முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். எதிர்பாராத விதமாக அவனும் கொலையாகிறேன். அந்த பலியும் அவன் மேல் விழுகிறது. எனவே போலிசுக்கு பயந்து சென்னை ஓடுகிறான். அங்கு சுவாமி தாஸ் நாயுடு என்பவரை சந்திக்கிறான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் ஆங்கில பெண் ஒருவரையும் சந்திக்கிறான். அவளை மணம் முடித்து பர்மாவில் வாழுகிறான். அங்கே அவனுக்கு வெள்ளத்துரை என்ற மகன் பிறக்கிறான். கொலை குற்றத்தினை மறந்து செல்வச்செழிப்பாக வாழ்கிறது அந்த குடும்பம். ஆனால் இரண்டாம் உலகப்போரில் உடமைகளை எல்லாம் இழந்து சொந்த ஊருக்கு அகதிகளாக இவரது குடும்பம் வரும் நிலை ஏற்படுகிறது. இதற்கிடையில் மாரடைப்பால் ராஜத்துரை இறந்துபோகிறார். அவர் மகன் வெள்ளத்துரைக்கு சொந்த காரர்கள் பெண் தர மறுக்கிறார்கள்.
வெள்ளத்துரை தனது தந்தையை இந்த கதிக்கு ஆளாக்கிய சிவராமன் அய்யரை பலிவாங்க தேடிப்போகிறான். அங்கு அழகான பெண் ஒருவளை சந்திக்கிறான்.
இனி.
68. பிராமண பெண்ணோடு வந்த வெள்ளத்துரை
வெள்ளத்துரை மிடுக்காக வெளியே வந்தான். ஏதோ பெரிய காரியம் செய்தது போல அவனுக்கு தோன்றியது.
அய்யருக்கு சாப்பாடு கொடுத்தாச்சு. பாவம் நாம பழி வாங்க வந்தோம். ஆனால் இப்போ அய்யர் படுத பாடை பாக்கும் போது மன்னித்து விடலாம் போல தோணியது.
வீட்டை விட்டு வெளியே வந்தான்.
அங்கே சுப்பையா நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்தவுடன் தலை கவிழ்ந்தான்.
“என்ன வெள்ளத்துரையய்யா இப்படி பண்ணிட்டீய?”
சத்தம் காட்டவில்லை.
முன்னால் நடந்தான் வெள்ளத்துரை. பின்னாலேயே சுப்பையா நடந்து வந்தார்.
“யய்யா என்ன புத்தி படிச்சிய?” கேள்வி கேட்டுக்கொண்டே செல்லையா பின்னால் வந்தார்.
அமைதியாக இருந்தான் வெள்ளத்துரை.
“யய்யா பழி வாங்கனுமுன்னுதான சொன்னீய. இங்க வந்து கஞ்சி கலையம் சுமக்கிய”.
யோசித்தான். அதன் பின் பேச ஆரம்பித்தான் வெள்ளத்துரை.
“பாவமா இருக்கு செல்லைய்யா”
“சரி. சரி. இந்த வயசுல பனை மரத்துக்கு சேலை கட்டி விட்டா கூட பொம்பளையளை ரொம்ப பிடிக்கும்”. மனதுக்குள் நினைத்து கொண்டார், வெள்ளத்துரையை பார்த்து கேட்டார். “உங்களுக்கு அந்த பொம்பளைய ரொம்ப பிடிக்கோய்யா”.
அந்த வயசை தாண்டி வந்தவர் தானே செல்லையா. அதுவும் ஊருல உள்ள நல்லது கெட்டது எல்லாமே நல்லா தெரியும். அப்படி இருக்கும் போது இவன் பூமா விடம் மனதை பறி கொடுத்ததை அறியாமல் இருப்பாரா என்ன? அதுவும். பழி வாங்க வந்தவன் பரிதாபபட்டு நிக்கிறான். அப்படியென்றால் காதல் நிச்சயம் வந்து இருக்கும் என உறுதி செய்தார்.
“ஆனால் இந்த கருவாச்சி பையனுக்கு, அந்த சிவப்பி கிட்டுவாளா?. பாவம் இந்த பய எல்லாமே பெருசு பெருசா ஆசைபடுதானோ?”
சுப்பையா மிகவும் குழம்பினார்.
இருட்டுக்குள் இரண்டு பேரும் நடந்தே வந்தார்கள். பேசவில்லை. தாமிரபரணி சலசலப்பு இவர்கள் இருவரையும் பெரிதாக பாதிக்கவில்லை. ஆனாலும் நடந்து மறு கரைக்கு வந்தனர்.
வீட்டில் வந்து படுத்து தூங்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஏதோ தெரியவில்லை வெள்ளத்துரைக்கு தூக்கவே வரவில்லை. நாளைக்கு ஏதோ நடக்கப்போகிறது போலவே தோன்றியது.
அதிகாலை விடியவே இல்லை.
வித்தியாசமான பறவைகள் அலறியதால், வெள்ளத் துரை எழுந்து அமர்ந்தான். ஏதோ நடக்கப்போகிறது. என்ன தான் என தெரியவில்லை.
இவன் முழிந்து இருப்பதை பார்த்து, செல்லையா அருகில் வந்து அமர்ந்தார்.
அய்யா கீழக்கரையை நினைச்சு பாக்கியளோ?
அமைதியாக இருந்தான்.
“அய்யா அவியளுக்கும் நமக்கும் ஒத்து வராதுய்யா”.
மீண்டும் அமைதி.
“அய்யா பெரியவுக சொல்லுவாவ, பிரமாணத் தீ. அவியளை நாம தொட்டா தீ பிடிச்சி எறிஞ்ச மாறி எறிஞ்சு போவோம். அவியளுக்கும் நமக்கும் ஏணி வச்சாலும் எட்டாதுய்யா. மறந்திருங்க”.
வெள்ளத்துரை யோசித்தானர். சொந்த காரி தேனிலாவே நமக்கு கிடைக்கவில்லை. இங்கே சாதி கடந்து, வர்ணம் கடந்து ஒரு பெண் எங்கே நமக்கு கிடைக்கப்போகிறாள். தனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. கஷ்டப்பட்ட சிவராமன் அய்யர். கண் தெரியாமல் தடுமாறுவது, அவர் மனைவி, மகள் பூமா எல்லோரும் பட்டினியாக கிடந்தது தான் கண் முன் வந்து நின்றது. இங்கே காதலாவது. கத்திரிக்கையாவது.
பசி. இதற்கு வர்ணம் தெரியுமா? சாதி தெரியுமா? சமத்துவம் தெரியுமா?.
பசி. இதற்கு நல்லது தெரியுமா? கெட்டது தெரியுமா?
