நடிகர், சீரியல் இயக்குனர், திரைப்பட உதவி இயக்குனர், வசன கர்த்தா, நெல்லை வரலாற்றை திரட்டுபவர், பட்டிமன்ற பேச்சாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், திறமைசாலிகளைக் கண்டு பிடித்து பரிசு வழங்குபவர், வீடியோ கிராபர், புகைப்பட கலைஞர், கதிர் வெப் தொலைக்காட்சி உரிமையாளர், செய்தியாளர், எழுத்தாளர் இன்னும் என்னென்ன திறமை உண்டோ அவை அனைத்துக்கும் சொந்தக்காரர் நெல்லை முத்தமிழ். அவர் எடுத்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக முடித்துக் கொடுத்தும் எதுவுமே தெரியாதவர் போல அமைதியாக இருப்பவர். நெல்லை கரண் தொலைக்காட்சியில் இவர் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றிய போது இவருடன் இணைந்து கல்வியின் காரண கர்த்தா ரேணியஸ் அடிகளார் என்ற தலைப்பில் ஒரு அரை மணி நேர நிகழ்ச்சி தயாரித்தோம். அதன் பிறகு பல்வேறு சந்திப்புகள். நெல்லை கரன் செய்திகளை தினமும் விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி மும்பையில் நெல்லை செய்திகளை ஜெ பி ஆர் சாணல் மூலம் ஒளிபரப்பு செய்து அசத்தினோம். அதன் பிறகு ராட்டினம் படம் இயக்குனர் கே.எஸ். தங்கசாமியின் எட்டுதிக்கும் மதயானை படத்தில் முத்தமிழ் சார் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஒரு நாள் காலை தொலைப்பேசி செய்து செய்துங்கநல்லூரில் ஐந்து நாள் படப்பிடிப்பு செய்ய முடியுமா.? என என்னிடம் கேட்டார்கள். அதற்கான உதவியைச் செய்தேன். என்னை இயக்குனரிடம் அறிமுகப்படுத்தி நல்லதொரு பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தார். கிராமங்களில் பட்டிமன்றத்தில் தன்னுடைய கம்பீர குரல் மற்றும் கம்பீர தோற்றத்தில் கலக்குவது. எனது மகன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவருக்காக எடுத்த ஆவணப்படத்தில் அவனை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காகவே வந்து நட்புக்காக நடித்துக் கொடுத்தது என எதையெல்லாம் பட்டியல் இட. நெல்லை வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படம் எடுக்க ஏற்பாடு செய்தார்கள். அதிலும் அவரோடு பயணிக்க வாய்ப்பு தந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் நவீன தாமிரபரணி மகாத்மியம் நூலை எழுத என்னோடு வேளாக்குறிச்சி ஆதினம் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார்கள். அதன் பயனாக என்னை மேடை ஏற்றி அழகு பார்த்தவர் நண்பர் முத்தமிழ். எப்போதும் என்னோடு இருக்கிறார். ஒரு காலகட்டத்தில் அவரின் கீழ் வேலை பார்த்தவர்கள் நாங்கள். ஆனால் இன்றோ எழுத்தாளர் என்ற முத்திரையுடன் எங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளாமல் எனக்கு ஆதரவு தந்து என்னை முன் நிறுத்துபவர். ஒரு சமயம் மணிமுத்தாறு தலையருவிக்கு அவரை அழைத்துச் சென்றேன். அவரால் மலை மீது ஏ றி அனுபவம் இல்லை. எனவே கால் சுளுக்கிக் கொண்டது. வலியோடு ஒரு ராத்திரி இரண்டு பகல் எங்களோடு பயணித்தார். அவரும், அவர் மனைவியும் என் அன்பு சகோதரியுமான பார்வதி முத்தமிழ் ஆகியோர் தென்காசி மாவட்ட துவக்க விழாவில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர்கள். இளைய பாரதி ஆவணப்படம், டாக்டர் பிரேமசந்திரன் அவர்களின் தொடர் முகநூல் நிகழ்ச்சி எனச் சாதனைகள் பல புரிந்தாலும், தலைக்கனம் இல்லாமல் எப்படி அய்யா உங்களால் பயணிக்க முடிகிறது. உலக வரலாறு, தங்கையா செல்லம்மா என யூ டியூப்பில் தொடர் நிகழ்ச்சி. அப்பப்பா உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது. வாழத்துகள் முத்தமிழ் சார். அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு