எழுத்து துறையில் மிகவும் பிரபலமாகாத காலத்தில், என் எழுத்துகளை வெளிகொண்டு வர முயற்சி செய்த காலத்தில் என்னோடு பயணித்தவர்தான் பாரதி முருகன். ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தினை சேர்ந்தவர். பாரதி மீது கொண்ட அன்பினால் பாரதி என்ற அடைமொழியை தனக்கும் தனது மகன், மகளுக்கும் சூட்டி மகிழ்ந்தவர். ஆரம்பக் காலத்தில் என் திறமையைக் கண்டு பிடித்து, நான் சேர்த்து வைத்த தகவல்களையெல்லாம் நகல் எடுத்து அதை பைண்டிங் செய்து, என்னிடம் காட்டி, நீங்களும் பலகட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள் எனச் சுட்டிக் காட்டி உற்சாக மூட்டினார். நான் செய்த நற்பணிகளைப் பட்டியலிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் விருதுக்கு அவரது பாரதி மன்றம் மூலம் பரிந்துரை செய்தார். எதிர்பாராத விதமாக அப்போது எனக்கு எந்த சான்றிதழும் பாராட்டும் கிடைக்கவில்லை. ஆதிச்சநல்லூருக்கு என்னோடு சேர்ந்து பயணித்தவர். நான் நதிக்கரையோரத்துஅற்புதங்கள் தொடர் எழுதும்போது பாபநாசம் வரை என்னோடு நடந்தே வந்தவர். சில நேரம் கஷ்டங்கள் வந்தபோது என்னோடு போராட்டம் கண்டவர். சொல்லப்போனால் எனக்கு மிகப்பெரிய அஸ்திபாரம் உள்ளது என்பதை எனக்கு உணர்த்தியவர் நண்பர் பாரதி முருகன். என்னுடைய நூல் வெளியீட்டுவிழாவிற்கெல்லாம் குடும்பத்தோடு வந்து அமர்ந்து விடுவார். புத்தகக் கண்காட்சியில் எனது நூல்களை அடுத்தவர்கள் வாங்கி செல்ல வேண்டும் என அடையாளம் காட்டுவார். தற்போது அவர் என்னோடு தொடர்ந்து பயணிக்க இயலவில்லை. வழக்கறிஞர் தொழில் காரணமாகப் பாளையங்கோட்டையில் குடிபெயர்ந்து விட்டார். அங்கும் அவர் சமூக சேவைகளைச் செய்து வருகிறார். அவரின் கனவுகள் தற்போது நிறைவேறிவிட்டது. ஆதிச்சநல்லூர் வழக்கு மூலமாக நான் இன்று தமிழர்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். தமிழக அரசு விருதுகள் கிடைத்தது. பாரதி மன்றம் மூலம் எனக்கு விருது அளித்துப் பாராட்டிய பாரதி முருகன் ஆசை நிறைவேறிவிட்டது. தற்போதும் கூட பாரதி 100 ஆண்டு விழாவில் மதுரையில் வைத்து எனக்கு பாரதி புரஸ்கார் விருதும் கிடைத்து விட்டது. என்னுடைய திறமைகளை தகரப்பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்தேன். அதை தரம் பிரித்து நானும் எழுத்தாளன் தான் என இந்த உலகிற்குக் காட்டி விருதுகள் பெறக் காரணமாக இருந்த பாரதி முருகனை மறக்க இயலாது.
நன்றி பாரதி முருகன் அவர்களே. என் எழுத்துலகில் நீங்களும் மைல் கல்லாக அமைந்து விட்டீர்கள். அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு