மாரியப்பன் வேறு மாதிரி திட்டம் தீட்டி வைத்திருந்தான்.
“இனிமேல் ஆற்றை காப்பாற்றி என்ன செய்ய பேசாமல் மண் திருடர்களோடு சேர்ந்து போய் விட வேண்டியது தான்” என திட்டமிட்டான்.
அதன் படியே வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, மணல் மாபியா கும்பலில் இருந்து ஒருவன் இவனை பார்க்க வந்தான். அந்த வேளை ஒரு சாயங்கால வேளை. கிட்டத்தட்ட ஊரில் உள்ளவர்கள் கழனி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று அடைய ஆரம்பித்து இருந்தனர்.
வீட்டுக்குள் வந்தவன், மாரியப்பனிடம் தனியாக பேசினான்.
முதலில் பிடிக்கொடுக்காமல் தான் பேசினான் மாரியப்பன்.
ஆனால் வந்தவன் திட்டவட்டமாக சொன்னான். “இங்கே பாரு மாரியப்பன். இந்த நீதிபதி இருக்கத்தண்டியும் தான் இப்படி சட்டதிட்டம் போடுவாரு. மூனு மாசத்துக்கு ஒரு முறை இவுகளுக்கு மாற்றம் வரும். இவர் மெட்ராஸ் கோர்டுக்கு போய் விடுவார். இவரு இடத்தில இன்னொருத்தர் நிச்சயம் வருவாரு. அந்த சமயத்தில கண்டு காணமலும் இருந்து கொள்வாங்க.அட இவுகளுக்கு ஒரு வழக்கா இருக்கு. எத்தனை வழக்கு வரும். ரெகுலரா வர்ற வழக்கவே அவர்களால் பார்க்க முடியாது. அந்த நேரம் நாங்க மணல் அள்ள ஆரம்பிச்சிடுவோம். கவர்மெண்டே எங்களுக்கு சப்போர்டா இருக்கு. எதிர்கட்சியானாலும் ஆளுங்கட்சியானாலும் அவங்களும் எங்களுக்கு சப்போர்ட்தான். அதனால நீ பேசாம எங்க கூட வந்துரு. அடேய் தாமிரபரணியில எங்க மணல் அள்ளினாலும் உன்னை ஒரு பார்னரா சேர்த்து கொள்ளுதோம்டே” என்றான்.
பார்னர் என்றவுடன் மாரியப்பனின் சிறுமூளை வேலை செய்ய ஆரம்பித்தது.
“நான் உங்க கூட பார்னரா வந்திருவேன். அப்போ என் நண்பர்கள்?”. கேள்வி கேட்டான்.
“அவங்களையும சேர்த்துக்கா. கூட கொஞ்சம் பங்கு தாரேன் அதை பிரிச்சி கையில கொடு. அந்த காளியும் செல்வியும் தானே. பாவம் மோசமான குடிசல் வீட்டில இருந்துக்கிட்டு பாடாய் படுதாவ. அவுகளுக்கு நல்ல வீடா கட்டி கொடுத்துருவோம்”. அள்ளித்தெளித்தான் வாக்குறுதிகளை.
அமைதியாக இருந்தான் மாரியப்பன். “தாத்தா இருக்காரு”.
“தாத்தா எப்ப பாத்தாலும் இப்படித்தான் அலையுவாரு. அவரு சாவதண்டியும் ஊரு ஊரா மனுவை கொடுத்துட்டு அலையுவாரு. அவருக்கெல்லாம் ஒண்ணும் செய்ய வேண்டாம். மனுசன் பஸ்கே கஸ்டப்படுவாரு. ஆனாலும் அவர் திருந்த மாட்டாரு. சும்மா அவரை அந்தரத்தில விட்டுரு”.
மாரியப்பன் அமைதியாக இருந்தான். “உண்மைத்தான் தாத்தாவுக்கு பெரிசா ஒண்ணும் செய்ய வேண்டியது இருக்காது”. ஆனாலும் வேறு ஏதாவது பிரச்சனை வருமோ என யோசித்தான்.
“கொஞ்சம் யோசிக்க டைம் தாங்க”. அவனுடைய வேகம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது.
“ம். இப்போ நீ வழக்கை வாபஸ் வாங்கு. உன் கதையை பாரு. மத்தவங்க வந்தா சேத்துக்க. இல்லாட்டி விட்டுருவோம். இங்க பாரு இப்போ கூட பணம் கொண்டு வந்திருக்கேன்”.
