நிராகரிக்கலாமா
அழகுணர்ச்சியை?.
அதீத அழகுணர்ச்சியில் நிரம்பி வழியும் பதின்ம பருவத்தினரானபள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் எப்போதும் தங்களது தோற்றப் பொலிவை அதிகரிக்கச் செய்வதிலேயே பெருமளவு கவனத்தைச் செலுத்துகின்றனர்.
முகத்தில் சிறுபருக்கள் முளைத்து விட்டால்கூட தங்களது அழகனைத்தும் குறைவுபட்டு விட்டதாக எண்ணி வருந்துவர்.
இதனால் அவர்களுக்குள் ஏற்படும் மனச் சோர்விற்கும் , வெறுப்புணர்விற்கும் அளவே இராது.
மாணவர்களின் கை எப்போதும் அவர்களது தலைமுடியை சீரமைத்தலிலேயே இருக்கும்.தங்களது மொத்த அழகும் தலையில் தான் குடியிருப்பதென்ற நினைவிலேயே சுற்றிக் கொண்டிருப்பர்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதாக நினைத்து ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படும் இப்பருவத்தில் உணவைப் புறக்கணிக்கவும் தயங்க மாட்டார்கள். சக மாணவர்களோடு தங்களை ஒப்பிட்டுத் தனது தனித்தன்மைகளை இழந்து போலியானதொரு வாழ்க்கை முறையை அணிந்திருப்பர்.
முகக்களையை உண்டுபண்ணும்
அழகு சாதனப்பொருட்கள் மற்றும் ஆடை அலங்காரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் கொண்டிருப்பர்.
இதெல்லாம் இப்பருவத்தினருக்கே உரிய இயல்பான வளர்ச்சிமாற்றங்கள் தான்.
சீருடை
***
பள்ளிகளில் பலதரப்பட்ட மாணவர்களின் நலன் கருதி
சீருடை அணிதல் கட்டாயமாக்கப்பட்டிருப்பது அறிந்ததே.அதிலும்கூட மாணவர்கள் அதன் தைப்புமுறையில் நுணுக்கமான வேறுபாடுகளைக் காண்பித்து அழகுணர்ச்சியை வெளிப்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது. இவ்வாறு
எந்த வகையிலாவது தங்களைப் பிற மாணவர்களிடமிருந்து மாறுபட்ட அழகுடையவர்களாக காண்பித்துக் கொள்வதை இயல்பாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
எதிர்பாலினரின் கவனத்தைப் பெறவும், அவர்களால் அங்கீகரிக்கப்படுவதுமே நோக்கமாக இருப்பர். இத்தகைய அவர்களது மாற்றங்கள் அப்பருவத்தில் ஏற்படும் பாலியல் ஹார்மோன்களின் விளைவுகளேயென்றாலும் தங்களது முழு நேரத்தையும் சக்தியையும் இதற்காகவே செலவிடும் போக்கைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நெறிப்படுத்தல் அவசியம்.
அவர்களது மன இயல்பு, குடும்பச் சூழல், மற்றும் மரபு சார் வாழ்க்கை முறைகள் போன்றனவும் அவர்களுக்கிடையேயான தனித்தாள் வேறுபாடுகளுக்கான காரணமாக அமைகின்றது. எனவே இதெல்லாம் அப்பருவத்தினரின் இயல்பான வளர்ச்சி மாற்றங்கள் தான் என்ற புரிதல் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இருத்தல் அவசியம்.அப்போதுதான் அவர்களைச் சரியான பாதையில் எதார்த்தமாக நடத்திச் செல்ல முடியும்.
பொதுவானதே அழகுணர்ச்சி
***********
அழகுணர்ச்சி என்பது இருபாலருக்கும் பொதுவானது. இயல்பும்கூட.!
இத்தகைய பாலியல் சமநிலை ஏற்படுவதற்கான சமூகத்தின் மனம் மாற்றம் நன்முறையில் ஏற்பட்டிருப்பது ஏற்கத்தக்கது.
