திருவாவடுதுறை ஆதினத்தின் 23வது குருமகா சன்னிதானம் தாமிரபரணி கரையில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தினை சேர்ந்தவர். சைவத்தினை பரப்புவதற்காகப் பாடுபட்டவர். திருவாவடுதுறை ஆதினம் நாகப்பட்டினத்தில் திருவாவடுதுறை தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும் தாமிரபரணி கரையில் ஆதினத்தின் அருளாசியும், கோயில்களும், அசையா சொத்துகளும் உண்டு. சைவ பணிகள் ஆற்றுவதிலும், நூல்கள் வெளியிடுவதிலும் திறம் படச் செயல் பட்டு வந்தார்கள். நான் நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடர் எழுதும்போது பல ஊர்களில் திருவாவடுதுறை ஆதினம் பற்றிய செய்தி வந்து கொண்டிருந்தது. எனவே நண்பர் சிற்றம்பலம் என்னை குருமகா சன்னிதானத்திடம் அழைத்துச் சென்று ஆசீர்வதிக்க வைத்தார்கள். முறப்பநாடு ஈசான மடத்தில் சுவாமியின் அருளாசி எனக்கும் என்குடும்பத்தாருக்கும் கிடைத்தது. அந்த சமயத்தில் என்னுடைய தலைத்தாமிரபரணி என்னும் 1000 பக்கம் நூல் வெளிவந்திருந்தது. அதைப் படித்த சுவாமி அவசரப்படாமல் எழுதுங்கள். பிழைகளைத் திருத்துங்கள். நீங்கள் எழுதும் புத்தகத்தில் உள்ள பிழை உங்களுக்கு தெரியாதெனவே மடத்துக்கு அனுப்புங்கள் நான் வித்துவான்கள் மூலமாகத் திருத்தி தருகிறேன் என்றார்கள்.
வளரும் எழுத்தாளர் ஒருவன் மீது மிகப்பெரிய சன்னிதானம் எவ்வளவு பெரிய மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்தேன். அதோடு மட்டுமல்லாமல் 21.12.2010 அன்று தலைமை இடத்துக்கு என்னை அழைத்து தமிழ்க்கலைச்செல்வர் என்ற விருதை அளித்து தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் என்னை மடத்தில் சிறப்புரை செய்ய வைத்தார். சுவாமி எனக்கு விருது வழங்கும் போது இந்த இடம் தமிழ்த் தாத்தா வ.வே.சு உள்படப் பல வித்துவான்கள் பரிசு வாங்கிய இடம் என்று விருதைப் படித்தவர் கூறிய போது நான் மெய்சிலிர்த்துப் போய் விட்டேன்.
காலங்கள் கடந்தது 2012 ல் நான் பொதிகை மலையைப் பற்றி எழுதிய சித்தர்களின் சொர்க்கப்புரி பொதிகை மலை என்னும் நூல் விகடன் பிரசுரம் மூலம் வெளிவந்தது. அந்தச்சமயத்தில் சுவாமியிடம் ஆசியுரை கேட்டிருந்தேன். அப்போது சுவாமிகள் உடல் நலிவுற்று இருந்தார்கள். ஆனாலும் எனக்கு ஆசியுரை எழுதித் தந்தார்கள். அதன் பின் நான் சுவாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் சுவாமியின் அருளாசி 10 ஆயிரம் நூல்கள் விற்று விட்டது.அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய பெயரும் பிரபலமானது. எப்போதும் எனக்கு அருளாசி தந்து கொண்டிருக்கும் திருவாவடுதுறை ஆதினம் 23வது குருமகா சன்னிதானம் எப்போதும் என்னுடனே இருந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு