எந்தவொரு மொழியும் அது பேசப்படும் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களால் திரிந்து புதிய பரிமாணங்களுடன் பேசப்படுவது இயல்பு.
மொழியின் அத்தகைய நெகிழ்வுத் தன்மையினால் பிறக்கும் புதிய பேச்சுவழக்கிற்கு வட்டார வழக்கு என்று பெயர். இத்தன்மை பெரும்பாலும் அனைத்து மொழிகளுக்கும் உரியதுதான்.
“ஒரு மொழி பல்வேறு இடங்களில் வாழும் மக்களால் வேறுபட்ட விதங்களில் பேசப்படுதல் அக்குறிப்பிட்டப் பகுதியின் வட்டார வழக்கு” எனலாம்.அவ்வட்டார வழக்குகள் வார்த்தைகளின் திரிபுகளாகவோ, அங்கு வாழும் பிற மொழி பேசுபவர்களின் மொழிக்கலப்பினால் ஏற்படும் புதிய வார்த்தைகளாகவோ இருக்கலாம்.இவ்வாறு உருவாக்கப்படும் வட்டார வழக்குகள் அப்பகுதியினரின்
முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகவும் திகழும்.
நெடுந்தொலைவு பேருந்து அல்லது இரயில் பயணங்களில் பிற மாவட்டங்களுக்குள் நுழைகிறோம் என்பதை அப்பகுதி நிறுத்தங்களில் ஏறுபவர்களின் புதுவிதமான பேச்சு வழக்குகளின் முலம் அறிந்து இரசிக்கலாம்.
தற்காலத்தில் சமூக ஊடகங்களின் பெருக்கத்தினால் எல்லாவகையான வட்டாரவழக்குகளையும் மிக எளிதில் இனங்காண முடிகிறது.
பள்ளிகளில்_ வட்டார வழக்குகள்_
*************
குழந்தைகள், குடும்பம் என்னும் முதல் சமூக அமைப்பிலிருந்து அக்குடும்பத்தினரின் பேச்சுவழக்கைக் கற்று ,பள்ளி என்னும் பொது நீரோடைக்குள் வருகின்றனர்.அங்கு அவர்கள்
தாங்கள் பேசும் மொழிசார்ந்தும் பல அனுபவங்களைக் கற்று அறின்றனர் .
ஒரு பள்ளிக்கு அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வரும் மாணாக்கர்களின் வட்டார வழக்குகளின் கலப்பினால் புதிய வகை மொழிவழக்குகள் ஏற்பட்டு, அம்மொழி மென்மேலும் மெருகேறுகின்றது.
குறிப்பிட்ட சாதி,சமயம், மற்றும் வளரும் சுற்றுச் சூழல் ஆகியன சார்ந்தும் வட்டாரவழக்குகள் உருவாகி நிலைபெறுகின்றன.
பெரும்பாலும் ஒரு பள்ளி, அது அமைந்துள்ள ஊரைச் சுற்றியுள்ளப் பகுதி மக்கள் பேசும் வட்டாரவழக்குகளின் ஆக்கிரமைப்பை உடையதாக இருக்க முயலுகின்றது. மாணாக்கர்கள் பள்ளிகளில் சேர்ந்து ஒருசில மாதங்களில் வெவ்வேறு வட்டாரவழக்குகளின் கலப்பினால் புதுவகையான வட்டார வழக்குகளில் பேசும் நிலை ஏற்பட்டு, பின்னர் அதுவே அப்பள்ளியின் பொது வட்டாரவழக்காகத் தொடர்கின்றது.
ஆனாலும் அப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் தங்களது ஊர்,இன, சமய, மாணாக்கர்களோடு தங்களுக்கே உரிய வட்டார வழக்குகளிலேயே பேசுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிற்றூர்களில் அமைந்துள்ள பள்ளிகளில் வெளியூர் மாணாக்கர்கள் இல்லாதிருப்பின் அவ்வூரின் வட்டாரவழக்கே அவர்களது பேசுமொழியாகவும் தொடர்கின்றது. குறிப்பாகத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்நிலைப்பாடு அதிகளவு இருக்க வாய்ப்புள்ளது.
இதிலும்கூட அப்பள்ளியில் பணியாற்றும் வெளியூர் ஆசிரியர்களின் பேச்சுவழக்கு, மாணாக்கர்களின் பேசும்விதத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி அவ்வட்டார வழக்கின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தவே செய்கின்றது.
பெரும்பாலும் ஆசிரியர்களைப் பின்பற்றும் தன்மை குழந்தைகளுக்கு இயல்பானதாகையால், இந்நிலைப்பாடு ஏற்படுவது தவிர்க்க இயலாதது.மேலும் அது பெருமளவில் மொழியின் செழுமைக்குத் தேவையானதாகவும் அமைகின்றது.அத்தகைய மாற்றங்கள் குழந்தைகளின் பெற்றோர்களால்
அங்கீகரிக்கப்பட்டு, தொடரவும் வாய்ப்புள்ளது.
