ஸ்ரீவைகுண்டம் வடகால் கரையோர குடியிருப்பாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. சண்முகநாதன் தெரிவித்ததால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை காலங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி, தமிழகமெங்கிலும் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படியும், சப்&கலெக்டர் பிரசாந்த் மற்றும் வருவாய் ஆய்வாளர் வீரப்பன் ஆகியோரது ஆலோசனையின் பேரிலும் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஸ்ரீவைகுண்டம் வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, தாசில்தார் சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்கால் கரையோர பகுதிகளான அண்ணாநகர், நளராஜபுரம், நளங்குடி, இசக்கியம்மாள்புரம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்பொழுது, பல வீடுகள் வாய்கால் கரையோரத்தில் தண்ணீரை ஒட்டினார்போல் இருப்பதால் மழை வெள்ளக் காலங்களில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஆக்கிரமிப்பு பகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று பேசிய தாசில்தார் சந்திரன், 15 நாட்களில் வீடுகளை காலி செய்திட வேண்டும். சொந்த வீடோ, நிலமோ இல்லாத நபர்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். உறுதியளித்தார்.
இதன்படி, சொந்த இடமோ, வீடோ இல்லாத குடியிருப்பாளர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருப்புகளை நீதிமன்ற உத்தரவின்படியும் மாவட்ட நிர்வாகத்தின் ஆலாசனையின்பேரிலும் அகற்றுவதுடன் அப்பகுதிகளில் வாழும் தகுதி வாய்ந்த குடும்பத்தினர்களுக்கு குடியிருப்புக்கு ஏற்றார் போல் இலவச வீட்டுமனை வழங்குவதற்கான இடம் தேடும் பணியில் தாசில்தார் சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர் நேரடியாக பலஇடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில், ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் அருகே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, வடகால் வாய்கால் கரையோரத்தில் குடியிருப்பவர்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா வழக்கும் விழா தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தாசில்தார் சந்திரன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்டேசன் முன்னிலை வகித்தார். அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் 26 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி பேசுகையில்,
அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், மீதமுள்ள நபர்களில் தகுதிவாய்ந்த நபர்களுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா விரையில் வழங்கப்படும் என தாசில்தார் சந்திரன் தெரிவித்தார்.
தகுதி வாய்ந்த நபர்களுக்கு குடியிருப்பிற்கு ஏற்ற இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதற்கும், அந்த இடத்தில் அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ சண்முகநாதன் பேசியதும் பாயனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆறுமுகநயினார், ஆழ்வார்திருநகரி முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ராஜ் நாராயணன், உதவி காவல் ஆய்வாளர் முருகபெருமாள், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் வாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.