தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது.
ஐதராபாத் கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடந்த வாரம் முதல் புதிய வாராந்திர ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது இந்த ரயில் கச்சிகுடாவிலிருந்து மாலை 3:00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 10:30 மணிக்குத் தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதி முதல் புதிய நேர மாற்றம் அமலுக்கு வருகிறது.
அதன்படி, கச்சிகுடாவிலிருந்து மாலை 3:00 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் இரவு 10:30 மணிக்கு பதிலாக மாலை 7:15 மணிக்கே தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடையும். இதன் மூலம் பயணிகள் சுமார் 3 மணி நேரம் முன்னதாகவே தங்களது இலக்கை அடைய முடியும்.
தூத்துக்குடிக்கு வரும் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து கச்சிகுடா செல்லும் ரயிலின் நேரத்தில் இதுவரை எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. தற்போது இந்த ரயில் தூத்துக்குடியிலிருந்து காலை 7:40 மணிக்குப் புறப்படுகிறது.
ரயில் நிலையத்திற்குப் பயணிகள் வந்து சேருவதற்கு வசதியாக, தூத்துக்குடியிலிருந்து புறப்படும் நேரத்தையும் 3 மணி நேரம் தாமதப்படுத்தி (சுமார் காலை 10:40 மணி அளவில்) இயக்க வேண்டும் எனப் பயணிகள் நலச் சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்திற்கு விடுத்துள்ளனர்.


