
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போட ஆள் இல்லை என கூறி டெய்லர் கடையில் துணி வாங்கி கட்டிச் சென்றதாக கூறி ஒருபர் வெளியிட்ட வீடியோ சமூக வளைதளங்களில் வைரல்.
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் உடல் நலனை பாதுகாக்கும் மையமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு தூரத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் மகப்பேறு உள்ளிட்ட அவசர கால சிகிச்சைகளுக்கு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் வந்து செல்லும் நிலை இருந்து வந்தது.
ஆனால் தற்போது, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் முதல் மருத்துவர்கள் வரையிலான காலிப் பணியிடங்களினால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகிறார்கள்.
மகப்பேறு மற்றும் அவசரகால சிகிச்சைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் இல்லாத நிலையில் மேல் சிகிச்சைகளுக்காக என வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து நோயாளிகளை அனுப்பி விடும் அவலம் தொடர்கிறது.
மேலும், வெளி நோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் பணியாளர்கள் மற்றும் காயம் ஏற்பட்டவர்களுக்கு மருந்து போடும் பணியாளர்கள் என அடிப்படை பணியிடங்களுக்கு கூட பணியாளர்கள் பற்றாக்குறையால் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபடாததால் சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதும் தொடர்கிறது.
இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீவைகுண்டம் முன்னீர்காலனியை சேர்ந்த முருகேசன் என்பவர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போட சென்றபோது அங்கு மருந்து கட்ட ஆள் இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பியதால் அருகில் இருந்த டெய்லர் கடையில் பழைய சட்டை துணியைக் கிழித்து கட்டியுள்ளதாக வேதனையுடன் பேசும் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மழைக் காலத்திற்கு முன்பாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையையும் விரைவுபடுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் தீர்க்கப்படாத கோரிக்கையாக உள்ளது.