ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகம் கட்டணம் பெறுவதாக வட்டாச்சியரிடம் புகார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றி 6 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றனர். இங்கு பயின்று வரும் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் விவசாய மற்றும் கூலி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி தான் பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஆனால் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள இந்த 6 தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்களும் பெற்றோர்களும் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் என்ற அமைப்பு சார்பாக இன்று ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருளிடம் அவர்கள் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதற்கு வட்டாச்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் அதிக அளவில் கட்டண கொள்ளை நடந்து வருகிறது. இதுகுறித்து பள்ளி அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தர மறுக்கிறார்கள். மேலும் 3ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு வருட கட்டணமாக ரூபாய் 6 ஆயிரம் வசூலிக்க வேண்டும் ஆனால், தற்போது வரை கட்டணம், புத்தகச் செலவு, உடை இதர செலவு என 14 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளளனர். இந்த கட்டணம் முதல் காலாண்டிற்கு மட்டுமே என்பதே எங்களைப் போல் விவசாய குடும்பத்தினருக்கு அதிகமாக தெரிகிறது. மேலும் அரசு கட்டணத்தை பள்ளியின் நுழைவு வாயலில் எழுதப்பட வேண்டும். ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை தவிர்த்துள்ளது.
எனவே அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை பள்ளிகளில் குழந்தைகளிடம் பெற வேண்டும். முன்பு பெற்ற அதிக கட்டணத்தை திரும்ப தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.