அருகில் இருந்த பெட்டியை திறந்து அதில் இருந்து ஒரு கட்டு நோட்டை எடுத்து அவன் முன்னால் போட்டார்.
மாரியப்பனால் ஒண்ணும் பேச முடியவில்லை. அவன் இப்படி ரூபாய் தாள்களை முழுசா வாழ்நாளில் பார்க்கவே இல்லை.
அவன் யோசிக்க யோசிக்க இவருக்கு சாதகமானது. அந்த கட்டோடு உடன் இரண்டு கட்டுகளை வைத்தார். “இங்க பாரு தாமிரபரணியில எங்க மணல் அள்ளினாலும் நீ ஒரு பாட்டனரு. இந்தா அதற்கான அக்ரிமெண்ட். அதுல முதலுல கையெழுத்தை போடு. அடுத்தாப்புல இந்த வாபஸ் கடிதத்தில ஒரு கையெழுத்தை போடு”.
இப்போது அவனால் பேச முடியவில்லை. தாமிரபரணி அழிவு, தாமிரபரணி தாத்தா, நண்பர்கள் செல்வி காளி, இவர்களை விட அருகே கிடந்த மூன்று கட்டு நோட்டு மிகவும் பிரகாசமாக தெரிந்தது.
மாரியப்பன் இரண்டு கடிதத்தில் கையெழுத்து போட்டு விட்டு மூன்று கட்டு பணத்தையும் எடுத்துவிட்டு மீண்டும் தலையை சொரிந்தான்.
நாளாவதாக ஒரு கட்டு பணத்தினை கொடுத்து விட்டு அந்த அண்ணாச்சி காரில் சிட்டாய் பறந்தார்.
அதன் பிறகு அவனால் இருப்பு கொள்ளவில்லை. காளி செல்வியிடமும் சரியாக பேச முடியவில்லை. ஆனாலும் அவன் மனதுக்குள் சக்கடமாக இருந்தது. பணத்தை வைத்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அதை வங்கியில் கொண்டு போடவும் பயமாக இருந்தது. வீட்டில் ஒரு இடத்தில் ஒளித்து வைத்து விட்டு, வெளியே போகவும் முடியவில்லை. பணத்தினை காவல் காத்துக்கொண்டே இருந்தான்.
ஒரு நாள் அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ்க்கு போன் வந்தது. அந்த போனில் வக்கில் பேசினார். “என்ன வழக்கை முடிச்சிட்டீங்களா?” என்றார்.
“ஆமாம்”.
“எங்கிட்ட கேட்டு இருக்கலாமே. கொஞ்சம் அதிகமாக பேசியிருக்கலாமே” என்றார்.
“பராவாயில்லை”.
போனை வைத்து விட்டார் வக்கீல். அவருக்கு வருத்தம் தன்னை வைத்து பேசியிருந்தால் தானும் கொஞ்சம் சம்பாதித்து இருக்கலாம். அல்லது தானும் பார்டனரா மாறியிருக்கலாம்.
இவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட மாதக்கணக்கில் கடந்து விட்டது.
தற்போது காளிக்கும் தாத்தாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது. இது கூட இவனுக்கு தெரியவில்லை.
இருவரும் கோபமாக வீட்டுக்கு வந்தனர்.
செல்வியிடம் சொன்னவுடன் அதிர்ந்தே போய் விட்டாள். “இப்போதே போய் அவனிடம் பேசுவோம்” என்றாள்.
“விடியட்டும் பேசிக்கலாம்”.
மூன்றுபேரும் அமைதியானார்கள்.
ஆனால் எப்படி அமைதியாக இருக்க முடியும். எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்.
சாப்பாடு எடுத்து வைத்தாள். அவனால் சாப்பிட கூட முடியவில்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தாமிரபரணியை கூறு போட இந்த அயோக்கிய பயலும் உடன் சென்று விட்டானே என நினைத்தபடியே இருந்தான். இரவு வந்தது. இவருவர் படுக்க சென்றார்கள்.
ஒரே ஒரு ஓலைப்பாய்.இந்த ஐந்து வருடத்தில் அதை மாற்ற வில்லை. அதன் மீது இரண்டு பேரும் படுத்தார்கள்.
படுத்து கிடந்த படியே மேல் .கூரையை பார்த்தார்கள்.
அந்த வீடு ஒழுகும் நிலையில் இருந்தது. அதுபோலவே தாமிரபரணி கதையும் இருந்தது.
