
இங்கிலாந்து தேசத்தில் இரண்டு கால்களும் முடமான, தன் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதபடி, அடைபட்டுக்கிடந்த ஒரு பெண் இருந்தாள்… அவள் பெயர் சாரா டக்கர்.
அவளால் ஒன்றுதான் செய்ய முடியும், ஒரு சாதாரண வீல் சேர்ல… ஆலயத்துக்கு செல்வாள். அப்போல்லாம் இப்போ உள்ள மாடர்ன் வீல் சேர் கிடையாது. சாதாரண சேர் தான்.
ஒரு நாள் தென்னிந்திய மிஷனரி ஜான் டக்கர் (சாரா டக்கரின் சகோதரர்) இங்கிலாந்தில் அந்த ஆலயத்தில் பேசினார்…
“தென் இந்தியாவில் பெண் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலைகளையும், சமுதாயக் கட்டுப்பாடுகளையும், விதித்து வைத்திருக்கிறார்கள். பெண்களை சிறு வயதிலேயே கோயிலுக்கு பொட்டுக் கட்டி, விட்டு வாழ்நாளெல்லாம் விபச்சாரி
ஆக்கப் படுகிறார்கள்” என்று அழுகையோடு சொன்னார். “பெண்கள் படிப்பது கேவலம் என்று
கருதுகிறார்கள்” என்றார்… நொறுங்கிய மனத்துடன்.
அந்த உரையைக் கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்தாள் சாரா. அவளுக்கு 20 வயது
இருக்கலாம். அவளின் அப்பாவின் பெயர்… டக்கர்.
அவள் ஆண்டவரிடம் சொன்னாள்… “ஆண்டவரே எனக்கு இந்தியாவுக்குபா போக ஆசையாய் இருக்கிறது… ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி, உங்கள் பிள்ளைகளைப் படிக்க வையுங்கள் என அந்தப் பெற்றோரின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் போல் இருக்குது, அறிவுக் கண்ணைத் திறந்தால் தானே ஒளி வரும்”
அவளுக்கு ஒன்று தோன்றியது…
அவள் இந்தியாவைப் பார்த்ததில்லை. திருநெல்வேலி மக்களைப் பார்த்ததில்லை. திருநெல்வேலி மக்களுக்காக ஏங்கினாள். அவள் உறவினரிடம் இது பற்றி சொன்னாள்.
அவள் தன் பிறந்த நாளை பரிசுகள் வாங்கிக் கொண்டாடவில்லை.. அதற்குப் பதிலாக பணமாகத் தாருங்கள் என்று பணத்தைச் சேர்த்தாள். தனது தோழிகளிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற 200 பவுன் நகைகளுடன் தனது 100 பவுன் நகைகளையும் சேர்த்து, ஒரு நாள் அவரது சகோதரர் அந்த மிஷனரி ஜான் டக்கருக்கு பணத்தை அனுப்பி
வைத்தாள்… சாரா.
அதில் உருவாகியதுதான்… சாரா டக்கர் ஸ்தாபனங்கள். இலவசமாகவே கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது.
இன்று… 4000 பிள்ளைகள் படிக்கும் பெரிய ஸ்கூலாக, கல்லூரியாக கம்பீரமாக நிற்கிறது.
அவள் இந்தியாவுக்கு வரவில்லை. திருநெல்வேலிக்கும் வரவில்லை.
அதில் படிக்கும் ஒவ்வொருவரும்… “நான் சாரா டக்கர் மாணவி” என்று பெருமையாகச் சொல்லுகிறார்கள்..
அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். இன்று உலகமே அவளின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
குலக்கல்வியை ஒதுக்கி வைத்துவிட்டு, பெண்களுக்கும் கல்வியை உருவாக்கியவர்தான் இந்த மகத்தான ஊனமுற்ற பெண் சாரா டக்கர்.