
சாத்தான்குளம் அருகே தசரா திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் பகுதியை சேர்ந்த பிச்சையா மகன் தூண்டில் மணி (40) என்பவருக்கும் பழங்குளம் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் முனியபாண்டி என்பவருக்கும் இடையே போன வருடம் நடந்த தசரா திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று திருவரங்கம் கல்லறை தோட்டம் அருகே வைத்து தூண்டில் மணி என்பவரிடம் முனிய பாண்டி மற்றும் அவரது நண்பர்களான பழங்குளம் பகுதியை சேர்ந்த சந்தோஷம் மகன் இசக்கிபாண்டி, சோமசுந்தரம் மகன் சிதம்பரம் (23), கண்டுகொண்டான் மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் பேச்சிமுத்து (21) மற்றும் சிலர் சேர்ந்து தகராறு செய்து தூண்டில் மணியை இரும்பு கம்பி மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரிடமிருந்த ரூ.4ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு, ரூ.8ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தூண்டில் மணி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து சிதம்பரம் மற்றும் பேச்சிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.