
தாமிரபரணி கரைக்கு எப்போதுமே ஒரு சிறப்பு உண்டு. அதிலும் ஸ்ரீவைகுண்டத்துக்கு கூடுதல் சிறப்பு. பூலோக கைலாயம் என்றும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் அற்புதமான ஊர். இந்த ஊரில் தோன்றியவர்தான் நல்ல கண்ணு அய்யா. மிக உயரிய பதவியிலிருந்தாலும் கூட காசுக்காக யாரிடமும் கை ஏந்தி நிற்காத அற்புத அரசியல் வாதி. தான் சார்ந்த தாமிரபரணி ஆற்று மணலை காப்பாற்றவும் நேரடியாக மதுரை உயர்நீதி மன்றத்தில் வாதாடி , மணலை காப்பாற்றப் போராடி வெற்றி பெற்றுத் தந்தவர். இவரைப் போன்றவர்கள் இருப்பதால் தான் தற்போதும் தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக உள்ளது என்றால் அது மிகையாகாது. அவருக்குக் கிடைத்த உயரிய பண பரிசுகளைத் தான் சார்ந்த கட்சிக்குக் கொடுத்து விட்டு கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காராக வாழுகிறார் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை. எப்போதுமே அய்யாவுக்கு என் மீது பாசம் உண்டு. நான் எழுதிய தலைத்தாமிரபரணி நூலைப் படித்துப் பாராட்டி விட்டு, அருமையாக இருக்கிறது . ஆனால் சுவாமி கதை ஏராளமாக இருக்கிறது என்று சிரித்துக் கொண்டே என்னிடம் கூறினார். அவர் சார்ந்த கொள்கை கடவுள் சாரா கொள்கையாக இருந்தாலும் கூட என்போன்ற எழுத்தாளர்களிடம் அவர் கொள்கைகளைப் புகுத்த மாட்டார் . நிறைய எழுது. நிறையப் படி. உன்னுடைய களப்பணி சிறப்பாக உள்ளது என உற்சாகப்படுத்துவார். தாமிரபரணி கரை மண்ணை காப்பாற்ற 5 வருடம் தடை உத்தரவு வாங்கியது. ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டு தூர் வாரும் போது நடந்த முறைகேட்டைத் தட்டி கேட்டது உள்பட பல்வேறு போராட்டம் இளைஞர்களுக்கெல்லாம் பாடமாக உள்ளது. அவரது நண்பர் நயினார் குலசேகரன் அய்யாவின் தாமிரபரணி விவசாயிகளும், அவர்களின் உரிமைகளும் என்ற நூலை நான் பதிப்பித்த போது அதற்குக் குறிப்பிட்ட காலத்தில் அணிந்துரை எழுதிக் கொடுத்து நூல் வெளியிட்டு விழாவிற்கும் வந்திருந்து பாராட்டினார்கள். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி எனக்குத் தமிழ் ரத்னா சிறப்பு விருதைத் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி அய்யா கரங்களால் பெற்று விட்டு, மேடையை விட்டு கீழே இறங்கியவுடன் தொலைப்பேசியில் முதல் பாராட்டு அய்யாவுக்குரியது தான். ஆதிச்சநல்லூர் புகழை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டாய். தொடர்ந்து பயணித்துக்கொண்டே இரு. வெற்றி நமக்கே என்று கூறினார். மிகப்பெருமையாக இருந்தது. எனக்குப் பெருந்தலைவர் காமராஜர் பெயரைத் தான் வைத்திருக்கிறார் என் தந்தை. நான் சிறுவனாக இருந்தபோது ஒரு தடவை காமராஜரைப் பார்த்து இருக்கிறேன். கறைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் என்று அவரை கூறுவார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து வாழும் காமராஜர் எங்கள் ஊர் அய்யா நல்ல கண்ணு அவர்கள் தான். அய்யா உங்களால் தான் தாமிரபரணியைக் காப்பாற்ற முடியும் நீங்கள் தாமிரபரணியின் பாதுகாவலன் மட்டுமல்ல எங்களை போன்றவர்களுக்கு வழிகாட்டி. ஆசி தாருங்கள் அய்யா நாங்களும் உங்கள் வழியில் வருகை புரிகிறோம். அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு