முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதைப் போன்று, ஸ்ரீவைகுண்டம் மாவட்ட கிளை சிறைச்சாலையில் இருந்து 25 கைதிகள் பேரூரணி சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி 60ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை போல் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் மழை வெள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று ஒரே நாளில் 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மகப்பேறு சிகிச்சை பெற்று வரும் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார். இதைப்போன்று, ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கிளை சிறைச்சாலையில் இருந்து மழை வெள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 25 கைதிகள் பேரூரணி மாவட்ட சிறைச்சாலைக்கு ஆயுதப்படை ஆய்வாளர் துணை முருகன் தலைமையில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.