ஆனால் பசி. இந்த மூன்று பேரையும் தவிக்க வைத்து இருக்கிறதே. அது மட்டும் தான் இவன் கண்ணுக்கு தெரிந்தது. அங்கு காதலும் வரவில்லை. மண்ணாங்கட்டியும் வரவில்லை.
முதல் நாள் நாம் சாப்பாடு கொடுக்கும் போது, அவர்கள் அதை சாப்பிட்ட விதம் இருக்கிறதே. அதை கண்டு அவர்கள் பூரித்த மனம் இருக்கிறதே. கடவுளே. இந்த உலகத்தில் எங்கேயும் யாருக்கும் பசி மயக்கம் இருக்கவே கூடாது.
சிந்தித்தான். பூமா மீது இவனுக்கு காதல் எதுவும் இல்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு. அவ்வளவு தான் . ஆனால் அவள் மீது பரிதாபம் இருந்தது.
ஆனால் செல்லைய்யா தவறுதலாக புரிந்து கொண்டார். எனவே அவருக்கு விளக்கம் சொல்லிவிடுவோம் என பேசினான்.
“செல்லைய்யா அய்யா. எனக்கு அந்த பெண் மேலே காதல் எதுவும் இல்லை. ஆனால் ஏதோ என் மனசுக்குள், நம்ம அப்பாவோட சாபம் தான் இந்த குடும்பத்தை இப்படி படாத படுத்துதோன்னு தோணுது. அதனால அவங்களுக்கு ஏதாவது உதவணுமுன்னு நினைக்கேன். மத்தப்படி எதுவும் இல்லையா”. அப்பாவியாக பேசினான்.
சிரித்தார் செல்லையா.
“ய்யயா வெள்ளத்துரை. சாதி, சமயம், வர்ணம், இது எல்லாமே இந்த கலியுகத்தில நல்லா கொடிகட்டி பறக்குய்யா. நம்ம எல்லைக்குள்ளத்தான் நாம நிக்கணும். அவிய பொறவி வேறே . நம்ம பொறவி வேறே. நம்ம இனத்துக்குள்ளே உங்களை ஏத்துக்க மாட்டுக்காவ. நீங்க வேறே அமாவாசை மாறி இருக்கிய. அவிய பௌர்ணமி மாறி இருக்காவ. அங்க போய் நீங்க நின்னாலே பாக்கிறவிய பரக்க பரக்க முழிப்பவா. ஏதோ ராத்திரி கூ இருட்டுல போயிட்டு வந்திட்டிய. விட்டுறுங்க. நமக்கு அவங்க ஓட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம். உங்களை பெத்தவா பாவம். அவிய ஒரு ரகத்துல இருக்காவ. அதனால உங்க நல்ல மனசை பூட்டி வச்சிட்டு சத்தங்காட்டாம ஒரு இடத்தில கிடங்கய்யா”.
செல்லைய்யா. சொல்லி விட்டு வெள்ளத்துரை முகத்தினை பார்த்தார். அவனை பார்க்கவும் பாவமாக இருந்தது.
எனவே கட்டில் அடியில் அமர்ந்து, கட்டிலில் அமர்ந்திருந்த வெள்ளத்துரை மடியில் படுத்தார். செல்லையாவை ஆதரவோடு தட்டிக்கொடுத்தான் வெள்ளத்துரை.
“ய்யயா. நீங்க தெரிஞ்சோ தெரியாமலேயோ எங்கிட்ட வந்திட்டீய்யா. உங்களை இழக்க எனக்கு பயமா இருக்கு. நீங்க நல்லா இருந்தாதான் எனக்கு நிம்மதி. அதனால எந்த வம்பு தும்புக்கும் போவா மூச்சி காட்டாம இருங்கய்யா”.
அவன் எங்கே பிரச்சனைக்கு சென்றான். அய்யரை பழிவாங்க நினைத்தான். ஆனால் அய்யர் படும் பாடு, இவனுக்கு கஷ்டத்தினை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் செல்லைய்யாவுக்கு பயம். பிரமாணர்கள் என்றாலே பயம். அவர்கள் சாபம் போட்டால் அப்படியே பலித்து விடும் என பயம். இப்படித்தான். அய்யர் வாயில் விழுந்தால், அது அப்படியே பலித்து விடும் என நினைத்தார். எனவே தான் அய்யர் இடம் சாபம் வாங்கிய காரணத்தினால் தான் ராஜத்துரை இந்த பாடு பட்டு இருக்கிறார். இதே நிலமை அவர் மகனுக்கும் வந்து விடக்கூடாது என நினைத்தார். மனுசன் நிறைய மனக்கஷ்டத்தோடு இருக்காரு. அவரு பாட்டுக்கு ஏதாவது சாபம் போட்டுட்டு போயிட்டா, பொறவு வெள்ளத்துரையை யார் காப்பாத்துவா?
“யய்யா நமக்கு பிரமாணர் சாபம் வேண்டாமுய்யா”.
ஏறிட்டு பார்த்தான் வெள்ளத்துரை.
“இங்க பாருய்யா சிவன் சொத்தை அனுபவிச்சாலோ, பங்காளி சொத்தை ஆட்டை போட்டாலோ, பிராமணர்கள் சொத்தை அபகரிச்சாலோ, பிள்ளை இல்லாதவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டாலோ, கோவில் சொத்து, கருமி சொத்தை தட்டிப்பறிச்சாலோ பெரிய பாவமுன்னு சொல்லுவாய்யா”.
என்ன சொல்கிறார் என புரியாமல் பார்த்தான் வெள்ளத்துரை.
“யய்யா இப்படி சொத்தை அனுபவிச்சா பல வேதனைகளும் சோதனைகளும் நமக்கு ஏற்படுமுய்யா. அது மட்டுமில்லை எந்த காரணத்தை கொண்டு அந்தபாவத்தால நாம அனுபவிக்கிற துன்பம் இருக்கே அதுக்கு பரிகாரமே கிடையாது”.
மிகவும் குழம்பினான் வெள்ளத்துரை.
“சொத்தா என்ன சொல்றீய அய்யா?”.
“சாமிக்கு அவரு மக கூட சொத்துத்தான் யய்யா. நீர் அந்த பிள்ளை மேலே ஆசைப்பட்டா கூட அது பாவம் தாமுய்யா”.
“அய்யோ. செல்லையா அய்யா. நான் அந்த பிள்ளை மேலே ஆசைப்படலை. தீடீருன்னு ஒரு அழகான பெண்ணை பார்த்தா எல்லாருக்கு ஏற்படுத ஒரு ஆசைத்தான், எனக்கும் ஏற்பட்டுச்சு. ஆனால் அந்த பெண்ணை நான் காதலிக்கல்ல”. அவசரமாக சொன்னான் வெள்ளத்துரை.
அமைதியாக இருந்தார் செல்லையா.
ஆனால் ஏதோ நடக்க போகிறது என்பது போலவே அவர் மனது இருந்தது.