பெண்கள் வீட்டிற்குள்ளேயே ஆண்களைச் சார்ந்து வாழ்ந்த காலம் மாறி வேலை வாய்ப்புகளுக்காகவும் படிப்பிற்காகவும் வெளியேறி தங்களது வாழ்க்கை முறையை மாற்றியிருப்பதால் அவர்களது இயல்பான அழகுணர்ச்சியும் அதன் வெளிப்பாடும் மாறிவருகிறது.
பெரும்பாலும் ஆணினத்தின் அனைத்து உணர்ச்சிகளுக்கான வடிகாலாக மட்டுமே இருந்து வந்த பெண்ணினத்தை இன்று அத்தகைய தேவைகளுக்காக ஈர்க்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக வந்ததன் அவசியமே இந்த மாற்றங்களுக்கான மூலம்.
எது எப்படியோ, காலச் சக்கரத்தின் இந்த ஆரோக்கியப்பயணம் நமது இளம் தலைமுறையினரை இவ்வாறான இயல்பான வாழ்க்கை முறைக்குள் சென்றடைய வைத்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
மாணவர்களின் அழகுணர்வு
*************
இன்றைய மாணவர்களும் மாணவிகளுக்கு இணையாக தீவிர அழகுணர்ச்சியினால் கட்டுண்டு கிடப்பதையும் அதன் வெளிப்பாடாகத் தங்களைப் பலவிதங்களில் அழகுபடுத்தும் செயலில் ஈடுபடுவதும் முன்னெப்போதும் இல்லாதளவு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
முன்பெல்லாம் பெண்கள்தான் ஒப்பனைச் செய்துகொள்வதில் முதலிடம் வகித்து வந்தனர்.ஆனால்
சமீபக் காலமாக ஆண்களும் தங்களது தலைமுடியைப் பலவிதங்களில் வெட்டிக்கொள்வதிலும்,நிற மாற்றங்கள் செய்து அலங்கரித்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக இந்நிலை விடலைப்பருவம் தொடங்கி கிட்டத்தட்ட முப்பது வயது வரை நீடிக்கிறது என்றே கூறலாம்.இவ்வயதினர் தங்களது ஒட்டுமொத்த அழகும் தலைமுடியில்தான் இருப்பதாக கருதுகின்றனர். இதுஅவர்களது ஒருவகையான அழகுணர்ச்சி மிகுதியினால் ஏற்படும் மாற்றங்கள்தான்.
பள்ளியில் அழகு சாதனப் பொருட்களை மறைத்து வைத்து முகத்தில் பூசிக் கொள்வதும் தலைமுடியைப் பலவாறு அலங்கரித்துக் கொள்வதும், பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆசிரியர்களின் வாகனக் கண்ணாடிகளைச் சுற்றியே தவம் கிடப்பதும் அதிகரித்து வருகிறது.
“மாணவர் மையக் கல்வி” கட்டாயமாக்கப்பட்டப் பின்னர் ஆசிரியர், மாணவர் உறவு குரு சிஷ்யன் என்ற நிலையிலிருந்து நண்பர்கள் என்ற உறவாக மாற்றங்காண்கின்றது. இது மாணவர்களின் சுதந்தரத்தைக் கட்டுப்படுத்த இயலாத அளவு அதிகரித்து ஒழுங்குப் பிரச்சனைகளையும் ஏற்படுத்திவருவது ஒருபக்கம் இருந்தாலும்,பள்ளிச்சூழல் மாணவர்களின் மன உணர்வுகளுக்கு இடமளித்து அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது என்பதும் உண்மை. இம்மனநிலை அவர்களது கல்வி வளர்ச்சிக்கும் கற்றல் திறனுக்கும் மிக அவசியமானதே.
நல்லொழுங்கு என்ற பெயரில் கடைபிடிக்கப்படும் பள்ளி ஒழுங்கு விதிகள் பல நேரங்களில் மாணவர்களின் கற்றலுக்கு எதிரானதாகவே அமைகின்றது.அதிலும் அவர்களது அழகுணர்ச்சிப் போன்ற உணர்வுகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அவர்களை மனப்பிறழ்சிக்கு வழி வகுத்து விடுகிறது.