“நான் காப்பாற்றுவேன். நான் தான் செலவழிப்பேன் என என்னா மாதிரி குதித்தான். இப்போது இப்படியோ யிட்டானே”.
செல்வி சொன்னாள். “ஏங்க இப்படி இருப்பான் மாரியப்பன்னு நினைக்கவே இல்லையே?”.
“ஆமாம் இப்படி மோசமா போயிட்டானே”.
“நம்ம கூடவே இருந்தானே”. மனம் வெறுத்து போய்விட்டாள். “ஒருவேளை அன்றைக்கே நாம் வழக்கு போட்டிருக்க வேண்டும்”.
இருவரும் அமைதியாகவே இருந்தார்கள். இவருக்கு இளவயது. இந்த வயதில் தாமிரபரணிக்காக இப்படியொரு வேள்வி எடுத்து ஒருவரை ஒருவர் தொடாமல் இருக்கிறார்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டு இருந்தால். இன்று அழகான ஆணோ, பொண்ணோ குழந்தைகள் பிறந்து இருக்கும். ஒருவேளை அப்படி குழந்தை பிறந்து இருந்தால் அந்த குழந்தையை வளர்க்க வேண்டும் என வேறு வேலைக்கு சென்று இருப்பார்கள். தாமிரபரணியை மறந்து இருப்பார்கள். அதனால் தானே இந்த வேள்வி. என் தாமிரபரணி தாயை காப்பாற்றி விட்டுத்தான் நாங்கள் கணவன் மனைவியாக வாழுவோம் என முடிவு செய்துள்ளார்கள்.
இருவரும் தாமிரபரணியை போலவே அனாதை. ஒருவேளை இருவருக்கும் தாய் தந்தையர் குடும்பம் இருந்து இருந்தால், ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள். இவர்கள் சேர்ந்தார்களா? இல்லையா? இவர்களுக்கு ஏன் ஐந்து வருடம் ஆகியும் குழந்தை இல்லை என கேள்வியை எழுப்பி யிருப்பார்கள். ஆனால் இவர்களை ஏன் என்று கேட்க ஆள் இல்லையே.
தாணுலிங்கம் வரும் வேளையில் எல்லாம் தொண்டு நிறுவனம் பற்றிய வேலையை தான் சொல்வார் கேட்பார். ஆனால் ஒரு நாளும் உங்களுக்கு ஏன் குழந்தை இல்லை. நீங்கள் கணவன் மனைவியா இருக்கிறீர்களா? இல்லையா? என்று கூட கேட்க மாட்டார். அவருக்கு இதுவா வேலை. அரசிடம் பல திட்டங்களை வாங்கியுள்ளார். அந்த வேலைகளை முடித்துக்கொடுக்க வேண்டும். தற்போது கூட தாமிரபரணி மீது அதிக ஆர்வம் காட்டுவதால் அவருக்கு தரவேண்டிய வேலைகள் சில மாற்று தொண்டு நிறுவனத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. எனவே அதை எப்படி நிறுத்த என முயற்சி செய்து, அவரும் இனி தாமிரபரணியை பற்றி பேசக்கூடாது என முடிவு எடுத்து இருந்தார்
தாத்தா தாமிரபரணி தாத்தா, பேரை போலவே காலையில் இருந்து மாலை வரை பொது வேலைத்தான். நதியை காப்பாற்ற, நதி புகழ் பாட என அலைகிறார். பாவம் அவருக்கு சாப்பாடு காளியும் செல்வியும்தான் போடவேண்டியது இருக்கு. அவரும் அவர் குடும்பமும் பிரிந்து கிட்டத்தட்ட 30 வருடம் ஆகி விட்டது. அவர் துவைத்த பூ போன்ற கதர் சட்டை வேஷ்டி கூட சலவைகாரர் கொண்டு தருவார். அதை உடுத்துக்கொண்டு காலையில வீதி வந்து விடுவார். பாவம் சலவை காரருக்கு பல மாதம் பாக்கி. ஆனால் அவர் கேட்க மாட்டார். காரணம் அவருக்கு அரசிடமிருந்து இலவச தேய்ப்பு பெட்டி வாங்கிகொடுத்தவர் தாத்தாததான். அதனால் அவருக்கு விசுவாசம். தாத்தா அந்த வேஷ்டி சட்டையை அணிந்து கொண்டு கிளம்பி விடுவார். அன்றன்றைக்கு யாரவது காலை சிற்றுண்டி, மதியம் உணவு, இரவு சிற்றுண்டி என தருவார்கள். தந்தால் சாப்பிட்டுக்கொள்வார்.