எழுத்தார். ஆத்துக்கு போய் விட்டு வரலாம் என நினைத்தார்.
அப்போது கீழக்கரையில் இருந்து உழவன் ஒருவன் ஓடியே வந்தான்.
“செல்லைய்யா செல்லையா . சிவராம அய்யரும், அவர் பெண்டாட்டியும் செத்து போயிட்டாவ. அவுக மவ கிடந்து அழுதுகிட்டு கிடக்கா பாவமா இருக்கு”.
“அவிய சொந்த காரவிய யாரும் இல்லையா?”.
“அங்க யாரு இருக்கா. பாவம் அந்த புள்ளை அழுது கிட்டு கிடக்கு பாவமா இருக்கு. ஆறுதல் சொல்ல கூட பொம்பளைய யாருமில்லை”.
செல்லையா அதிர்ச்சியானார்.
அதற்குள் வெள்ளத்துரை பக்கத்தில் வந்தான்.
“என்னய்யா”.
“சிவராமன் அய்யரும், அவிய பெண்டாட்டியும் செத்து போயிட்டாவுளாம்”.
வெள்ளத்துரைக்கு பேச்சு வரவில்லை.
“செல்லையா, பொம்பளை துணை இல்லாம அந்த பொட்டை பிள்ளை தவிக்கு, யாராவது பொம்பளையை கூட்டிட்டு போனா நல்லா இருக்கும்”. வந்தவன் விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தான்.
“யம்மா” வெள்ளத்துரை கத்தினான்.
லெட்சுமி “என்னய்யா” என ஓடி வந்தார்.
“யம்மா கீழக்கரைக்கு போனும் வாம்மா”
“எதுக்கு?”
“எதுவும் பேசாத வா”.
அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கினான். செல்லையாவுக்கு ஒன்றும் ஓட வில்லை. பிராமணர்கள் வீட்டுக்கு நாம் போய் என்ன செய்யப் போகிறோம். ஆனாலும் வெள்ளத்துரை முன்னால் சென்ற காரணத்தினால் பின்னால் ஓடினார்.
10 நிமிடத்தில் சிவராமன் அய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். வீட்டு முன்னால் சில உழவர்களும், காவல் காரர்களும் நின்று கொண்டிருந்தார்கள் . மருந்துக்கு கூட பிராமணர்கள் யாரும் இல்லை. எப்படி இருப்பார்கள். இவர் ஒருவர்தானே இந்த அக்ரகாரத்தில் இருந்தார்.
வீட்டுக்குள் நுழைந்தான் வெள்ளத்துரை.
அங்கே சிவராமன் அய்யரும், அவர் மனைவியும் இறந்து கிடக்க அருகில் பூமா கதறி கொண்டிருந்தாள். நேற்று இரவு அழகாய் இருந்த அந்த பெண் தலை விரி கோலமாய் இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.
வெள்ளத்துரையின் தாயார் லெட்சுமி ஆதரவாக பூமாவை அணைத்துக்கொண்டாள்.
ஆதரவே இல்லாமல் தவித்த பூமாவுக்கு, லெட்சுமியின் ஆதரவு கரம் ஆறுதலாக இருந்தது.
எனவே லெட்சுமியின் நெஞ்சில் புதைந்தபடியே அழுதாள் பூமா.
அடுத்தகட்டம் என்ன செய்ய?
செல்லையா பின்னாலே ஓடியே அங்கு வந்தார். சூழ்நிலையை பார்த்த அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.
பிராமணர்களுக்கு எப்படி கட்டு செய்ய என்று இவருக்கு தெரியாது.
கடந்த 25 வருடங்களுக்கு முன்பெல்லாம் பிரமாணர்கள் குடியிருப்புக்குள் நுழையவே முடியாது. பிராமணர்கள் வயல்வெளிக்குள் வேலை செய்ய காவலர்கள் உழவர்கள் என இருப்பார்கள். அவர்கள் எல்லோருமே வீட்டுக்கு வெளியே தான் காத்து கிடக்க வேண்டும். கோயில் , பூஜை , காரியங்கள் மிகச்சிறப்பாக நடக்கும்.
பிராமணர்களை பார்ப்பனர் என்றும் கூறுவர். இவர் நமது நாட்டு பூர்வீக குடிகள் அல்ல. கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் என கூறுவர். அவர்களுக்கும் நமது நாட்டினருக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்பார்கள். பண்டைய இந்தியாவில் நிலவிய நான்கு வருண முறை என்ற நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றை சேர்ந்தவரே பிராமணர். சத்திரியர், வைசியர், சூத்திரர், பிராமணர் எனும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய சமூகத்தில் தாங்களே முதன்மையானவர்கள் என்பர்,
பழைய இந்துச் சமூக அமைப்பிலும், மனுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடியும் இவர்களை இறை வழிப்பாட்டவர்கள் என்றழைப்பர். இவர்கள் வேதங்களைப் பயின்று இறை வழிபாடுகளை நடத்தும் கடமை கொண்டவர்களாக மக்கள் மத்தியில் முன்னிலை படுத்தப்பட்டார்கள். இவர்கள் அறிஞர்களாகவும் அரச குருமார்களாகவும் இருந்தனர். எனவே தான் எந்த இடத்தில் இருந்தாலும் தன்னை முன்னிலை படுத்திக்கொண்டே இருப்பர். முக்கடவுளரில் வேதங்களின் காப்பாளரான பிரம்மா இவர்களின் ஆதியாக கூறினர். எனவே தான் நாங்களே படைப்பாளர் பிரம்மாவின் வழி தோன்றல் என்பதால் தாங்களே அனைவரையும் படைத்தவர்கள் என்று எப்போதுமே விளங்குவர். நடந்து கொள்வர்.
எனவே எல்லோரையும் விட நாங்களே பெரியவர்கள் என நினைப்பார்கள்.
பிராமணர்களை பொறுத்தவரை யாசித்தே உண்ண வேண்டும் என்பார்கள். நாட்டின் நலனுக்காக மன்னர்களுக்கும், மற்றவர்களுக்கும், வேதங்களையும் பிற கல்வி அம்சங்களையும் பயிற்றுவிக்க வேண்டுமென்றும் இவர்களை தர்ம ஏடுகள் கூறும். பிராமணர் என்பவர் அமைதி, சுய கட்டுப்பாடு, பொறுமை, நேர்மை, அறிவு, விவேகம், சுத்தம், புனிதம் போன்ற தன்மைகளும் நிறைந்திருக்க வேண்டும். எனவே இவர்கள் இருக்கும் இடத்தில் அமைதியாகவே இருப்பார்கள்.
