கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். வந்தே மாதரம் என்று முழுங்கியதற்காக தலையை முழுமையாக மழிக்க அனுமதிக்காமல், சவரத்தொழிலாளி சிங்காரத்தை அனுப்பி விடுவார் வழக்கறிஞர் இரங்கசாமி ஐயங்கார். ஆனால் உண்மையில் சிங்காரம்தான் மழிப்பதைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார். பாதியை மழிப்பதற்காக திருநெல்வேலியை விட்டு காவல்துறை பாதுகாப்புடன் வெளியேறினார் இரங்கசாமி ஐயங்கார் என்பதே உண்மை. பத்திரிகைகளில் பதிவாகியுள்ள இச்செய்தியை தன்னுடைய, “திருநெல்வேலி எழுச்சியும் வஉசியும் 1908” என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார் ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
விடுதலைப் போராட்டம், புரட்சி நடக்கும் போது ஒரு தரப்பினரே அதில் பங்கேற்கின்றனர். மற்றவர்கள் பெரும்பாலும் பார்வையாளர்களாகவே இருந்து விடுகிறார்கள். ஆனால் 1908-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த எழுச்சியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற நிகழ்வை ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் வேங்கடாசலபதி. வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் மூன்று பேரும் மார்ச் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். 13-ஆம் தேதி திருநெல்வேலி எரிமலை போல் வெடித்துச் சிதறியது. அங்கிருந்த அரசு அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. ஒரு மண்ணெண்ணெய் அங்காடி மூன்று நாட்களாக எரிந்தது. ஒரு காவல்நிலையம் எரிக்கப்பட்டது.
சாதாரண மக்கள் இதில் பங்கேற்றனர். கசாப்புக்கடை நடத்தியவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு இறைச்சியை விற்க மறுத்து விட்டனர். இலங்கையில் இருந்து இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பலர் ஜட்கா வண்டி ஓட்டுபவர்கள். சமையல்காரர் ஒருவர் உண்டு. மாட்டுத்தரகர், ஹோட்டல் நடத்தியவர், பொற்கொல்லர், கல்யாண தரகர், விறகு வெட்டுபவர், ஓய்வு பெற்ற காவலர் மூவர், நெசவாளி என எல்லோரும் சிறையில் அடைக்கப்ப்டடனர்.
அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களைக் கூட அரசு மிரட்டியது. அவர்களைத் தகுதி நீக்கம் செய்வதாகப் பயமுறுத்தியது. ஆனால் சிறையில் இருந்து வழக்கறிஞர்களை வைத்து வழக்கை நடத்தினார் வ.உ.சி.
எழுச்சியில் பங்கேற்றதற்காக 300 போலீஸ்காரர்களை நிறுத்தி, தண்டனை வரி வசூலித்தது. திருநெல்வலியிலும் தூத்துக்குடியிலும் சொத்து வரி மூன்றரை மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டது.
வேளாளன் சிறை புகுந்தான், தமிழகத்தார்
மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி! என்று பாடினார் பாரதியார்.
வெள்ளையனை உலுக்கிய வ.உ.சி. சொல்லொணா துயரத்துக்கு ஆளானார். சென்னையில் பல சரக்குக்கடை வைத்தும் மண்ணெண்ணெய் விற்றும் பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இன்று அவரைத் தன் சாதிக்காரன் என்று பெருமைக் கொண்டாடும் எவரும் ஒரு துரும்பை எடுத்துப் போடவில்லை என்பதே உண்மை.
நன்றி… கலாபன் பகவதி பதிவு