தாமிரபரணி ஆறு சாக்கடை கலந்து வருகிறது. இதனால் மீன் இனம் அழிந்து வருகிறது என நாம் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் நமக்கு சந்தோசம் தரும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதை பற்றித்தான் நாங்கள் பார்க்கிறோம்.
கணக்கில்லாமல் கழிவுநீர் கலந்தாலும் தாமிரபரணியை பாதுகாக்கும் 125 வகை மீன் இனங்கள் உள்ளது என்றதொரு தகவலை தெரிவித்தார்.
இந்த தகவலை பெங்களூரு சூழலியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். அதைபற்றி விவரத்தினை தான் நாம் காணப்போகிறோம்.
தாமிரபரணி ஆறு கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் பொதிகை மலையில் தோன்றி 128 கி. மீ பயணித்து கடலில் கலக்கிறது இந்த நதியால் 86, 107 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. காரையாறு சேர்வலாறு, மணிமுத் தாறு, கடனாநதி, ராமநதி, சிற்றாறு, பச்சையாறு என கிளை நதிகள் சங்கமிக்கும் பெரிய நதியாகவும் தாமிரபரணி உள்ளது. காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய பெரிய அணைகள் மூலம் தாமிரபரணி நதியில் பாய்ந்து ஓடும் தண்ணீர் கோடை மேலழகியான் நதியுண்ணி, கன்னடியன், அரியநாயகிபுரம், பழவூர், சுத்தமல்லி, மருதூர், ஸ்ரீவைகுண்டம் என எட்டு அணைக்கட்டுகள் மூலம் பாசனத் திற்கு தண்ணீர் பாய்கின்றன. இதில் முதலில் உள்ள ஏழு அணைகள் குறுநிலமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன. இவர்கள் தாமிரபரணி ஆற்றில் 11 கால்வாய்கள் வெட்டி நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்கான சான்று உள்ளது. இதற்காக நமது முன்னோர்களை பாராட்டியே தீர வேண்டும். நதியின் கடைசி அணைக்கட்டான, ஸ்ரீவைகுண்டம் அணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்டுள்ளது. இந்த அணையும் சிறப்பு மிக்க அணைத்தான். இதில் தான் கடலில் பாதி கடம்பா என போற்றப்படும் குளமும், தூத்துக்குடி அருகில் உள்ள சிறப்பு மிகு கோரம்பள்ளம் குளமும் பாசன வசதி பெறுகிறது. இதில் மற்றுமொரு விசேஷம் இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் தூத்துக்குடி மாநகரின் நடுவில் தாமிரபரணியை போல ஓட விட்டுள்ளார், ஆங்கிலேய கலெக்டர் பக்கிள் துரை. இதனால் இந்த ஓடையை பக்கிள் ஓடை என்றே அழைக்கிறார்கள்.
3000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்தே பொருனை, தென்பொருனை என சங்க இலக்கியங்கள் தாமிரபரணி நதியே பதிவு செய்து வந்துள்ளனர். இதனால் தான் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருநை என்ற பெயரை உச்சரித்து வருகிறார்கள். இதனால் நெல்லையில் வருடந்தோறும் பொருநை இலக்கியத் திருவிழாவும், நெல்லை பொருநை புத்தக கண்காட்சியும், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மாநில அரசால் தொல்லியல் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட பொருள்களை காட்சி படுத்தும் ரெட்டியார் பட்டி மலையில் அமைய உள்ள அருங்காட்சியகத்துக்கு பொருநை அருங்காட்சியகம் என பெயர் வைத்துள்ளனர்.
தாமிரபரணி நதிக்கரையோரம் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் தொல்பொருள் எச்சங் களையும் பண்டைய தமிழர்களின் வாழ்விடங்களையும் இன்றும் தொடர்ந்து தேடி வருகின்றனர். அதற்காக மத்திய தொல்லியல் துறை மூலமாக திருக்களூர், அகரம், ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு நடந்து முடிந்துள்ளது. கருங்குளம், கொங்கராய குறிச்சி பகுதியில் அகழாய்வு நடைபெற உள்ளது.