ஆரம்ப காலத்தில் வேதகால இந்தியச் சமூகத்தில், ஒருவருடைய குணம், நடத்தை, இயல்பு போன்றவற்றால் நாட்டில் வாழ்பவர்களை அடிமைப்படுத்தியுள்ளார்கள். ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடை முறையில் இருந்ததாகத் தெரிகிறது. காலப்போக்கில், இந் நிலை மரபு வழியாக அடையப்படும் ஒன்றாக மாறிவிட்டது. அப்படித்தான் பிராமணர்கள் தங்களை அடையாள படுத்தி வாழும் இடத்தில் தனிச்சிறப்புடன் வாழ்ந்து வந்தார்கள்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் ஐயர், ஐயங்கார் என இரு பிரிவுகளில் பல உட்பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் யாசித்து வாழ்ந்தவர்கள், அதன் பின் அரசர்களிடம் குருவாக வாழ ஆரம்பித்தனர். அரச குருமார்களாக இருந்தவர்கள் பிற்காலத்தில், இராஜவிடம் பரிசு பெற்று நிலச்சுவான்களாக மாறினர். இதனால் அவர்களுக்கு நிறைய நிலபுலன்கள் கிடைத்தது.
அந்த காலத்தில் பிராமணர்களுக்கு அரசர்கள் நிலங்களையும் ஊர்களையும் எழுதி வைத்தனர். அவர்கள் அதன் மூலம் அங்குள்ள கோயில்களை நிர்வாகித்து கொள்ள வேண்டும் என வரைமுறை படுத்தினர். எனவே பல இடங்களில் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களில் ஊர்கள் தோன்றியது.
இந்த நிலபுலன்கள் உள்ள காரணத்தினால் அவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டுனர். இதற்காக அவர்கள் காவல்காரர்கள் , உழவர்களை கூலிகளாக வைத்துக் கொண்டனர். இராஜ வாழ்க்கை மேற்கொண்டனர். தங்களை மீறி யாரும் சென்று விடக்கூடாது என பல சட்டத்திட்டங்களை உருவாக்கி கொண்டனர்.
குறிப்பாக சேரசோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்து நாயக்கர் காலம் வரை இந்த நிகழ்வு தொடர்ந்தது. ஆனால் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இவர்களது கொட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கப்பட்டது. ஆனாலும் ராஜத்துரை மீது கொலை குற்றம் சாட்டி அவரை போன்ற மற்ற சமுகத்தில் தலை எடுக்கும் இளைஞர்கள் ஒடஒட விரட்டி அவர்களுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக விளங்கியவர்.
இவர்கள் வாழும் இடத்துக்குள் மாற்று சமுதாயத்தினர் நுழைய முடியாது. எனவே அவர்கள் இருக்கும் இடம் பிராமணக்குடி என்று அழைக்கப்படுகிறது. இந்த குடியே மிகவும் ஐதீகமான இடமாகும்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் பாபநாசத்தில் இருந்து ஆத்தூர் வரை பல அக்ரகாரங்கள் இருந்தது. சொல்லப்பானால் நூற்றுகணக்கான தாமிரபரணி கரை கிராமம் அக்கிரகாரமாகவே இருந்தது. இந்த அக்ரகாரங்கள் எல்லாம் பிராமணர்கள் வாழும் இடமாக இருந்தது. இந்த இடங்கள் அந்த காலத்தில் சொர்க்கபுரியாகவே இருந்தது. இவர்கள் குடியிருப்புக்குள் யாரும் நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் சட்டை போடக்கூடாது, காலில் செருப்பு அணியக்கூடாது.
இந்த கால கட்டத்தில் தான் சிவராமன் அய்யர் போன்றார் இருந்துக்கொண்டு பல்வேறு அரசாட்சிகளை செய்திருந்தனர். ஆனால் அவரது வாலிப காலத்தில் பண்ணிய அட்டுழியங்கள், முதுமை பருவத்தில் செய்ய இயலாமல் போய் விட்டது. ஏன் என்றால் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பிராமணர்களின் கை அப்படியே வீழ்ந்தது. நாயக்கர் காலங்களில் கொண்டு வரப்பட்ட பிள்ளை சமுதாயத்தினர் பெரும் நிலச்சுவான்களாக ஆனார்கள். அந்த கால கட்டத்தில் சதுர் வேதி மங்கலமாக இருந்த இடங்கில் அய்யர் விளை, அய்யங்கார் விளை, அய்யன் பத்து, என அய்யர்கள் பெயரால் வழங்கப்பட்ட குடியிருப்புகள், வயல்வெளிகள் கூட மாற்று சமுதாயத்தினரின் கையில் சென்றடைந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக தங்க-ளுடைய கை இறங்குகிறது என்று தெரிந்தவுடனே பிராமணர்கள் சுகாகரித்து கொண்டனர். வளர்ந்த அவர்களுடைய வாரிசுகள் கல்விகளில் தங்களை மேம்மை படுத்திக்கொண்டு கிராமங்களை விட்டு விட்டு வெளிநாடு, சென்னை, மும்பாய், கொல்காத்தா போன்ற இடங்களுக்கு மொத்தமாக இடம் பெயர்ந்தனர். இதனால் இவர்கள் வயற்காடுகளை உழவு பார்த்தவர்களும், காவலர்களும் தன் வசம் படுத்த ஆரம்பித்து விட்டனர். அதன் பின் இவர்களுக்கு கட்டுகுத்தகை கூட வரவில்லை. இதனால் இவர்களுக்கு ஜீவனாம்சமே நடத்த முடியாமல் போய் விட்டது. அனைவர்களையும் அரட்டி மிரட்டி பணிய வைத்த பிராமணர்கள், அதே ஊரில் பாவப்பட்ட ஜென்மாக வாழ ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து வந்த இந்திய அரசும் நிலச்சுவான்களின் கொட்டத்தினை அடக்கியது. நிலவரம்பு சட்டம், ஜமீன் ஒழிப்பு சட்டம் என கொண்டு வந்து இவர்களை போன்று பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கொண்டவர்களிடம் இருந்து நிலங்களை பிடிங்கி ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். எனவே ஒரே நாளில் பல பிராமணர்கள் சொத்தை இழந்து, நிலை தடுமாறி போய் விட்டனர்.
பூஜையுடன் விளங்கிய இவர்களது பாரமரிப்பில் இருந்த கோயில்கள் எல்லாம் பாழடைந்து விட்டது. கோயில் பாழடைந்த காரணத்தினால் அக்ரகாரம் எல்லாம் அப்படியே இருளடைந்து விட்டது. அக்ரகாரத்தில் ஒரு பிரமாணர்கள் மட்டும் இருக்கும் நிலை ஏற்பட்டது. கிராமத்தில் இருக்கும் பிராமணர்கள் தனித்து விடப்பட்டனர். இந்த கிராமத்தினை விட்டு பட்டணத்துக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கும், கிராமத்தில் வாழ்பவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் போய் விட்டது.
