
மேகநாதன் தலைமறைவாக இருந்து வந்த காரணத்தால் படுக்கப்பத்தைச் சேர்ந்த மங்களா பொன்னம்பலம் தலைமையில் உடன்குடி பகுதியைச் சேர்ந்த வீரர்கள் செப்டம்பர் 16-ம் தேதி நள்ளிரவில் தாங்கையூர் அருகே இரகசியக்கூட்டம் நடத்தினர். அந்தக்கூட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தைக் கைப்பற்ற வேண்டும் எனத் தீர்மானித்தனர்.உடனே அங்கிருந்து புறப்பட்டு சாத்தான்குளத்தை நோக்கி நடந்தனர். அதற்குள் சாத்தான்குளத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஓடோடி வந்து “நமது திட்டம் எப்படியோ போலீசாருக்குத் தெரிந்து விட்டது; ஆகையால் சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் படையைக் குவித்து உள்ளனர். எனவே நீங்கள் அங்கே செல்ல வேண்டாம்” எனத் தடுத்துவிட்டனர்.
இதனால் அந்த இளைஞர்கள் மெஞ்ஞானபுரம் அஞ்சலகத்தை உடைக்க மெஞ்ஞானபுரம் சென்றனர். அங்குச் சென்ற உடனேயே தந்திக்கம்பங்களை அறுத்துவிட்டனர். பின்னர் கதவைத் திறக்குமாறு அஞ்சலக அதிகாரியை மிரட்டினர். அவர் பின்புறமாக வந்து திறப்பதாகக் கூறிவிட்டுச் சென்றவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தொண்டர்கள் தங்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டனர். இதற்குள் அஞ்சலகத்தில் தகராறு நடக்கும் விஷயம் ஒரு சிலருக்குத் தெரிய ஆரம்பித்தது. ஒருவர் ஓடிச்சென்று கோயில் மணியை அடித்துவிட்டார் இதனால் 500-க்கும் மேற்பட்டோர் கூடிவிட்டனர். மெஞ்ஞானபுரம் ஊர்மக்களில் பலர் விடுதலைப் போராட்ட வீரர்களைத் தாக்குவதற்கு முற்பட்டனர். அவர்களிடமிருந்து தப்புவதற்காக வீரர்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால் ஆங்காங்கே தீப்பற்றி எரிந்தது. வீரர்களைத் தாக்க வந்த கும்பல் உயிரைக்காப்பாற்ற சற்று பின்வாங்கிய நேரத்தில் பப்புக் கோநார் என்பவர் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு இளைஞர்களை அழைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
மெஞ்ஞானபுரம் அஞ்சலகம் தாக்கப்பட்ட செய்தி சாத்தாள் குளத்தில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்த ஆயுதம் தாங்கிய போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மெஞ்ஞானபுரம் வருவதற்குள் வீரர்கள் காட்டிற்குள் சென்று மறைந்து விட்டனர். உடன்குடி பகுதியில் நடைபெறுகின்ற அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் மேகநாதன் எனக் கருதிய வெள்ளை அரசு அவரின் தலைக்கு 10,000 ருபாய் என அறிவித்தது. ‘மேகநாதன் தலைமறைவாகி விட்டார், மேகத்திற்குள் மறைந்துவிட்டார் மேகநாதன்.” எனப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அவரை இறுதிவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. அவர் சில தினங்கள் உதவி ஆய்வாளர் இராமலிங்கம் பிள்ளை வீட்டிலும், சில தினங்கள் குலசேகரன்பட்டினம் மூன்று மாடி வீட்டிலும் ஒளிந்து இருந்து கொண்டு நண்பர்களுக்கு வழிகாட்டினார். போலீல் கைது செய்து விடும் என்பதை உணர்ந்த மேசுநாதன் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் ஆறுமுகநேரிப் பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஆறுமுகநேரியைச் சேர்ந்த பெரிய நாடார் மகன் ராஜகோபால், ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வெள்ளையா நாடார் மகன் காசிராஜன் மற்றும் இ.பி.தங்கவேல் ஆகியோர் உடன்குடிக்கு வந்து ஆதரவுக்கரம் நீட்டினர். இதனால் வீரர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றனர்.
(தொடரும்)