்டை எப்படி திருத்த . ஒரு காலமும் திருத்தவேமுடியாது”.
அனைவரும் அமைதியாக டீ குடி த்து முடித்தனர்.
“செட்டியாரே நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதேயும். இப்போ அரசே தாள் கப்பு தயார் பண்ணி கொடுக்காங்க. அதுல வாங்கி டீ குடிக்க சொல்லுங்க. அதை பொறுத்தவரைக்கும் மகளிர் சுய உதவி குழு காரங்க உற்பத்தி செய்றாங்க. அவங்களுக்கு ஒரு வாழ்வு கொடுத்த மாதிரி இருக்கும்” என்றார்.
செட்டியார் தலையை ஆட்டினார். அதன் பின் டீக்கு காசு வாங்கி கொண்டு திரும்பினார்.
“தம்பி தப்பா நினைக்காதீங்க. இந்த புத்தகத்துக்கு நான் எவ்வளவு தரணும்”.
கோபாலகிருஷ்ணனை சிரித்த படி பார்த்தார் முதலாளி.
“அண்ணாச்சி. எனக்கு காசு எதுவும் தரவேண்டாம். இந்த 2000 புத்தகத்தையும் எடுத்து போய் பத்திரப்படுத்துங்க. திரும்பவும் தப்பான ஆள்கள் கையில கிடைக்காம பாத்துக்காங்க”
“சரி தம்பி. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள நான் இந்த புத்தகத்தை எடுத்துக்கிறேன். அதுவரைக்கும் பத்திரமா பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு இருவரும் விடை பெற்றனர்.
வரதன் ஸார் நினைவாக அந்த நூல்களும் கோபாலகிருஷ்ணனை பார்த்து சிநேகமாய் சிரித்தது.
இருவரும் வெளியே வந்தார்கள். காரில் ஏறினார் கோபாலகிருஷ்ணன் “எங்கே போக. அண்ணாச்சி” சந்திரன் கேட்டான்.
“நேரே கலெக்டர் ஆபிஸ் விடு”.
“சரி அண்ணாச்சி”.
கார் கிளம்பியது. சிறிது நேரத்தில் மெயின் ரோட்டை தொட்டது. இருவரும் அமைதியாக இருந்தார்கள். சந்திரன் தான் பேசினான். “அண்ணாச்சி கலெக்டர் ஆபிசுக்கு எதுக்கு”
“சொல்றேன். அதுக்கு முன்னாலே நீ.யாரோ எவரோ தெரியலை. நீ ஏழையோ பணக்காரனோ தெரியலை. முதலில் உன் காரில் பெட்ரோல் இருக்கோ இல்லையோ தெரியலை. முதலில் காரில் பெட்ரோலை நிரப்பு நான் காசு கொடுக்கிறேன். ஏன்னா இன்னைக்கு இந்த புத்தகத்தை நல்ல இடத்தில கொண்டு சேர்க்க தண்டியும், நீ என் கூட இருக்கணும்.”
அருகில் உள்ள பெட்ரோல் பல்கில் கார் நின்றது. புல் டாங்க பெட்ரோல் நிரப்ப பட்டது.
பணத்தினை கோபாலகிருஷ்ணன் கொடுத்தார்.
“கார் மகராஷ்ரா ரிஜிஸ்ரேசன் மாதிரி தெரியுதுடே. இங்கே எதுவும் சவாரி வந்தீயா?”
சந்திரன் சிரித்தான். தனது கதையை ஆரம்பிக்கும் போதே, கோபாலகிருஷ்ணன் பிடித்துக்கொண்டார். “ஓ. நீ. மும்பை கடத்தல் கும்பலை பிடிச்சி தமிழ் பெண் முத்துகிளியை காப்பாத்து பையனா” என்றார்.
“ஆமாம் அண்ணாச்சி”.
“வெரி குட். ரொம்ப நல்ல காரியம் பண்ணினே. நம்ம தமிழர்களுக்கே பெருமை தேடி தந்துட்டே”
சிரித்தான் சந்திரன்.
“சரி. நீ. ஊருக்கு போவலையே. இங்கேயே கிடந்து சுத்துத”
லிங்க நாடார் கதையை சொன்னான். “அண்ணாச்சி. பனையில இருந்து விழுந்து இறந்தா அரசு உதவி தொகை கிடையாதா? அதுவும் 65 வயசுக்கு மேலே போனா முதலமைச்சர் நிவாரண நிதி கிடைக்காதா? என்ன?. சொர்ணகிளி சித்தி பாவம். அவங்களுக்கு எல்லாமே பொட்டை பிள்ளைகத்தான். ஏதாவது செய்யணும். அது தான் சுத்திக்கிட்டு இருக்கேன். வரதன் அய்யா நிறைய ஐடியா சொல்வாரு. உதவி செய்வாருன்னு சொன்னாங்க. அவிய கிட்ட ஐடியா கேட்கத்தான் வந்தேன்” சந்திரன் அப்பாவியாக பேசினான்.
யோசித்தார். உண்மைதான். இதற்கு வரதன் இருந்தா நிச்சயம் நல்ல பதில் சொல்லியிருப்பான். இல்லையே.
கோபாலகிருஷ்ணன் விரக்தியாக சிரித்தார்.