கிராமத்தில் இருக்கும் பிராமணர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். திமுக ஆட்சிக்கு வந்த காலகட்டம், பெரியார் கடவுளே இல்லை என கூறிய காலகட்டம். தமிழகத்தில் பல்வேறு புரட்சி ஏற்பட்டது. இதனால் கோயில்கள் பூஜை இன்றி களை இழந்தது. இதனால் பிராமணர்களுக்கு வருமானம் இல்லாமலேயே போய் விட்டது.
திருமணம் சடங்கு எல்லாம் பிராமணர்களை வைத்து நடத்தாமல், சீர்திருத்த கல்யாணம் என நடத்த ஆரம்பித்தார்கள். இதனால் நல்லது கெட்டதெற்கெல்லாம் பிராமணர்கள் ஒதுக்கப்பட்டார்கள்.
பாவம் பிராமணர்கள் இவர்களும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய இயலவில்லை. எனவே கிராமத்து சொத்துக்களை அப்படியே போட்டு விட்டு பட்டணத்துக்கு சென்றனர். அ ங்கேயே அமர்ந்தும் விட்டனர். ஒரு காலத்தில் இவர்கள் தெருக்குள் வரக்கூடாது என ஒதுக்கி வைத்தவர்கள் எல்லாம் அக்ரகாரத்துக்குள் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். ஆனாலும் குடியிருப்புகளுக்குள் மட்டும் அவர்களால் நுழைய மனம் வரவில்லை.
ஒரு காலத்தில் இவர்களுக்கு அடிமையாக இருந்தவர்கள் வயலை கைபற்றிய பிறகு இவர்களுக்கு கட்டுக்குத்தகை கொடுக்கத்தான் இல்லை என்றால் பராவாயில்லை. அவர்களை மதிப்பதே இல்லை. எனவே ஒட்டு மொத்தமாக சோர்ந்து போய் விட்டார் சிவராமன் அய்யர். சிவராமன் அய்யரை மாதிரி தனித்த விடப்பட்ட அய்யருக்கும், இங்கிருந்து புலம் பெயர்ந்து அய்யர்களுக்கும் தொடர்பு இல்லாமல் போய் விட்டது. அவர்கள் இவர்களை கண்டு கொள்வது இல்லை. நல்லது கெட்டதற்கு அழைப்பதும் இல்லை.
பெண் மாப்பிள்ளை கூட ஒருவருக்கு ஒருவர் எடுப்பது இல்லை . கொடுப்பது இல்லை. கல்வியறிவில் செழித்து வளர்ந்த காரணத்தினால் இவர்கள் வெளிநாட்டிலும் நல்ல வேலைக்கு சென்றனர். உலகமே இவர்கள் கையில் என்ற அளவுக்கு உலகஅளவில் பிராமணர்கள் கொடிகட்டி பறந்தனர். எனவே இவர்களுக்கும் கிராமமும், கிராம சொத்தும் ஒரு பொருட்டாக தெரியவில்லை. கிராமத்துக்கு வந்து போக வேண்டும் என்ற ஆசையும் பிறக்கவில்லை. இவர்கள் விட்டு சென்ற அக்கிரகாரம் அப்படியே வெறுமையாகி விட்டது. வெளியே சென்றவர்கள் தனது தாய் தந்தையர்களை கூட உடன் அழைத்துச்சென்றனர். எனவே மொத்தமாக ஊரை மறந்து விட்டனர்.
ஆனால் சொத்து நிறைய இருக்கிறது, அதை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்த சிவராமன் அய்யர் போன்றவர்கள்தான் கிராமத்தில் சிக்கி கொண்டார்கள். இங்கே அதிகாரம் செய்து ஆட்சி நடத்தி வந்தவர்கள். தொடர்ந்து தங்களுக்கு அதே பவர் இருக்கும் என்று நினைத்தனர். ஆனால் பிற்காலத்தில் யாரை இவர்கள் வளர்த்தார்களோ, அவர்களே படாத பாடு படுத்த ஆரம்பித்து விட்டார்கள். பாவம் இவர் செய்த பாவம் கண்ணையும் இழந்து விட்டார்.
பசியால் பட்டினியால் கஷ்டப்பட்ட காலத்தில் கூட இந்த குடும்பத்தினர் தாக்குபிடித்தனர். ஆனால் மனக்கஷ்டம் இவர் உயிரை வாங்கி விட்டது.
நமக்கு உணவு தந்தவன், எதிராளியின் மகன், அதுவும் ஊர்சாப்பாட்டை நாம் சாப்பிட்டு உயிர்வாழ வேண்டுமா? என வைராக்கியமாக வடக்குநோக்கி இருந்து உயிரை விட்டு விட்டார் இந்த அய்யர்.
திமிர் பிடித்தவர்.
பெரும்பாலுமே தனது உடலை வருத்தி, தனது உயிரை போக்கி விட்டார். அவரின் கற்பு கரசியான மனைவியும் அவர் மடியிலேயே உயிர் விட்டு விட்டார்.
ஒரே நாள் இரவில் நிகழ்ந்து விட்டது. பாவம் அவளது மகள் பூமா , இப்போது அனாதையாக இந்த பூமியில் நிற்கிறார்.
அவள் நிலமை படு மோசமாக போய் விட்டது . என்ன செய்ய போகிறாள்.
கதறுகிறார். அவளுக்கு ஆதரவு யாரும் இல்லை. எனவே லட்சுமியை கட்டி பிடித்தப்படியே கதறுகிறாள். இவள் யார். இவளுக்கு அவள் சொந்தமாக. இல்லை. காட்டுக்குள் கிடக்கு ஆதரவற்ற கொடி ஒன்று ஆற்றில் அடித்து வரப்பட்டு ஒரிடத்தில் கிடக்கும் கம்பை ஆதரவாக சுற்றி படருவது போ ல இவர் லெட்சுமி மீது படருகிறாள். அந்த கொடி என்ன இனம் அது படரும் கம்பு என்ன இனம் என்பதை யார் அறிவார்.
இங்கே வர்ணத்தாலும், சாதியாலும் வேறு பட்டு நின்றாலும் ஆதரவாக தாய்மையாக ஒரு பெண் கிடைத்தவுடன் இந்த அபலை பெண் அவளை தளுவிக் கொண்டு விட்டாள்.
செல்லையா திக் பிரமை பிடித்தவர் போலவே நின்றார். மற்றவர்களும் அய்யரை தொடவா, வேண்டமா? என தவித்தப்படி நின்றனர்.
இதே நிலைத்தான் அங்கிருந்த உழவர்களுக்கும், காவலர்களுக்கும் இருந்தது.
