
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாசரேத்தில் மின்பகிர்மான அலுவலகம் ஊரின் மேல்புறத்தில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மின் பகிர்மான அலுவலகத்தின் மூலம் இந்த பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் ஐந்து பேர் பணி சுழற்சி முறையில் மின்பாதை ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் உள்ள காமாட்சிநகரைச் சேர்ந்தவர் ஆனந்தபாண்டி. இவர் நாசரேத் மின்பகிர்மான அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 7 மணி வரை பணிக்காக ஆனந்தபாண்டி பணியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை மாற்றுப்பணிக்காக மற்றொரு ஆய்வாளர் பணிக்கு வந்துள்ளார். அப்போது அலுவலகத்தின் உள்ளே ஆனந்தபாண்டி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனே அவர் நாசரேத் போலிசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆனந்தபாண்டி உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையான ஆனந்தபாண்டி உடலில் தலை, கழுத்து, முதுகு போன்ற இடங்களில் 10க்கும் மேற்பட்ட இடத்தில் வெட்டுக்காயம் உள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட ஆனந்தபாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதில் இரவு நண்பர்களை அழைத்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகறாரில் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதாவது முன் பகை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.
இந்த நிலையில் ஒருநாள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் கொலையாளிகள் குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் போலிசார் திணறி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.