
நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கின்றது. இருமாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த ஆற்றில் மருதூர் அணை மற்றும் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இதில், மருதூர் அணையானது சுமார் 800 ஆண்டுகள் பழமையானதாகும். இவ்வணையில் கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும்.
இதேபோல், ஸ்ரீவைகுண்டம் அணை, விவசாயிகளிடத்தில் பணம் வசூலித்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 140 ஆண்டுகளுக்குமுன் அமைக்கப்பட்டதாகும். இவ்வணையிலும் பராமரிப்பு பணிகள் நடைபெறாத நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு தூர்வாரும் பணி தொடங்கியது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் வந்ததையடுத்து தூர்வாரும் பணிக்கு தடைவிதித்து 2017ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மேலும், பொதுப் பணித்துறையினரின் முறையற்ற தண்ணீர் விநியோக முறைகளினால் விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள பாசனக் குளங்களும் மழைக்காலத்தில் வரும் அதிகப்படியான வெள்ளநீரை சேமித்து வைக்க முடியாத அளவுக்கு தூர்ந்து போய் உள்ளன. இதனால், ஆண்டுதோறும் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வீணாக தண்ணீர் கடலுக்கு செல்வதை தடுக்க முடியாதது மட்டுமன்றி, கோடைக்காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடும், விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடும் தொடர்கிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பாசன குளங்கள் அனைத்தையும் தூர்வாரிட வேண்டும் என கோரிக்கை வருகின்றனர்.
இக்கோரிக்கை குறித்து நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கினைப்பாளர் வியனரசு கூறியதாவது: விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்பட்ட குளங்கள் அனைத்தையும் பாதுகாக்க பொதுப்பணித் துறையினர் தவறி விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 53 பாசனக் குளங்களிலும் 10டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும். ஆனால், சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால் கிடைத்த சுமார் 15 டிஎம்சி தண்ணீர் வீணாக ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி கடலுக்கு சென்றுள்ளது. மிகப்பெரிய குளமான தென்கரை குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களுமே முழு கொள்ளளவு தேக்க முடியாத அவலநிலை தொடர்கிறது. பாசன வாய்க்கால் மற்றும் குளங்களை சீரமைத்து புதிய தடுப்பணைகளை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பு குறித்து பொருநை நதிநீர் மேலாண்மை சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் கூறியதாவது: மருதூர் மேலக்காலில் இருந்து பாசன வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள குளங்கள் மூலம் 23-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், மருதூர் அணை நிரம்பி ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலையில், பாசன வாய்க்கால்களில் அமலைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பெரிய குளமான தென்கரை குளத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே நிலை வெள்ளூர் குளத்தில் இருந்தபோது, அப்போதைய வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள், குளத்தில் ஆக்கிரமித்து இருந்த கருவேலமரங்களை அகற்றியதால் கூடுதலாக தண்ணீர் சேமிக்க முடிந்தது. இந்நிலையில், மருதூர் மேலக்கால் தலைமதகு, வேலவன்குளம் பாலம், சென்னல்வெட்டி பாலம், வாகைக்குளம் பாலம் உள்ளிட்ட வாய்க்கால்களில் அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. எனவே அமலைச் செடிகளை அகற்றி பாசன குளங்களில் அதிகப்படியான தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றார்.