தூத்துக்குடி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இன்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் எலுச்சூரி ரத்னாகர ராவ் (விளாத்திகுளம் / தூத்துக்குடி), சோடிங்புயீ (திருச்செந்தூர் / ஸ்ரீவைகுண்டம்), அரவிந்த் குமார் வெர்மா (ஒட்டப்பிடாரம் / கோவில்பட்டி) மற்றும் காவல் பார்வையாளர் ஹிர்மத் சுதிர் ஆகியோர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் இந்த ஆய்வை நடத்தினர்.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வ.உ.சி. பொறியியல் கல்லூரிக்குக் கொண்டு வரப்படும். இதற்காகக் கல்லூரியில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் காப்பு அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்களுக்கான தனித்தனிப் பாதைகள், ஊடக மையம், குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, வாக்கு எண்ணும் மைய ஒருங்கிணைப்பு அலுவலர் சுகுமாறன், தேர்தல் பயிற்சி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் லொரிட்டா, சிவசுப்பிரமணியன், பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் செல்வி, தேசிய தகவலியல் அலுவலர் சுரேஷ்குமார், வரவேற்பு ஒருங்கிணைப்பு அலுவலர் சாந்தி, தேர்தல் வட்டாட்சியர் தில்லைபாண்டி, தூத்துக்குடி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமணி ஸ்டாலின், வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பீட்டர் தேவராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளைத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி உறுதி செய்ய ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


