வல்லநாடு ஆற்று பாலத்தில் மீண்டும் பஸ் இயக்கப்பட்டது.
நெல்லை கே.டி.சி. நகர் நான்குவழிச்சாலை மேம்பாலம் அருகே துவங்கி தூத்துக்குடி துறைமுகம் வரை 47 கி.மீ தூரத்திற்கு நீளும் இந்த சாலை திட்டப்பணி கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ232 கோடி திட்ட மதிப்பில் தொடங்கிய நிலையில் பாதி பணி கூட நிறைவு பெறாத நிலையில் ஒப்பந்தக்காரர் தனக்கு பேசப்பட்ட தொகை கட்டுப்படியாகாததால் கடந்த 2007ல் பணியை துவங்காமல் விட்டுச் சென்று விட்டார்.
இதனால் வழி நெடுக பாலங்கள் மற்றும் சாலைகள் அறைகுறையாக விட்டுவிட்டுப் போடப்பட்டிருந்தது. இந்த அறைகுறை வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்பட்டனர். அவ்வப்போது விபத்துக்களும் நடக்கத் தொடங்கின.
பாதியில் பணி நிறுத்தப்பட்டது தொடர்பாக வழக்கும் இருந்ததால் பணியை தொடர முடியாத நிலை நீடித்தது. இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு விடுப்பட்ட பணிகளுக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு மீண்டும் கூடுதல் நிதி ஒதுக்கினர்.
இதையடுத்து சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக தொடங்கின. மொத்தம் ரூ320 கோடியிலான புதிய திட்ட மதிப்பில் நடைபெற்று வந்த சாலைப்பணி முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றைக் கடக்கும் 4 வழி மேம்பாலம் மற்றும் புதுக்கோட்டையில் இருவழிப்பாலம் ஆகிய மெகா பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 10 சிறிய பாலங்களும் 66 சிறிய கல்வெட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் தென்பகுதியில் கடலோரம் அமைந்துள்ள தூத்துக்குடி மாநகரமானது வாகனம், ரயில், கப்பல், விமானம் என நான்கு வகையான போக்குவரத்து வசதிகளையும் கொண்டுள்ளது. அரசு, தனியார் அனுமின் உற்பத்தி நிலையங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், கப்பல் சேவை நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் இங்கு அதிகம் உள்ளன. பெருநகரங்களின் வரிசையில் இடம் பெற்ற தூத்துக்குடியை மற்ற நகரங்களுடன் இணைக்கும் வகையில் துறைமுகத்தையும் நெல்லையும் இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.
ஆனால் கடந்த நவம்பர்மாதம் 19 ந்தேதி இரவு 10 மணியளவில் வல்லநாடு ஆற்று பாலத்தில் ஒரிடத்தில் ஓட்டை விழுந்தது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாலம் வேலை துவங்கி 4 வருடத்தில் ஓட்டை விழுந்த காரணத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர். பலவிபத்து ஏற்பட்டது.
இதற்கிடையில் பாலத்தினை செம்மை படுத்த வேண்டும் என டெல்லியில் இருந்து உயர் மட்ட குழுவினர் பார்வையிட்டனர். அதன் பின் பாலத்தில் பல இடங்களில் ஏற்பட்ட விரிசல்கள் கண்டு பிடிககப்பட்டு அந்த பணிகள் முழுவதுமே கடந்த 6 மாத காலமாக நடந்தது.
இந்த பணியில் கடந்த 25 ந்தேதி மாலை சோதனை ஓட்டம் நடந்தது. முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், பொறியாளர்கள் கபீல் சர்மா, பசீநாயக் ஆகியோர் கலந்துகொண்டனர். அதன் பின் தற்போது போக்குவரத்து துவங்கியுள்ளது.
இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