“அரசு இயந்திரத்தில் நிறைய ஓட்டை இருக்கு. இப்போ இந்த புத்தகத்தை முழுவதும் அரசு நூலகத்துக்கு கொண்டு கொடுக்கலாமுன்னு நினைச்சேன். ஆனால் நூலகத்தில இந்தநூல் பாதுகாப்பா இருக்குமா? அரசுகொடுக்கிற நூலே சரியா பராம”ரிக்கலையே. அப்படி இருக்கும் போது நாம இலவசமாக கொடுக்கிற நூல் பராமரிக்கப்படுமா?
யோசித்தார்.
அப்போது தான் நண்பர் காளிமுத்து நினைவு வந்தது.
காளிமுத்து என்.ஜி.ஓ காலனியில் இருக்கிறார். அவர்ஒரு ஓவியர். பழைய பொருள் சேகரிப்பாளர். நிறைய பொருளை சேகரித்து வைத்திருக்கிறார். நிறைய நாணயம் அவரிடம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. பழைய செய்தி தாள்கள் முதல் பல முக்கிய விஜயங்களை சேகரித்து வைத்துள்ளார். முன்பே கேள்வி பட்டிருக்கேன். 20 லட்ச ரூபாயிக்கு வீடு கட்டி அது முழுவதும் பழைய பொருளை சேர்த்து வச்சி அருங்காட்சியகம் வைச்சி இருக்காராம். அவரிடம் இந்த நூலை ஒப்படைத்து விடலாம். வீடும் பெரிதாக இருக்கும். நூலையும் பத்திரமா வச்சி கிடுவாரு. அவரிடம் போய் கேட்போம் என்று நினைத்தார்.
எனவே காரை என்.ஜி.ஓ காலனி நோக்கி விடச்சொன்னார். சந்திரனும் அவர் சொன்ன இடத்தினை நோக்கி காரை செலுத்தினார்.
சரியாக 10 வது நிமிடத்தில் காளி முத்து வீட்டு முன்பு கார் நின்றது. இவர் காலிங் பெல்லை தொட்ட வுடன் காளிமுத்து கதவை திறந்தார்.
கோபாலகிருஷ்ணனை பார்த்த வுடன் ஒரே சந்தோசம்.
“என்னடா. எப்படி இருக்கே. பாத்து எவ்வளவு நாளாச்சி” எனறு சிரித்தார்.
அதன் பின் இருவரையும் உள்ளே அழைத்து வந்தார்.
அது மிகப்பெரிய ஹால். அந்த கால் முழுவதும் பழைய பொருள்கள், லைட்டுக்கள் என நிறைய சேகரித்து வைத்திருந்தார்.
“வீட்டில் யாரும் இல்லை”. கோபாலகிருஷ்ணன் கேட்டார்.
“பையன் அபுதாபில் பெரிய வேலையில் இருக்கிறான். அவன் குடும்பம் அங்கேயே செட்டில் ஆகிட்டு. இளையவன் குவைதில இருக்கான். அவன் குடும்பமும் அவனோடத்தான் இருக்கு. பெண்ணை டெல்லியில கட்டி கொடுத்தாச்சு. நான் தனியாத்தான் இந்த வீட்டில இருக்கேன்”. சிரித்தார் காளிமுத்து.
கோபாலகிருஷ்ணனுக்கு கேட்க ஒரு மாதிரியா இருந்தது.
ஆனாலும் புரிந்து கொணடார் முகமது அலி. “என் மனைவி பற்றிதானே கேட்க போறே. இப்போ இல்லை. இறைவன் எடுத்துக்கிட்டார்”.
சங்கடத்துட்ன் திரும்பினார் கோபாலகிருஷ்ணன். அருகில் உள்ள சுவரில் பெரிய அளவில் அவர் மனைவி சந்தன மாலைக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்.
சிரித்தார் காளிமுத்து. “இறைவன் எது செஞ்சாலும் நல்லதுக்கே செய்வான். இப்போ முழுக்க பொருள் சேகரிப்புத்தான்.
சந்திரன் அப்படியே அந்த இடம் முழுவதும் சுற்றிப்பார்த்தான். பழைய பழைய விளக்குகள்.
அந்த காலத்தில் கோயில் கொடைவிழாவில் வெளிச்சத்துக்காக மக்கள் சுமந்து செல்லும் பொட்ரோமாக்ஸ் லைட், அலங்காரத்துக்கு தொங்க விடப்பட்டிருக்கும் கண்ணாடி அலங்கார வளைவுகள். சைக்கிளில் வைக்கப்பட்டிருக்கும் டைனோமோ லைட், அதற்கு முன் எரியும் மண்ணெணெய் விளக்கு. கப்பலில் பயன்படுத்தும் விளக்கு. 100 வருடத்துக்குள் முன்பு தெருவில் எரிய வைத்திருக்கும் விளக்கு. அரிக்கேன் விளக்கு, லாந்தர் விளக்கு என பல விளக்குகள் அங்கே காணப்பட்டது. “பாவி மனுசன் இதை வச்சி என்ன செய்ய போறாரு” சந்திரன் அப்பாவியாக மனதுக்குள் நினைத்தான்.
காளி முத்து தொடர்ந்தார்.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)