ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் காலியாக இருந்த 24 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்விற்கு ஜூன் 25ம் தேதி முதல் விண்ணப்பங்கள் தாலுகா அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டன.
5ம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக கொண்டு கிராம நிர்வாக உதவியாளர் பணியிடத்திற்கு உயர்கல்வியை முடித்தவர்கள் உள்பட 1400க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். எவ்வித சிபாரிசுகளுக்கும் இடம் அளிக்காமல் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிநியமனம் நடைபெறும் என தாசில்தார் தாமஸ் அருள் பயஸ் அறிவித்தார். இதைதொடர்ந்து, தாலுகா அலுவலகத்தில் சப்&கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில் ஜூலை 14ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற்றது. கல்வித் தகுதி, இருப்பிடம், முன்னுரிமை மற்றும் இனசுழற்சி உள்பட பல்வேறு விதிமுறைகளை அடிப்படையாக கொண்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஜூலை 15ம் தேதியே பணிநியமண ஆணை வழங்கப்பட்டு ஜூலை 16ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உதவியாளர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.
இந்நிலையில், கிராம உதவியாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. ஆனால், இப்புகாரில் உண்மை தன்மை இல்லை என்றும், தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் வட்ட தலைவர் கர்ணமகாராஜா தலைமை தாங்கினார். கிராம உதவியாளர்கள் சுப்யையா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் வட்ட தலைவர் கர்ணமகாராஜா கூறியதாவது, தமிழக அரசின் சட்டவிதி முறைகளுக்கு உட்பட்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கிராம உதவியாளர்கள் தேர்வு நடைபெற்றது. பல ஆண்டுகளாகவே காலியாகவே இருந்த காலிப்பணியிடங்களை எவ்வித சிபாரிசுகளுக்கும் இடம் அளிக்காமல் நேர்மையான முறையில் சப்கலெக்டரும் தாசில்தார் தாமஸ் பயஸ் அருளும் பணி நியமனம் செய்துள்ளனர். இந்நிலையில், கிராம உதவியாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரில் எவ்வித உண்மை தன்னையும் இல்லை. ஓராண்டு காலம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் சிறப்புடன் பணியாற்றிய தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். என்றார்.