யாரும் தாரவிட்டாலும் வேண்டும் என கேட்கமாட்டார். பசியோடு படுத்துக் கொள்வார். அவருடைய வேள்வி அப்படிப்பட்டது. குடும்பம் பற்றியே எதுவுமே தெரியாத அவர் எங்கே காளிக்கும் செல்விக்கும் திருமணம் ஆகி பல ஆண்டு ஆகி விட்டதே. குழந்தை ஏன் இல்லை என கேள்வி கேட்கவா? போகிறார்.
இரவு காளி தான் நினைத்தான். நாம் எடுத்த முடிவு சரியில்லையோ. நதியை காப்பாற்ற வேண்டியது தான் அதற்காக செல்வியை கஷ்டப்படுத்துகிறோமோ? நம்மை நம்பி வந்தாள். அவள் என்ன சுகத்தினை கண்டாள். இவரும் உடலால் தப்பு செய்தவர்கள் என குற்றம் சாட்டித்தானே பஞ்சாயத்து தாரர்களும் சேர்த்து வைத்தார்கள். சாட்சி சொன்னவர்கள் எல்லாம் எங்கோ போய் சேர்ந்துவிட்டார்கள். ஒரே ஒரு உறவான அவளது தயாரையும் இவர்களை தவறாக சொல்லிவிட்டாள் என செல்வி சேர்க்கவே இல்லை. அவளுக்கு என்று யார் இருக்கிறாள். என்னை தவிர. நான் ஏன் அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். மிகப்பெரிய தண்டனை அல்லவா? அவள் அவள் திருமணம் முடிந்தால், தனது கணவன் கையை கோர்த்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றி வர«வ்ணடும் என நினைப்பாள். தன் கணவன் எப்படி இருக்கிறான் அவனை பாருங்கள் என சொந்தங்களிடம் கொண்டு சென்று காட்டியிருப்பாள். ஊர் ஊராக சென்று சுற்றி சந்தோசப்பட்டு, எனக்கு அதை வாங்கி தாருங்கள் இதை வாங்கி தாருங்கள் என சொல்லியிருப்பாள்.
கணவன் வாங்கி தரும் பொருளை சேகரித்து வைத்திருப்பாள். தானும் அவனோடு அலையாமல், வீட்டில் உட்கார்ந்து அவனுக்கு சமையல் செய்து, அவனுக்கு எல்லாவிதத்திலும் உதவி, அவனை தனது மடியில் கிடத்தி பாராட்டி சீராட்டி சந்தோசமாக வாழ்ந்து இருப்பாள்.
வீட்டில் கூரை பிய்ந்து இருக்கிறது. அதை வேய வேண்டும். பனையேறும் அண்ணாவியை கூப்பிடுங்கள். இந்த வருடம் ஓலையை மாற்றி விடுவோம். மேல் சுவர் கீழ் சுவர் எல்லாம் பிய்ந்து கிடக்கிறது. மண் அள்ளி பூசி விடுவோம். கல்யாணம் முடிந்தபிறகு எனக்கும் துணிமணி வாங்க வில்லை. உங்களுக்கு வாங்க வில்லை. அப்படியே பஜார் போவோம் இரண்டு பேரும் வாங்கி கொள்வோம். என அவள் வாழ்ந் திருக்க வேண்டும். அப்படி வாழ்ந்திருந்தால் அவர்களுக்கு என தேவைகள் இருந்து இருக்கும்.
ஏன் என்றால் அவள் வயது அப்படித்தான்.
அக்கம்பக்கத்தில் திருமணம் முடித்தவர்கள் எல்லாம் குழந்தை பெற்றுக்கொண்டார்கள். நாமும் குழந்தை பெற்றுக்கொள்வோம். குழந்தை பெறவேண்டும். குழந்தையை வளர்க்க வேண்டும். திருச்செந்தூருக்கு சென்று முதல் மொட்டையும், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இரண்டாம் மொட்டையும், நமது குலதெய்வம் வெயிலுக்கு உகந்த சாஸ்தா கோயிலில் மூன்றாவது மொட்டையும் போட வேண்டும். அவள் வளர்ந்து எல்.கே.சி போகும் போது நல்ல பள்ளிக்கூடம் பார்க்க வேண்டும். அதன் பிறகு அவளை நம்மை போல வளர்க்க கூடாது . யாரிடமும் எதற்காகவும் அவள் போய் நிற்க கூடாது. எனவே அவளுக்கு பிறக்கு போதே பிக்சட் டெபாசிட் போட்டு விட வேண்டும் என்று நினைக்க கூடிய சராசரி பெண்தானே இன்று உலகத்தில் இருக்கிறார்கள்.
