
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் பொன்னுறுதி அம்பாள் சமேத வீரபாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 64 அம்சங்கள் கொண்ட சட்டநாத ர் கோவில் உள்ளது. இந்த கோயிலை தென்னகத்து சீர்காழி என்றழைக்கிறார்கள். நவலிங்கபுரத்தில் இந்த கோயில் சந்திர தலமாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில் மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமி பூஜை, மகா பைரவாஷ்டமி ஜெயந்தி விழா நடந்தது. இந்த பூஜையில் சங்கல்பம், விநாயகர் பூஜை, வேதிகார்ச்சனை, ருத்ர பாராயணம், கால பைரவ மகாயாகம், மகா பூர்ணாகுதி நடந்தது. அதன்பின்னர் சட்டநாதருக்கு 64 திரவிய அபிஷேகம் நடந்தது. இதற்காக 64 செம்பு கலசங்களில் தீர்த்தம் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின் பைரவருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் உள்பட பலர் பங்கேற்றார். அதன் பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஆனந்த கூத்தர் திருக்கயிலாய வாத்ய குழுவின் கயிலை வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. இதில் வெள்ளூர் துரை, கொங்கராயகுறிச்சி உலகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கோயில் பூஜை ஏற்பாடுகளை குணசேகர் பட்டரும், அன்னதான ஏற்பாடுகளை கே.பி மாறனும் செய்திருந்தனர். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.