எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 6 வருடகாலமாக நமது வணக்கம் மும்பை வார இதழில் “நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2” என்ற தலைப்பில் தாமிரபரணியை பற்றி தொடர் எழுதி வந்தார். இந்த நூல் 1100 பக்கத்தில் தற்போது இடைத்தாமிரபரணி என்ற பெயரில் நூலாகி உள்ளது. இந்த நூலை காவ்யா பதிப்பகம் வெளியிட உள்ளது.
இதற்கான விழா வருகிற 21 ந்தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அரங்கில் நடைபெறுகிறது.
இலக்கிய மாமணி பேராசிரியர் காவ்யா சண்முக சுந்தரம் பவள விழாவை முன்னிட்டு மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையும் காவ்யா தமிழ் வட்டமும் இணைந்து நடத்தும் கருத்தரங்கில் வெளியிடப்படுகிறது.
ம.சு. பல்கலைகழகத்தில் “நம்ம குலசாமிகள்” என்ற பெயரில் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் சுமார் 86 கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரைகள் வெளியிடப்படுகிறது. இதில் இடைத் தாமிரபரணி உள்பட நான்கு நூல்களும் வெளியிடப்படுகிறது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு சுடலை முத்து நினைவு பொருநையின் செல்வன் விருதும், பேராசிரியர் பொ.நா. கமலாவிற்கு இசக்கி நினைவு தொல்காப்பியச் செல்வி விருதும் வழங்கப்படுகிறது. கருத்தரங்கை பல்கலைகழக துணை வேந்தர் என். சந்திரசேகர் தலைமை தாங்கி துவக்கி வைத்து கருத்தரங்க மலர் மற்றும் நூல்களை வெளியிடுகிறார். பேராசிரியர் சி.சுதாகர் வரவேற்று பேசுகிறார். பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் கருத்தரங்க நோக்கவுரையாற்றுகிறார். கருத்தரங்க மலரை சேவியர் கல்லூரி நாட்டார் வழககாற்றியல் துறை பேராசிரியர் ஆ.தனஞ்சயன் பெற்றுக் கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியல் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய இடைத் தாமிரபரணியை மேலப்பாளையம் பள்ளிகளின் தாளாளர், முஸ்லிம் கல்விச் சங்கம் செயலாளர் எல்.கே.எஸ் முகமது மீரான் பெற்றுக்கொள்கிறார். சுந்தரபாண்டியனின் காவேரி நாலை மேல நீலித நல்லூர் பசும்பொன் தேவர் கல்லூரி பேராசிரியர் ஹரிஹரன் பெற்றுக்கொள்கிறார். பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியனின் ஊர் சுற்றும் விஞ்ஞானி நூலை சிற்பி பாமா பெற்றுக்கொள்கிறார். பேராசிரியர் பொ.நா.கமலாவின் தொல்காப்பியம் ஓர் கலை அறிவியல் களஞ்சியம் நூலை மேட்ட மலை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை மகாலெட்சுமி பெற்றுக்கொள்கிறார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் பொ.நா.கமலாவிற்கு இசக்கி நினைவு தொல்காப்பியச் செல்வி விருதையும், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு சுடலைமுத்து நினைவு பொருநையின் செல்வன் விருதை துணை வேந்தர் பேராசிரியர் என்.சந்திரசேகர் முன்னிலையில் காவ்யா நிர்வாக இயக்குனர் முத்துலட்சுமி வழங்குகிறார்.
முனைவர் கோ. மதிவாணன் நன்றி கூறுகிறார். நிறைவு விழாவில் முனைவர் பெ. முருகன் வரவேற்று பேசுகிறார். பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஜெ.சாக்ரடீஸ் தலைமையுரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்டுரை வாசிக்கப்படுகிறது. காவ்யா சண்முகசுந்தரம் ஏற்புரை வழங்குகிறார். தொல்லியல் துறை ஆர்.சந்தியா நன்றி கூறுகிறார்.
கடந்த 6 வருட காலமாக வணக்கம் மும்பை நாளிதழில் தொடராக முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2” இடைத் தாமிரபரணியாக வெளிவருவதை யொட்டி, எழுத்தாளரையும் பதிப்பாளரையும் வெளியிடும் ம.சு.பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பேராசிரியர்களையும் வணக்கம் மும்பை நாளிதழ் வாழ்த்துகிறது