
திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிலுள்ள மருதூர் அணையின் மேலக்கால்-கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால்-தென்கால் பாசனவாய்க்கால்கள் மூலமாக சுமார் 46ஆயிரத்து 107ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் கடந்த 15வருடங்களுக்கு முன்பு வரை ”பிசானம், கார், அட்வான்ஸ் கார்” என முப்போக நெற்பயிர் சாகுபடி முறையாக நடைபெற்று வந்தது. இதனால் விவசாயப்பெருங்குடி மக்கள் ஒரளவிற்கு வருமானம் பெற்று வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடியிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் அனல்மின் நிலையங்களுக்கு 20எம்.ஜி.டி.திட்டத்தில் தினமும் 9கோடியே 20லட்சம் லிட்டர்(20மில்லியன் காலன்) தண்ணீர் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்ததிட்டம் பயன்பாட்டுக்கு வந்தபின்பு தாமிரபரணி பாசனக்கால்வாய்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதே அரிதாகி விட்டது.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல்-வடிகால் வாரியத்தினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக, விவசாயப்பெருங்குடி மக்களை திட்டமிட்டே வஞ்சித்தும், முறைகேடாகவும் அரங்கேற்றிவரும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளால் முப்போக நெற்பயிர் சாகுபடியானது ஒருபோக நெற்பயிர் சாகுபடியாக மாறிவிட்டது. மேலும், விவசாய நிலங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடிநீரானது உவர்ப்பாக மாறி விவசாயமும் நலிவடைந்து கொண்டே வருகிறது.
பாசன விவசாயப்பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாத்திடும் நோக்கத்தில் ”ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு நிரத்தரமாக தடை விதிக்கவேண்டும்” என்று கடந்தஆண்டு நான், தமிழக சட்மன்ற எதிர்கட்சி தலைவரும், எங்கள் செயல் தலைவருமான மாண்புமிகு., தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது ஆலோசனையின் பேரில் பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.
இந்த பொதுநல வழக்கின் அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் ”முக்கியத்தேவையான குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு போக தண்ணீர் மீதி இருந்தால் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கவேண்டும்.” மேலும், ஸ்ரீவைகுண்டம் அணையில் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தினாலும், சட்டவிதிமுறைகளுக்கு புறம்பாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்ட காரணத்தினாலும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க கடந்த வருடம் இடைக்கால தடை உத்தரவும் பிறப்பித்தது.இந்த வருடத்தில் தாமிரபரணி நதிக்கு தண்ணீர் தரும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளில் தற்போது போதுமான அளவிற்கு தண்ணீர் இருப்பில் இல்லை. அணைகளில் இருக்கிற குறைந்த அளவிலான தண்ணீரைக்கொண்டு இந்த வருடம் கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது என்பதே இயலாததாகும்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் பொதுப்பணித்துறையினர் அவ்வப்போது ”விவசாயத்திற்கு தண்ணீர் தேவை” என்று பொய்யான காரணத்தை சொல்லி அணைகளில் இருந்து தண்ணீரைப்பெற்று தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருவது கண்டனத்திற்குரியதாகும்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து 20எம்.ஜி.டி திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. வனத்துறையின் அனுமதியை மீறி, எக்காரணம்கொண்டும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கக்கூடாது என்று தமிழக வனத்துறை அமைச்சகம் பசுமை தீர்ப்பாயத்தில் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளது.ஆனால், இதனையெல்லாம் மீறியும், கடுமையான தண்ணீர் பற்றாக்குறை இருந்துவரும் சூழ்நிலையிலும் முழுக்கமுழுக்க தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக 20எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீரின் அளவானது குறைத்து வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கூறியிருப்பது பொதுமக்களையும், விவசாயப்பெருங்குடி மக்களையும் திட்டமிட்டே ஏமாற்றுகின்ற மோசடியான செயலாகும்.
மாவட்டத்தில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் விவசாயப்பெருங்குடி மக்கள் கடன்சுமையால் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். அன்னை தாய்மார்களோ குடிப்பதற்கு குடிதண்ணீர் கிடைக்காமல் காலி குடங்களுடன் பரிதவித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே விதித்துள்ள வழிமுறைகளின்படி ”ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும்”. இல்லையென்றால் இது பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவினை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டே அவமதிக்கும் செயலாகும்.
விவசாயப்பெருங்குடி மக்கள், பொதுமக்கள் நலனை பாதுகாத்திடுவதற்காக 20எம்.ஜி.டி. திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை தடுத்து நிறுத்துவதற்கான உத்தரவினை மாவட்ட நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பிறப்பித்திடவேண்டும் என்று கூறி உள்ளார்.