நானறிந்த மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாறுபட்ட விதத்தில் முடி அலங்காரத்துடன் வந்திருந்த மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியரின் அறைமுன்பு தண்டனைக்குரியவனாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். அவன் கூனிக் குறுகி எவரையும் ஏறிட்டுப் பார்க்காமல் நின்றிருந்ததைக் கவனித்தேன்.
“எத்தனையோ முறை அறிவுறுத்தியும் இப்படி ஒழுங்கீனமாக வரும் இவர்களை வேறென்ன செய்வது?” என்றும் அவ்வாசிரியர் தனது வருத்தத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்.
ஆனாலும் அம்மாணவனின் அந்தப் பரிதாபமான பார்வையும், குற்ற மனப்பான்மையோடான உடற்மொழியும் என்னை விட்டு அகலவே இல்லை.
பள்ளி விதிமுறைகளை மீறி மாணவர்கள் தங்களது அதீத அழகுணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாமல் செயல்பட்டுவிடும் இத்தகைய செயல்களை மிகக் கவனமாக ஆசிரியர்கள் கையாண்டாக வேண்டும்.
பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கைகள் அவசியம் தான் இருப்பினும் அவை வளரிளம் பருவத்தினரின் மனமுறிவை ஏற்படுத்திவிடுமளவு அமைந்து விடக் கூடாது. இதுபோன்ற நிலைமைகளில் கோப உணர்ச்சியால் வெகுண்டெழும் மாணவர்கள் தங்களைக் கண்டிக்கும் ஆசிரியர்களை நேரடியாகவே எதிர்க்கும் மனப்பான்மைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஆசிரியர்களையும், மாணவர்களையும் மிக மோசமாகப் பாதித்தது விடுகின்றது.
சிகையலங்காரம்
*******
மனிதர்களை அழகாக காட்டுவதில் தலைமுடி முக்கிய இடம் வகிக்கிறது.இதனால் தலைமுடியைப் பல விதங்களில் மாற்றியமைத்து அழகாக்குவதில்
இருபாலரும் சளைத்தவர்கள் இல்லை.
பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் விதவிதமான இத்தகைய சிகை அலங்காரத்தோடு செல்ல விரும்புவதால் பள்ளிகளில் இது பெரும் ஒழுங்குப் பிரச்சனையாக உருவெடுத்துவிடுகிறது.
மாணவர்கள் மாறுபட்ட சிகை அலங்காரங்களோடு பள்ளிக்கு வரக்கூடாதென்று
கல்வித்துறையும் கட்டளைப் பிறப்பித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் மாணவர்களின் இத்தகைய முடியலங்கார வேட்கையை முற்றிலும் கட்டுப்படுத்த இயலாமல் ஆசிரியர்களும், பெற்றோரும் தடுமாறுகின்றனர்.
இச்சிகை அலங்காரம் மாணவர்களுக்கிடையே தோற்ற மாறுபாட்டை ஏற்படுத்தி படிப்பில் கவனச் சிதைவையும் உண்டாக்குகிறது.மாணவர்களிடையே தங்களால் இவ்வாறு அலங்கரிக்க இயலவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை ஒரு சாராருடையேயும் அதீத பெருமிதமும் செருக்கும் மற்றொரு சாராரிடமும் ஏற்பட்டு மனச்சமநிலைக் கெடுவதற்கும் இது வழிவகுத்துவிடுகிறது .
பெரும்பாலான பள்ளிகளில் இது அன்றாடம் ஓர் ஒழுங்குப் பிரச்சனையாகவே வளர்ந்து வருகிறது. இதனால் ஆசிரியர் மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிப்பதோடு பள்ளியின் சீர்மைக் குலைந்து ஒழுங்குப் பிரச்சனைகளை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.இதனால் கற்றல் கற்பித்தலில் பின்னடைவு ஏற்படவும் காரணமாகிவிடுகிறது.
