தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை முன்னனி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பேட்டி.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஊர்வசி அமிர்தராஜ் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவரேகாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான் இந்திய அரசியல் அமைப்பின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு இந்திய ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவேன் என ஆண்டவர் மீது உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அவருடன் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக அவருடன் தொண்டர்கள் அணிவகுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வருகை தந்தனர். அவர்களுடன் கூட்டணி கட்சி தொண்டர்களும் உடன் வந்திருந்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஊர்வசி அமிர்தராஜ், முற்போக்கு கூட்டணி சார்பாக நான் இந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். தன்னுடைய தந்தை முன்னதாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி ஏராளமான பணிகளை செய்துள்ளார். அவரது பாணியில் நானும் இந்த தொகுதியில் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்வேன் என்றும் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தொகுதியை ஒரு முன்மாதிரியான சட்டமன்றத் தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று தெரிவித்தார்.