இரண்டு வருடத்தில் மேலும் ஒரு ஆண் குழந்தை பிறக்கும் அந்த குழந்தையையும் கொண்டாடி அவனையும் நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என இந்த ஐந்து வருடத்தினை சாதாரண பெண்ணாக இருந்தால் கொண்டாடி இருப்பாளே.
ஆனால் இவள் என்ன பெண். இந்த நதிக்காக நாம் வாழுவோம் என வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இவள் உண்மையிலே மனிதப்பிறவிதானே.
காளிக்கு தீடீரென்று சந்சேகம் ஏற்பட்டது. ஒரு வேளை இவள் நடிக்கிறளா? பெண் மனது ஆழம் யாருக்கு தெரியும் என்று சொல்வார்களே. அதுபோல இவள் ஆழ் மனதில் நன்றாக வாழ வேண்டும் என நினைத்துக்கொண்டு. இங்கே எனக்காக இந்த போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ.
அருகில் படுத்து கிடக்கும் செல்வி முகத்தினை பார்க்கிறான் காளி.
அந்த குடிசையில் மேலே இருந்துவந்த ஒளி வெள்ளத்தில் அந்த அழகு பெட்டகத்தினை பார்க்கிறாள். என்ன அழகாய் தூங்கி கொண்டிருக்கிறாள்.
அவள் எங்கே தூங்கிக்கொண்டிருக்கிறாள். மனது முழுவதும் கஷ்டத்தில் தவித்துக்கொண்டல்லவா? இருந்தது.
இவன் அவளை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கையருகே இருக்கும் இந்த பெண்ணோடு நமக்கு ஏன் சண்டை. இருவரும் இணைவதால் யாருக்கு என்ன ஏற்படப்போகிறது. தாமிரபரணியை காப்பாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது இவளோடு நாம் இணைந்தால் தான் என்ன?. எனக்கென பிறந்தவள் தானே. இவளை நாம் ஏன் வீணடிக்க வேண்டும். அவன் மனம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலாக, மெதுவாக அவள் இடுப்பில் கையை தூக்கி போட்டான் காளி.
சட் டென்று விழித்தாள்.
“என்னங்க”
“ஒண்ணுமில்லை”.
“இப்போதைக்கு ஒண்ணும் வேண்டாம்”.
“உண்மைதானா? இல்லை உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டிருக்கிறாயோ?”
காளியின் கேள்விக்கு வேகமாக பதில் சொன்னாள்.
“இல்லை உண்மைத்தான். நமது நதியை காப்பாற்றும் வரை எனக்கு இந்த சுகம் வேண்டாம். என் நதி என்றைக்கு வந்து யாராலும் எனக்கு ஆபத்து இல்லை என சொல்கிறதோ அன்றுதான் நாம் இரண்டு பேரும் சேரவேண்டும். அப்போதுதான் நமக்கு பிறக்கும் குழந்தையும் இந்த மண்ணுக்கு வரவேண்டும். அது வரை நமக்கு எதுவும் வேண்டாம்”.
திரும்பி படுத்தாள் செல்வி.
காளியும் இந்த திரும்பி படுத்துக்கொண்டான்.
பாவம் எப்படியும் தாமிரபரணியை காப்பாற்றி விடலாம். நதி நம்மிடம் வந்து நான் காப்பாற்ற பட்டு விட்டேன் என கூறுவாள். அதுவரை காத்து இருப்போம் என சொல்கிறது இந்த ஜீவன். ஆனால் தாமிரபரணி ஜீவனை பறிக்க, அவளின் கதையை முடிக்க மிகப்பெரிய கும்பல் ஒன்று சதி செய்து கொண்டிருக்கிறது. அந்த சதிக்கு யார் யார்? எங்கே தொடர்ப்பில் இருக்கிறார்கள் என யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
இருவரும் தூக்கம் வராமல் தவித்தனர்.
நாளை விடியல் எப்படி இருக்குமோ? என நினைத்துக்கொண்டிருந்தது, அந்த ஓலைக்கூரை வீடு. அது போலவே மறுநாள் விடியல் மிக மோசமாகவே இருந்தது.
( நதி தொடர்ந்து பயணிக்கும்)
தொடர்பானவை
October 4, 2024