இதனால் தொடர்ந்து அவ்வூராரால் பேசப்பட்டுவரும் சில வார்த்தைகளின் மரூஊக்களும் ,திரிபுகளும் ஏற்கெனவே வட்டாரவழக்குகளாக இருந்திருப்பினும், ஆசிரியரால் திருத்தம் செய்யப்பட்டு அவை பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் போது மாணாக்கர்கள் அவற்றை உள்வாங்கி தங்களது இயல்பான பேச்சுவழக்காக்கிக் கொள்ளுகின்றனர்.இதனால் நாளடைவில் அதுவே வழக்காகி நிலைபெற்று விடுகின்றது.
உதாரணமாக சில பகுதிகளில் உயர்திணை, அஃறிணை விகுதிகளைப் பொருட்படுத்தாமல் பேசும் வழக்கு உள்ளது. இது அப்பகுதி மக்களின் வட்டாரவழக்காகவும் தொடர்கின்றது.குறிப்பாக மாணவர்கள் தங்களுக்குள், ஆசிரியரை சுட்டிக்காட்டிப் பேசும்போது,
ஆசிரியரின் பெயரோடு…”ஆசிரியர் வருகிறார்” என்று கூறுவதற்கு மாறாக “ஆசிரியர்
வருது” என்றும், அவ்வாறே பெற்றோரைக் குறிப்பிடும் போதும் ,”என் அப்பா வரும்” , “என் அம்மா வரும்” என்றும் கூறுவது வழக்கில் உள்ளது.
இதற்கான காரணம் அம்மாணாக்கர்களின் பெற்றோரும் மற்றவர்களை அவ்வாறே ( உயர்திணைக்கு அஃறிணை விகுதியை)குறிப்பிட்டுப் பேசுவதுதான் என்பதை அறிய முடிந்தது. இவ்வாறான மக்களின் அத்தகைய வழக்குகள் ஆசிரியர்களால் திருத்தம் செய்யப்பட்டு சரியாகப் பேசவைக்கப்படுகிறது.
இத்தன்மையால் அடுத்தடுத்த தலைமுறையினர் தங்களது பேச்சு வழக்கில் சரியான மாற்றங்களைக் கடைப்பிடித்து மொழியின் செம்மையைத் தக்கவைக்க முன்வருகின்றனர். என்பதும் உண்மை.
உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளிகளில் சேரும் மாணாக்கர்கள் தங்களது பள்ளிகளில் பேசிய மொழிவழக்கத்தைத் தங்களது இயல்பான பேச்சில் பயன்படுத்தும்போது அப்பள்ளி அமைந்துள்ள ஊரின் வட்டாரவழக்குகளின் ஆதிக்கத்தால் மேலும் மாற்றங்கண்டு, நாளடைவில் அப்பள்ளிக்கே உரிய பொது வட்டாரவழக்கமாக உருவேற்படுகிறது.
கல்லூரிகளில் வட்டாரவழக்குகள்
**************
பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரிகளுக்குச் சென்று சேரும் மாணாக்கர்கள் தங்களது வட்டாரவழக்கின்மூலம் அக்கல்லூரி அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதியில் அவர்கள் எப்பகுதியிலிருந்து( ஊர்) வருபவர்கள் என்பதை எளிதில் அடையாளங்காணலாம். தொடர்ந்து அதே கல்லூரியில் பணியாற்றும் பணியாளர்களால் எளிதாக இதை அறிந்து கொள்ள இலும்..அத்தோடு கல்லூரி அமைந்துள்ள பகுதியின் வட்டாரவழக்கே அங்கும் சரியான பேசும்மொழியாகக் கருதப்படும் நிலையில்…மாணாக்கர்கள் மீண்டும் ஒருவித பொதுமொழி
வழக்கினை ஏற்படுத்துவதும், ஏற்பதுமான தொடர் நிகழ்வால் மொழியின் செழுமையாக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றது.
இத்தகைய நெகிழ்வுத் தன்மைக்கு இடந்தராத மொழிகளால் தொடர்ந்து செம்மையடைய இயலாது என்பதே உண்மை.
நமது தமிழ் மொழி இத்தகைய செழுமைக்கும், இரவாப்புகளுக்கும் தகுதியுடையது.இதற்கு முதற் காரணமாக சமூகத்தின் ஆணிவேர்களாகத் திகழும் கல்வி நிலையங்கள் பெரும்பங்காற்றி வருகின்றன என்பதும் நிதர்சனம்.


