ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கு கீழ் பகுதியில் கருவேலமரங்களை அகற்றி ஆற்றை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், 15 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கலை தரிமரபரணி ஆற்றில் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் பகுதியில் இருந்த மணல் பாங்கான பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 கி.மீ. தூரம் வரையில் சுற்றுவட்டார கிராம மக்கள் காணும் பொங்கல் தினத்தன்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கரும்பு, பனங்கிழங்கு சாப்பாட்டுடன் உற்சாக விளையாடி மகிழ்வர்.
தற்பொழுது, ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ் பகுதியில் புன்னக்காயல் வரையுள்ள தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் பாங்கான பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன.
இதனால், காணும் பொங்கல் தினத்தன்று ஆற்றுக்குள் விளையாடும் பழக்கம் காலப்போக்கில் மறைந்தது. இந்நிலையில், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தாமிரபரணி ஆற்றை அழகுப்படும் பணியையும் பாசன குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியையும் கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்படி தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி, ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதிகளில் தேங்கி இருந்த அமலைச் செடிகளை முற்றிலுமாக அகற்றியதால் தற்பொழுது அணையில் தண்ணீர் கடல்போல் காட்சியளிக்கின்றது.
மேலும், அணையின் கீழ்பகுதியில் பழைய பாலத்திலிருந்து புதுப்பாலம் வரையில் அடர்ந்து வளர்ந்து இருந்த கருவேல மரங்களும் அகற்றப்பட்டன. அப்பொழுது, ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் பகுதியில் இருந்த மணல் பாங்கான பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 கி.மீ. தூரம் வரையில் காணும் பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் விளையாடி மகிழ்வதை சமூக ஆர்வலர்கள் தாசில்தாரிடம் நினைவு கூர்ந்தனர்.
இதனை தொடர்ந்து, நடப்பு ஆண்டில் காணும் பொங்கல் தினத்தன்று பொது மக்கள் விளையாடுவதற்கு ஏதுவாக ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ்பகுதியில் சீமைகருவேல மரங்கள் அகற்றப்பட்ட பகுதியில் பள்ளம் மேடுகள் தெரியாத வகையில் மீண்டும் மணல் பாங்காக கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.