ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தில் வாலிபரை வீடுபுகுந்து தாக்கியவர்கள் மீது போலிசார் விசாரணை. தாக்கியவர்களை ஊர் மக்கள் வீட்டுக்குள் பூட்டி வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தினை சேர்ந்தவர் இராமசந்திரன் மகன் கண்ணன்(48). இவர் வழக்கறிஞக்கான தொலை தூர கல்வி பயின்று வருகிறார். இவர் இன்று காலை 10 மணி அளவில் அவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஒரு காரில் மூன்று பேர் திடிரென வந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார் கண்ணனை அக்கம் பக்கத்தில் இருந்து ஓடி வந்தவர்கள் மீட்டு, தாக்கிய மூன்று பேரையும் வீட்டுக்குள் பூட்டி வைத்தனர். அதன்பின் போலிசுக்கு தகவல் கூறினர்.
செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன், சப்&இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கண்ணனை 108 வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன் ரத்தம் சொட்ட சொட்ட 108ல் ஏற்றப்பட்டதும், பூட்டிய வீட்டுக்குள் இருந்த மூன்று பேரை பொதுமக்கள் தாக்க முயற்சி செய்தனர். போலிசார் அவர்களை சமரசம் செய்தனர்.
அதன் பின் பூட்டிய வீட்டுக்குள் இருந்து மூன்று பேரையும் போலிசார் மீட்டனர். அதில் கயத்தாரைச் சேர்ந்த மகராஜன் (24), ஆறுமுகநேரியை சேர்ந்த அக்னிபெருமாள்(55), அவரது மகன் ராஜ்குமார்(28) ஆகியோரையும் காரை ஓட்டி வந்த ஆறுமுகனேரியை சேர்ந்த ஜெயராஜையும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.