இப்பருவத்தினர் பொதுவாக இதுசார்ந்த எந்த அறிவுரைகளையும் எதிர்க்கின்றனர் அல்லது தாழ்வு மனப்பானமையில் உழன்று கொண்டிருக்கின்றனர்.
அத்தகைய மாணவர்களைப் பிற மாணவர்களிடமிருந்து தனிமைப் படுத்துதல் அல்லது முடி வளரும்வரை வீட்டில் இருக்க வைத்தல் போன்ற சில அறிவுரைகள் வழங்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது,மாணவர்கள் அதிகளவு மன உளைச்சல் அடைகின்றனர்.கற்றலில் சலிப்படைதல் , பள்ளியையும், கண்டிக்கும் ஆசிரியரையும் வெறுத்தல் போன்ற மனநிலையை அடைகின்றனர். அதிலும் இருபால் மாணாக்கர்கள் பயிலும் பள்ளிகளில் மாணவர்கள் இதில் அதிகளவில்
மனமடிவடைவதோடு தங்களது எதிர்ப்பைக் கீழ்ப்படியாமை,
படிப்பில் கவனம் செலுத்தாமை போன்ற வேறு விதங்களில் காண்பிக்கத் துணிகின்றனர்.
பள்ளிகளில் அழகுணர்சி மிகுதியினால்
நிகழும் இதுபோன்ற பிரச்சனைகள் மற்ற ஒழுங்குப் பிறழ்வு பிரச்சனைகளைப் போன்றதாகவே பார்க்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் அறிவுரைகள் சொல்லி சீர்படுத்தலே இதற்கான சரியான அணுகுமுறை.
இத்தகையப் பிரச்சனைகள் எல்லா காலகட்டத்திலும் இருந்தே தான் வந்திருக்கிறது .
குடுமியிலிருந்து அடுத்த நிலைக்கு மாறியபோதும் எந்தப் பெற்றோரும் அதை உடனடியாக ஏற்றருக்க வாய்ப்பில்லை.
ஆண்களின் கழுத்துவரை வளர்க்கப்படும் சிகை அலங்காரமுறை தோன்றியபோதும் எதிர்ப்பிற்குள்ளானது.
அதன் பிறகு அந்தந்த காலகட்டங்களில் ஏற்பட்ட பலவேறு வகையான சிகையலங்கார மாறுபாடுகளின் போதும் அதற்கு முன்பு இருந்த முடியலங்காரமே சரியானதென சொல்லப்படுவதும், புதிய வகை ஆகாதெனவும் எதிர்க்கப்பட்டே கடந்து வந்திருக்கிறது நமது ஆண் சமூகம்.
ஆனாலும் பெரும்பான்மையான மனித மனங்கள் விரும்பும் எந்தவொரு புதிய மாற்றங்களும் எதிர்ப்பை மீறி ஏற்கப்பட்டு வருவதே உண்மை. மாற்றங்களின் ஆரம்ப நிலையில்
இருப்பவர்களே இவ்வாறு துன்புறுகின்றனர். பிறகு அது மக்களது பார்வைக்கும், மனத்திற்கும் பழக்கப்பட்ட பின்னர் இயல்பானதொன்றாக மாறிப் போகிறது.
எனவே எல்லாவித சமுதாய மாற்றங்களையும் போன்றதே இந்த அழகுணர்ச்சியினால் ஏற்படும் சிற்சில சலனங்களும், அதுசார்ந்த பிரச்சனைகளும் என்ற புரிதல் அனைவருக்கும் அவசியமானது.அப்போதுதான் பள்ளிகளிலும், குடும்பங்களிலும் இப்பிரச்சனையைச் சுமூகமாக தீரக்க இயலும்.
எனவே ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களின் மன இயல்பைப் புரிதலோடு அணுகினால் மட்டுமே சரியான முறையில் கற்றல் கற்பித்தலில் வெற்றிகாண முடியும். வளரிளம்பருவத்தினரின் அழகுணரச்சியைப் புரிதலோடு நெறிப்படுத்துதல் மாணவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மிக பயனுள்ளது என்பதை உணர்தல் அவசியமானது.