பாவம் அய்யர் செத்தாலும் கம்பீரமாய் செத்து கிடக்கிறார் மனிதன். அவர் முகத்தில் அரும்பு மீசை இல்லா விட்டாலும் கூட திமுறு இருந்தது. நான் பசிக்கு அடிமையாகி, ஊர் சோற்றை தின்றதால், நான் என் உயிரை உடலில் இருந்து அனுப்பி விட்டேன் என்ற இருமாப்பு இருந்தது. அவள் அருகில் கிடக்கும் அவரது மனையாட்டிக்கும் அதுபோலவே என் ஆம்புடையான் இல்லாத இந்த உலகத்தில் நான் ஏன் வாழ வேண்டும் என்பது போல் இருந்தாள். ஆனால் அந்த ஊர் சாப்பாட்டுக்கு சொந்தகாரன் தான் இப்போது இவரை தொட்டு தூக்கி அடக்கம் செய்யவேண்டும். இதற்கு மறுப்பு சொல்ல அய்யர் உயிர் உடலில் இல்லை. இதுதான் உலகம்.
அதுவரை கதறிய பூமா. தன் அழுகையை நிறுத்திக்கொண்டாள். லெட்சுமியின் மார்பில் சாய்ந்த காரத்தினால் அவளுக்கு புது தெம்பு வந்திருக்க வேண்டும்.
அழுத கண்ணை துடைத்துக்கொண்டாள்.
செல்லைய்யா அவள் முன்பு வந்தார்.
“யம்மா நான் சொல்லுதேன் தப்பா நினைக்காதீய. அய்யரு ஆச்சாரம் உள்ளவரு. இப்போ செத்து போயிட்டாரு. அவருக்கு சடங்கு செய்ய இங்க எங்களுக்கு யாரும் தகுதி இல்லை. உங்க சொந்தகாரங்க அய்யமாரு டவுணுல இருந்தா சொல்லுங்க. சைக்கிளை எடுத்துட்டு போய் ஒரு எட்டு சொல்லிட்டு வாறேன்” என்றார் செல்லையா.
அமைதியாக இருந்தாள் பூமா.
“யம்மா பேசுங்க. நீங்க சொல்றதை வச்சித்தான். நாங்க முடிவு எடுக்கணும்”.
தீர்க்கமான முடிவுடன் சொன்னாள்.
“எனக்கு சொந்தகாரங்க யாரும் இல்லை”. அடக்கிய அழுகை மீண்டும் வேகமாக வந்தது.
“சுமார் 100 அய்யமாரு இருந்த அக்கிரகாரத்தில் யாருமில்லையா? என்னம்மா சொல்லிதிய”.
“ம். நீங்களே எங்க அப்பா, அம்மாவுக்கு அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுங்”க.
அமைதி நிலவியது.
“யம்மா. பிராமணர்களுக்கு செய் கட்டு சரியா செய்யாம நாங்க என்னைத்தையாவது செஞ்சா. நாளைக்கு எங்களுக்கு அந்த பாவம் பிடிக்குமா?”
அமைதியாக இருந்தாள்.
உழவன் ஒருவன் வாசலில் இருந்த மாதிரியே பேசினான். “யம்மோய் தப்பா நினைக்காதீய. நீங்க சத்தம் காட்டாம இருந்தா எப்படி? அதுக்காக நடுவீட்டில பிணத்தை வச்சிக்கிட்டு இருக்க முடியுமா?”
ம். பிணம். நேற்று வரை கண் தெரியாவிட்டாலும் கம்பீரமாய் இருந்தவர் இன்றைக்கு பிணமாகி போய் விட்டார்.
“ஆத்தோவ். முடிவை சொல்லுங்க. இல்லாட்டி ஏதாவது போன் நம்பர் இருந்தாலும் சொல்லுங்க. போஸ்ட் ஆபிசில போய் டிரங்கால் புக் பண்ணி உங்க சொந்தகாரவியகிட்ட பேசிருவோம்”.
“யாரும் வேண்டாம். நீங்களே எங்க அப்பாவையும் அம்மாவையும் புதைங்க. அது போதும்”.
வேறு யாரும் எதுவும் பேச முடியவில்லை. வேறு வழியும் தெரியவில்லை. பாவம் அந்த இருவர் உடலையும் அங்கிருந்து தூக்கிக்கொண்டு போய் தாமிரபரணி ஆற்றங்கரையில் புதைத்தார்கள். கிட்டத்தட்ட 2 மணி நேரம் எல்லாமே முடிந்து விட்டது. அனைத்து காரியத்திலும் வெள்ளத்துரை செல்லையாவுடன் நின்றார்.
இவன் யார்? இவனுக்கும் இந்த அய்யருக்கும் என்ன சம்பந்தம். இப்போது இவன் எல்லா வேலைகளையும் செய்கிறானே. இது தான் விதி என்பதா?
பூமாவை கூட்டிச்சென்று குளிப்பாட்டினாள் லெட்சுமி. வீட்டை கழுவி சுத்தம் செய்து விட்டாள் லெட்சுமி.
அடுப்பங்கரைக்கு சென்றாள். அங்கே எந்த பொருளும் இல்லை. வெள்ளத்துரையை கூப்பிட்டாள்.
“யய்யா வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் இதுல எழுதியிருக்கேன். நம்ம ஊருல போய் வாங்கிட்டு வா”.
அமைதியாக நின்றான்.
“ம். சீக்கிரம் சோறு பொங்கி இந்த அம்மாவுக்கு கொடுக்கணும். பாவம் பசியோட இருக்கு”.
கையில் சீட்டை வாங்கினான்.
வெளியே கிளம்பினான்.
“நில்லு”. பூமா சத்தம் கொடுத்தாள்.
“என்ன?”
அமைதியாக நின்றான். “சோறு பொங்க வேண்டாம்.”
செல்லையா வாசலில் நின்று திரும்பினார்.
அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை ஆச்சாரம் பார்க்கிறாளோ?-. லெட்சுமி பொங்கினால் ஆச்சாரம் இருக்காது என நினைக்கிறாளோ?
“யம்மா அப்படின்னா எப்படி சாப்பிடுவோம்”.
“இங்க இனி சாப்பாடு வேண்டாம்”.
“அப்போ”
“என்னை உங்க கூட மேக்கரைக்கு கூட்டிட்டு போங்க”.
“என்னம்மா சொல்லுதிய”.
“ஆமாம். இந்த வீட்டில என்னால ஒத்தையில இருக்க முடியாது”. லெட்சுமி மார்பில் புதைந்து ஆழ ஆரம்பித்து விட்டாள்.
மூன்று பேரும் மௌனமாக இருந்தனர்.
செல்லைய்யா. “யம்மா நீங்க வேறே நாங்க வேறே. ஏதோ காரியம் செஞ்சிட்டோம். அது கூட தவறும்மா. ஆனாலும் உங்க முகத்துக்காக செஞ்சிட்டோம். ஆனா உங்களை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவ முடியுமாமா? அது சரியாம்மா?”
திகைத்துபோய் கேட்டார்.