ஏரல் அருகே சிவகளையில் நடந்த தொல்லியல் ஆய்வில் கிடைத்த நெல்மணிகளை அமெரிக்கா பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பி அதன் வயதை 3200 ஆண்டுகள் பழமையானது என நிரூபித்து உள்ளனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆற்றில் நெல்லை மாநகரின் கழிவு நீர் எவ்வித கட்டுப்பாடும் இன்றி நேரடியாக கலக்கிறது. இதற்காக நமது வழக்கு ஒன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. நிச்சயம் இந்த வழக்கில் நல்லதொரு தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த சூழலியல் ஆராய்ச்சியாளர் நிரஞ்சன் முகர்ஜி என்பவர் நாலு மாதங்களாக தாமிரபரணி ஆற்றல் மீன்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அந்த ஆராய்ச்சி முடிவை நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் வெளி யிட்டார். இந்த கருத்தரங்கு கல்லூரியின் உயிரியல் துறை மற்றும் அகத்தியர் மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் இணைந்து நடத்தியது.
ஆய்வு முடிவுகள் குறித்து சூழலியல் ஆய்வாளர் நிரஞ்சன் முகர்ஜி மாணவர்களிடம் கூறியதது ஆச்சரியப்பட வைத்தது.
தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் கணக்கில்லாமல் கழிவு நீர் கலக்கப்பட்டு வருகிறது இருந்தாலும் ஆறு முழுமையாக கழிவுநீராக மாறாமல் இருப்பதற்கு மீன்கள் தான் காரணம். இப்போது இருக்கும் தாமிரபரணி நதியே நமது அடுத்த தலைமுறையும் பார்க்க வேண்டும் என்றால் ஆற்றில் இருக்கும் மீன்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
கழிவு நீர் கலப்பால் பல மீன் இனங்கள் அழிந்திருக்க வாய்ப்பு உள்ளது அது குறித்த தகவல் நமக்கு தெரியாது காரணம் தாமிரபரணி ஆற்றை யாரும் சூழலியல் நோக்கில் ஆய்வு செய்யவில்லை இது போன்ற காரணங்களால் தான் ஏட்ரி சார்பில் தாமிரபரணி நதியை ஆய்வு செய்ய திட்டமிட்டோம். அதற்காக நாலு மாதங்களாக ஆற்றில் தொடர் ஆய்வில் ஈடுபட்டேன். ஆற்றில் காணப்படும் மீன் இனங்கள் குறித்து ஆய்வு செய்ததில் 125 வகையான மீன் இனங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் நான்கு மீன் இனங்கள் அழியும் நிலையில் உள்ளன என்றார்.
மேலும் ஆய்வாளர்கள் கூறும் போது வளர்ப்பு மீன்களை ஆற்றில் விடக்கூடாது என்றதொரு கோரிக்கையை வைத்தனர்.
தாமிரபரணியில் பொதுவாக வெளிச்சி, சேவல் கெண்டை, உழுவை, அயிரை, பவானி கெண்டை, பஞ்சலை, வானதி கெண்டை, முண்டக்கண்ணி, பரோடி, செல் கெண்டை, ஊடான், காக்காச்சி, உடுப்பாத்தி உள்ளிட்ட மீன் இனங்கள் காணப்படுகிறது. ஆக்கிரமிப்பு மீன் இனங்கள் என கூறப்படும் ஜிலேபி, ஆப்பிரிக்கன் தேளி, டேங்க் கிளீனர் ஆகியவையும் உள்ளன. தாமிரபரணி நீர் சூழலுக்கு ஒன்றி வாழும் மீன்களை இந்த ஆக்கிரமிப்பு மீன் இனங்கள் வேட்டையாடுகின்றன. இதுவும் மீன் இனங்களின் சமநிலையை பாதித்து சூழலியல் மாற்றத்திற்கு காரணமாக அமைந்து விடும். அதனால் வீடுகளில் வளர்க்கும் மீன்களை ஆற்றில் விடக்கூடாது என்கின்றனர் சூழலில் ஆய்வாளர்.
(நதி வற்றாமல் ஓடும்)