ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகளைக் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் வரலாற்றுத் துறை பயணம் மேற்கொண்டனர். 69 பேர் கொண்ட குழுவினர் இந்த பயணத்தில் ஈடுபட்டனர். இவர்கள் திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் கலைச்சிற்பங்களை பார்வையிட்டனர். அவர்களுக்குத் திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியக காப்பாச்சியர் சிவசக்தி வள்ளி மற்றும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கோவிலில் உள்ள சிற்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
அதன் பின் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணிகளைப் பார்வையிட்டனர். புதிதாக நடைபெறும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வாளர் அருண் மாணவிகளிடம் விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியக காப்பாச்சியர் சிவசக்தி வள்ளி மற்றும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, துறைத்தலைவர் அமிர்தவள்ளி, உதவி பேராசிரியர் முனைவர் கற்பக செல்வி, முனைவர் கல்யாணி, கௌரவ விரிவுரையாளர் வெங்கடேஸ்வரி ஆகியோர் உடன் வந்தனர்.