“அப்போ. என்னை தனியா விட்டுட்டு போங்க. நாளைக்கு காலையில வாங்க. நானும் செத்து கிடப்பேன். என்னையும் தூக்கி அடக்கம் பண்ணிருங்க”.
மூவரும் மௌனமானர்கள்.
“வா. தாயி. வா. நீ எங்க கூட வா”. லெட்சுமி மௌனத்தை களைத்தாள்.
உற்சாகமாக பூமா கிளம்பினாள். அவள் தனது பாவடை தாவணி சட்டையை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டாள். இவர்களோடு கிளம்ப ஆயத்தமானாள்.
நால்வரும் வெளியே வந்தார்கள். கதவை சாத்தகூட பூமா நினைக்கவில்லை. அவளுக்கு இதுவரை இருந்த இந்த அக்ரகார வீடு சொந்தம் இல்லை என்ற நிலைக்கு வந்தாள். ஆனால் லெட்சுமி தான் கதவை சாத்தி சாவியை கையில் எடுத்துக்கொண்டாள்.
அந்தி சாயும் நேரம். தாமிரபரணியின் மேக்கரையில் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. வழியில் ஒரு சுடு குஞ்சி கூட இல்லை. ஒரு பக்கம் சிவன் கோயிலும், மறுபக்கம் பெருமாள் கோயிலும் இருந்தது. அந்த கோயில் ஆண்டவன் கூட இவளை பார்க்கும் அளவுக்கு நடை திறந்து வைக்க வில்லை. பாவம் அவரே பூஜை இல்லாமல் இருக்கிறார். அவர் எங்கே இந்த அபலை பெண்ணை பார்க்கப்போகிறார்.
அந்த அக்ரகாரத்தில் திறந்திருந்த ஒரே வீடும் அடைப்பட்டு விட்டது. நால்வரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
அவளின் பையை வெள்ளத்துரை கையில் வைத்துக்கொண்டான்.
தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி மறுகரைக்கு வந்து சேர்ந்தார்கள்.
ஆனால் அங்கே பெரும் பிரச்சனை காத்துக் கொண்டிருந்தது.
பிரச்சனை செய்வதற்காக ஊர் மக்கள் திரண்டு அவர்களை எதிர்பார்த்து காத்து நின்றனர்.
முறுக்கிய மீசையுடன் நாட்டாண்மை அவர்கள் முன்பு வந்து நின்றார்.
எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள் போல என நினைத்து பூமாவோடு செல்லையா வீட்டுக்குள் நுழைந்தான் வெள்ளத்துரை. இவர்களை எல்லாம் அவன் பார்க்கவில்லை.
நாட்டாண்மை கூச்சலிட்டார். “வெள்ளத்துரை நில்லு”
அமைதியாக திரும்பினான். “என்னய்யா”
“அந்த பெண்ணை நீ வீட்டுக்குள்ள கூட்டிட்டு போறதா இருந்தா, நீ குடும்பத்தோட இந்த ஊரை விட்டு போயிரு”.
செல்லைய்யா முன்னால் வந்தார். “ஏய்யா. இது என் வீடு. என் வீட்டுக்குள்ள அந்த பிள்ளைய கூட்டிட்டு போன உங்களுக்கென்ன”.
“யாருல சொன்னா. இது உன் வீடுன்னு. இது ஊர் வீடு. அவனுக்கு அடைக்கலம் கொடுத்தா நீயும் வெளியத்தான் போவணும்”.
“அப்படிபோடுவே அறுவாவ. நீர் சொன்னவுடனே நான் வெளியே போனுமோ. யோவ். நான் இன்னைக்கு ஊரைவிட்டு வெளியே போயிருவேன். அப்புறம் ஊரும் நீரும் நாறுப்போவிய நாறி. உங்க துணியை துவைக்க ஆளுகிடைக்காது ஆமாம்”.
“யோவ் நாட்டாம்மை. அறிவு இருக்காவே. வெளுப்பான் கிட்ட எதுக்கு வம்புக்கு போறீரு. நமக்கு வெள்ளத்துரைத்தான் வம்பு பண்ணுதான். அவரை வெளியே அனுப்ப வழியை பாரும்வே”.
சரிதானே அனைவரும் ஆமோதித்தினர்.
செல்லையா பேசினார். “அய்யாமாருவளே. நான் வெளுப்பான் தான். இல்லைன்னு சொல்லை. நான் நீங்க போன்னு சொன்னா ஊரை விட்டு போக கடமைப் பட்டவன்தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா உங்க ஊருக்கு உழைச்சு வம்பா போனவரோட பையனை ஊரை விட்டு உடனே போவச்சொல்லுதியளே. இது நியாயமா?”
“ஏலே வெளுப்பான். உனக்கு புத்தி எங்க போச்சு. அவன் சும்மா வந்து இருக்கும் போது நாங்க வெறட்டையா செஞ்சோம். இப்போ அவன் தேவையில்லாததை பண்ணிக்கிட்டு வந்து நிக்கான்”.
அமைதியாக இருந்தார்கள்.
“அய்யர் செத்து 24 மணி நேரம் ஆவலை. அவரு பொண்ணை நம்ம ஊருக்குள்ள கொண்டு வந்துட்டான். அவனை இங்க வைக்க முடியுமாவே”.
“அய்யாமாருவளே. தப்பா நினைக்காதீய. ஒரு அபலை பெண்ணை கூட்டிட்டு வந்திருக்கான். அதுல என்ன அய்யா தப்பு இருக்க போவுது”.
“அது சரி. உனக்கு ஒண்ணுமே தெரியாதாக்கும். அவன் ராத்திரி ராத்திரி இந்த கிராமத்திலே போய் இந்த புள்ளை கூட குடும்பம் நடத்தியிருக்கான். குருட்டு அய்யருக்கு விவரம் தெரிஞ்சி போச்சு. பெண்டாட்டியோட தற்கொலை பண்ணி செத்து போயிட்டாரு. நல்லதாப்போச்சின்னு கள்ள பொண்டாட்டியை கூட்டிட்டு நம்ம ஊருக்குள்ள வந்துட்டான். அவன மேலே தப்பு இல்லையா?”
சாட்டையை கொண்டு யாரே பூமா மேலே அடிப்பது போலவே இருந்தது.
கதறியபடி அழுதாள். அதன்பின் வாசல் படியில் அப்படியே அமர்ந்து விட்டாள்.
செல்லையா கதறினார். “அய்யாமாரே சும்மா பேசாதீங்க. வெள்ளத்துரைக்கும், அந்த பிரமாணத்தி அம்மாவுக்கும் எந்தத்தொடர்ப்பும் இல்லை. அனாதையா வீட்டுக்குள்ள இருக்க பயந்துக்கிட்டு இருந்துச்சுய்யா. நாங்க பிள்ளை பயப்படமா இருக்கட்டுமேன்னு கூட்டிட்டு வந்துட்டோம்”.
“ஏன். அய்யமாரு சாபத்தை இந்த ஊரு வாங்கணுமுன்னு நினைச்சியளோ. நல்லா இருக்குவே நியாயம். உமக்கும், அந்த கருப்பனுக்கு மனசு கஷ்டப்பட்டா, அந்த அம்மாவை கூட்டிட்டு பம்பாயி, மெட்ராசுன்னு போங்க . இல்லாட்டி. அய்யர் வீட்டுல போய் காத்து கிடங்க. இந்த ஊருக்கு ஏம்முல்ல கூட்டிட்டு வந்திய”.
காட்டமாக பேசினான்.
லெட்சுமி வெளியே வந்தாள்.
“ அப்பா நீங்க எதுவும் பேச வேண்டாம். நான் பேசிக்கிறேன்”.
“என்ன வெள்ளக்கார துரைச்சி அம்மா நீங்க என்ன பேச போறீய”. எக்காளமாய் ஒருவன் பேசினான்.
வெள்ளத்துரைக்கு கண் சிவந்தது. தாயை வெள்ளக்காரி என ஏளனம் செய்கிறான். வளர்த்தவனை ஏலே போல என பேசுகிறான். அரிவாளை எடுத்து சீவி விட வேண்டியது தான் என நினைத்தான். வீட்டுக்குள் நுழைந்தான். அங்கே தொங்க விடப்பட்ட அரிவாளை எடுத்தான். வீட்டை விட்டு வெளியே வர முயற்சித்தான். பூமா அவனை தடுத்தாள்.
“வேண்டாம். என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம். நான் கிளம்பிருதேன். நீங்க கொலை காரராக ஆக வேண்டாம்”. கையெடுத்து கும்பிட்டாள். பூமாவின் கண்களை பார்த்து அப்படியே அடங்கிப்போனான்.
அரிவாளை கீழே எரிந்தான்.
அதற்குள் லெட்சுமி வெளியே வந்தாள்.
“அய்யா நாட்டாமை காரரே. ரொம்ப சந்தோசம். என் புருசன் இந்த ஊருக்கு நல்லது செஞ்சதுக்கு, நல்ல மரியாதை பண்ணிணீங்க. இப்போ எதிரியா இருந்தாலும் உதவி செய்யனுமுன்னு நினைச்சி பக்கத்து ஊரு பெண்ணை சாதி சமயம் பாக்காம கூட்டிட்டு வந்த என் பையனுக்கும் நல்ல மரியாதை கொடுக்கீறிங்க. அய்யா மாரே எங்க குடும்பத்தால இந்த ஊருக்கு எந்த கஷடமும் வர வேண்டாம். நஷ்டமும் வரவேண்டாம். எங்க கஷ்டம் எங்களோட, டேய் வெள்ளத்துரை, அந்த பெண்ணை கூப்பிட்டுட்டு வாடா. இந்த ஊரைவிட்டு வெளியே போவும். எங்கேயாவது வாழுவோம். இவர்களுக்கு எந்த கஷ்டமும் கொடுக்க வேண்டாம்”.
செல்லையா காலில் விழுந்தாள்.
“மூச்சுக்கு மூச்சு வெளுப்பான் வெளுப்பான்னு உங்களை சொல்லுதாங்க அப்பா. உங்களை மாறி லட்சப்பேரு வந்தாலும் இவுக மனசுல உள்ள அழுக்கை சுத்தப்படுத்தவே முடியாது அப்பா.-
செல்லையா கண்களில் கண்ணீர் வடிந்தது.
“இந்த நிமிசம் வரை என் பையனுக்கோ, அல்லது அந்த பொண்ணுக்கோ கல்யாணம் பண்ணணுமுன்னு ஆசை வரலை. அந்த பெண்ணை எப்படியாவது அவங்க சொந்த காரங்க கிட்ட கொண்டு சேக்கணுமுன்னுதான் நினைச்சி கூட்டிட்டு வந்தேன். ஆனால் ஒரு நிமிசத்தில இரண்டு பேரையும் முடிச்சு போட்டு பேசி, எங்களை ஊரை விட்டு முடுக்கவே திடடம் போட்டு, ஊர் கூடி வந்திருக்கிய”.
அனைவரும் அமைதியாக இருந்தனர்.
“இப்பா நான் கேக்கய்யா. அவங்க ரெண்டு பேருக்கும் நான் கல்யாணம் செஞ்சி வைச்சா நீங்க என்ன செய்ய முடியும். சாதி என்ன சாதி. அவங்க இரண்டு பேரும் ஆண் பெண் என்ற சாதி. அவங்க இணையிறதை தடுக்க யாருக்குமே தகுதி இல்லை. அதிலேயும் குறிப்பா இந்த ஊருக்காரங்களுக்கு தகுதியே இல்லை”.
“யய்யா வெள்ளத்துரை வாய்யா. இந்த ஊரை விட்டு போவோம்”.
மறுநிமிடம்.
தாயும் மகனும், அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு வெளியே கிளம்பினார்கள். அந்த பெண்ணின் சட்டை துணிமணி, மற்றொரு சாக்கு பையில் வெள்ளத்துரை, அவனின் அம்மா துணியை எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினர்.
செல்லையா ஓடி வந்தார். வெள்ளத்துரையை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார்.
உள்ளே இருமல் சத்தம் கேட்டது. செல்லையாவின் நோயாளி மனைவி கேட்டாள். “என்னங்க அங்க சத்தம்”.
“ஒண்ணுமில்லை. உன் மகளும் பேரனும் விருந்துக்கு வந்திருந்தாவுலா. ஊருக்கு போறாவ. நான் வழி அனுப்பிக்கிட்டு இருக்கேன்”.
அந்த பெண் மீண்டும் இருமிய படியே படுத்து தூங்க ஆரம்பித்தாள்.
லெட்சுமியும், பூமாவும் கதறி விட்டார்கள்.
செல்லையா அந்த பையை தூக்கினார். விறுவிறு வென முன்னால் நடக்க பின்னால் லெட்சுமியும், அவள் பின் பூமாவும், கடைசியில் வெள்ளத்துரையும் நடக்க ஆரம்பித்தான். ஊரே வேடிக்கை பார்க்க செல்லையா வீட்டு நாய் விஸ்வாசமாக பின்னால் ஓடிச் சென்றது.
நன்றி கெட்ட மனிதர்கள் எல்லோரும் கரையில் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
வயற்காட்டுக்குள் இறங்கினார்கள். வரப்பு வழியாக வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.
பாவம் இதுவரை வரப்பு வெளிகளை பார்க்காத பூமாவின் கால் வழுக்கியது. அவளை தாங்கி பிடித்தான் வெள்ளத்துரை.
வழுக்கிய போது மட்டும் தான் ஆதரவு தருவானா? இல்லை
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவாள்)