ஸ்ரீவைகுண்டம் – கோடங்குளம் டவுண் பஸ் நிறுத்திய காரணத்தினால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கோடங்குளத்துக்கு தடம்எண் 2 என்ற பேருந்து இயங்கி வந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பொன்னங்குறிச்சி, கருங்குளம், தாதன்குளம், காரசேரி, வல்லகுளம், அரசர்குளம், வள்ளுவர் காலனி, சேரகுளம், இராமனுஜம்புதூர், நாகல்குளம், சிந்தாமணி, முனைஞ்சிபட்டி வழியாக கோடங்குளத்துக்கு டவுண் இயங்கி கொண்டிருந்தது. இந்த பஸ் காலை 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கிளம்பி கோடங்குளம் சென்று வருகிறது. அதுபோல் மதியம் 12.30 மணிக்கு பேருந்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கோடங்குளம் சென்று திரும்பி வரும்.
இந்த பேருந்து கடந்த 2 வருடத்துக்கு முன்பு கோடங்குளம் சென்று வந்தது. அதன் பின் நிறுத்தப்பட்டு முனைஞ்சி பட்டி வரை இயக்கப்பட்டது. ஆனால் அதை பொதுமக்கள் கண்டு கொள்ளவில்லை என்றவுடன் மதியம் செல்லும் பேருந்தை நிர்வாகத்தினர் நிறுத்தி விட்டனர். இதனால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் கணேசன் கூறும்போது, ஸ்ரீவைகுண்டம் இராமனுஜம்புதூர் உள்பட சுற்று பகுதிக்கு ஸ்ரீவைகுண்டம் தான் தாலூகா. மேலும் மின்சார தலைமை நிலையம், ஆஸ்பத்திரி உள்பட பல முக்கிய வேலைகளுக்கு இப்பகுதி மக்கள் ஸ்ரீவைகுண்டம் தான் செல்ல வேண்டும். முனைஞ்சிபட்டி சென்றால் அங்கிருந்து சாத்தான்குளம், நான்குனேரி உள்பட ஊர்களுக்கு செல்ல இணைப்பு பேருந்து உள்ளது. எனவே எங்களுக்கு ஸ்ரீவைகுண்டம் & முனைஞ்சி பட்டி பேருந்து மிகவும் வசதியாக இருந்தது. ஆரம்ப காலத்தில் இந்த வழியாக இயங்கி வந்த தடம் எண். 232, 305 போன்ற பேருந்துகளை நிறுத்தினார்கள். தற்போது மதியம் வந்து சென்ற தடம் எண் 2 பேருந்தை நிறுத்தி விட்டார்கள். இதனால் பயணிகள் மிகவும்வேதனை அடைந்துள்ளனர். எனவே அந்த பேருந்தை மீண்டும் இயக்கவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் கூடுதலாக மாலை மற்றும் இரவு வேளைகளில் இரண்டு பேருந்து இயக்க வேண்டும் என்றுஅவர் கூறினார்.
இப்பகுதியில் மிக முக்கிய போக்குவரத்தாக இருந்த ஸ்ரீவைகுண்டம்& முனைஞ்சிபட்டி பேருந்தை மீண்டும் இயக்கி கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரியுள்ளனர்.