
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற நவ. 30க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒன்பதாம் வகுப்பில் தோ்ச்சி, பத்தாம் வகுப்பில் தோல்வி எனில் ரூ. 200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றால் ரூ. 300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றால் ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 என 3 ஆண்டுகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவா், அதுவரை பதிவை புதுப்பித்திருப்பவா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் எனில் 45 வயதுக்கு மிகாதவா், மற்றவா்கள் எனில் 40 வயதுக்கு மிகாதவா், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000 மிகாதவா் என்ற தகுதிகள்அவசியம். அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவ. 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.