
நெல்லை, தூத்துக்குடி மா வட்டத்தில் தாமிரபரணி நதி ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றின் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் திருநெல்வேலி மாவட்டத்திலும், 46 ஆயிரத்து 407 ஏக்கர் நிலங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும் பயன்பெற்று வருகிறது.
இந்த பகுதியில் பயிரிடப்படும் முறைகள் 3 பகுதிகளாக பிரிக்கின்றனர். அவை கார் பருவம், பிசான பருவம், அட்வான்ஸ் கார் என பிரிக்கிறோம். ஜீன் 1 முதல் செப்டம்பர் 30 வரை கார் பருவம் என்றும் அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை பிசான பருவம் என்றும் ஏப்ரல் 1 முதல் பழந்தொழி அதாவது அட்வான்ஸ் கார் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் பழந்தொழி சாகுபடி செய்யும் நிலங்களில் அந்தந்த வருடங்களில் கார் சாகுபடி செய்ய உரிமை இல்லை.
தாமிரபரணியில் பாசனத்தில் 50 சதவீதத்திற்கு மேல் பயன்பெறும் பாசன பரப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் தான் உள்ளது. முதல் 6 அணையை விட கடைசியில் உள்ள மருதூர், திருவைகுண்டம் அணைக்கட்டு மூலம் தான் 46,407 ஏக்கர் பயன்பெறுகிறது. தாமிரபரணியில் மொத்தம் பாசன பரப்பு 86,407 ஏக்கர் ஆகும்.
இந்த நதியில் வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை மூலமாக மழை பொழியும். இதில் தென் மேற்கு பருவ மழை கேரளாவில் பொழியும் மழையை கொண்டு தண்ணீர் பெறுகிறது. வடகிழக்கு பருவமழை பெரும்பாலுமே வங்க கடலில் தோன்றும் புயலின் வழுவை கொண்டே மழை பொழிகிறது.
கடந்த 15 வருடகாலமாக தென்மேற்கு பருவ மழை பெரிய அளவில் கைகொடுக்க வில்லை. வடகிழக்கு பருவமழை புயலாக தோன்றி மழை பொழிவதால் பல நேரங்களில் மக்கள் பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் பிசான சாகுபடியை பருவ மழை என்று கூறுவோம். இந்த பருவ மழை காற்று பாதிப்பு இல்லாமல் மழை பெய்து , குளங்களை நிரப்பும். இதுபோன்ற மழை கடந்த 25 வருடகாலமாக நெல்லை மாவட்டத்தில் பொழியவில்லை. மேலும் 1992ல் கூட புயல் மழையால் தான் கடும் வெள்ளம் ஏற்பட்டது. அதன் பின் பெரியஅளவில் வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் வரவில்லை.
தற்போது பருவமழை பெய்து வருகிறது. வேறு எந்த பாதிப்பும் இல்லாமல் அணை நிறைந்து ஆற்றில் வெள்ளம் வந்துள்ளது. நெல்லையில் குறுக்குதுறை முருகன் கோயிலை முழ்கடித்து அனைத்து தடுப்பு அணையையும் கடந்து தண்ணீர் செல்கிறது.
மருதூர் அணையை பார்க்கும் போது, இது நம்ம ஊரா அல்லது வெளிநாட்டு நீர்வீழ்ச்சியாக என கூறுவது போலவே காட்சி தருகிறது. சந்தோஷமான மற்றுமொரு விசேஷம் என்னவென்றால். தாமிரபரணியில் கலக்கும் சாக்கடை, ஆகாய தாமரை போன்றவை வெள்ளத்தில் கடலுக்கு அடித்து செல்லப்படுகிறது. எனவே நமது நதி இயற்கையாகவே தன்னை தானே சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறது.
இனி. நாம் நதியில் சாக்கடை விடாமல் பாதுகாத்தாலே போதும், நமது தாமிரபரணி நதி உயிர் நதியாக வாழ ஆரம்பித்து விடும். பல்வேறு மீன் உள்பட உயிர்களை வாழவைத்துவிடும்.