ஆதிச்சநல்லூரில் 2004 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வு அறிககை தற்போது 17 வருடங்கள் கழித்து வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆதிச்சநல்லூர் தாமிரபரணி கரை நாகரீகம். உலக நாகரீகத்தின் தொட்டில் என இதை கருதுகிறார்கள். இந்தியாவில் முதல் முதலாக 1876 ல் இங்கு அகழாய்வு நடந்துள்ளது. டாக்டர் ஜாகோர் என்பவர் இங்கு அகழாய்வு செய்து இங்கு கிடைத்த பொருள்களை ஜெர்மன் நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து பல அகழாய்வு நடந்தது. இதில் 1902 ல் அலெக்ஸாண்டர் இரியா அகழாய்வு செய்த போது நூற்றுக்கணக்கான பொருள்களை எடுத்து சென்று சென்னையில் பார்வைக்கு வைத்துள்ளார். மேலும் கிடைத்த பொருள்களை பட்டியல் இட்டுள்ளார். ஆனாலும் முழுமையான அறிக்கை வெளியிடவில்லை. இதற்கிடையில் 1920 சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரீகம் என கூறினார். இதனால் உலகமே ஆதிச்சநல்லூரை வியந்து பார்த்தது. ஆனாலும் முறையான அகழாய்வு அறிக்கை ஆதிச்சநல்லூருக்கு வர வில்லை. இதற்கிடையில் இந்திய தொல்லியல் துறை மூலமாக 2004 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்தது. இந்த அகழாய்வை தியாக சத்திய மூர்த்தி தலைமையில் தொல்லியல் துறையினர் செய்தனர். ஆனால் இதன் அகழாய்வு அறிக்கை வெளியிடப்படவில்லை.
இதுக்குறிதது எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி நடத்தினார். இந்த வழக்கில் ஆதிச்சநல்லூரில் 2004 ஆம் ஆண்டு நடந்த ஆய்வறிக்கையை வெளியிடவேண்டும். மீண்டும் அகழாய்வு செய்யவேண்டும். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என மூன்று கோரிக்கை இந்த வழக்கில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் கிருபாகரன் , சுந்தர் ஆகியோர் உத்தரவின் பேரில் இங்கு எடுத்த முதுமக்கள் தாழி புளோரிடா ஆய்வு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் வயது 2900 என நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கீழடிக்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரீகம் என உறுதியானது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அனுமதி வழங்கி, அதற்கான இடத்தேர்வு பணி நடந்து வருகிறது. மாநில அரசு ஆதிச்சநல்லூர். சிவகளை உள்பட பகுதியில் கடந்த வருடம் ஆய்வு செய்தது. தற்போதும் மாநில அரசின் சார்பில் மீண்டும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வு பணி துவங்கி விட்டது. இதற்கிடையில் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மார்ச்சு மாதம் மத்திய அரசின் 2004 ஆம் அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
தற்போது தேர்தல் வெளிவந்து விட்டது. இதனால் இந்த அறிக்கை முறைப்படி வெளியிடப்பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது தொல்லியல் துறை அதிகாரி டாக்டர் சத்திய பாமா பத்ரிநாத் அவர்கள் 2020ல் வெளியிட்ட 293 பக்கம் கொண்டு 2004 ல் நடந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வளைத்தலததில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் கேட்டபோது, எங்கள் வழக்கில் கேட்ட மூன்று கோரிக்கையும் நிறைவேறிவிட்டது. தொடர்ந்து அகழாய்வு நடந்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசும், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசும் வெளியிட்டது. தற்போது 17 வருடம் கழித்து அகழாய்வு அறிக்கை வெளியிட்டு இருப்பது தமிழர்களுக்கு மணிமகுடம் அமைப்பது போல உள்ளது. அதே வேளையில் தற்போது ஆதிச்சநல்லூரில் மூன்று மொழிகளில் விளம்பர பலகை வைக்கும் பணியும் நடந்து வருகிறது.
ஆனாலும் மாநில அரசை, ஆதிச்சநல்லூரில் பாதுகாக்கப்பட்ட 114 ஏக்கருக்குள் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதிக்க வில்லை. தற்போது வெளியிடப்பட்ட அகழாய்வு அறிக்கையில் 5 பகுதி உள்ளது. இதில் ஆதிச்சநல்லூரில் நெற்றிகண் மனிதன் இருந்தான் என்பதற்கு பதிலும் கிடைத்துள்ளது. முத்துகுளிக்கும் மக்களுக்கு ஒரு வித நோய் வரும். அந்த நோயால் பாதிக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களே இந்த நெற்றிகண் மனிதர்கள் என சத்தியபாமா பதிவிட்டுள்ளார். இந்த அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட மாநில தொல்லியல் துறையினரும், மத்திய தொல்லியல் துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பாமர மக்களுக்கு ஆதிச்சநல்லூரின் அருமை போய் சேரும். இதற்காக உழைத்த நீதி துறை, பத்திரிக்கை துறை, மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி என்றார்.
2004 ல் நடந்த அகழாய்வு அறிக்கை 17 வருடம் கழித்து வெளியிடப்பட்டது, தமிழ் ஆர்வலர்களுக்கு சந்தோஷத்தினை கொடுத்துள்ளது.
&&¬


