திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் முத்துநகரைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் மகன் சாமிநாதன். 18வயதான இவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2ம் ஆண்டு பயின்று வருகிறார். இவரும் இவரது நண்பர் வேம்பு மகன் அசோக் கணேஷ். இவரும் அதே கல்லூரியில் அதே படிப்பு மேற்கொண்டு வருகிறார். இன்று காலை இவர்கள் இருவரும் நண்பரின் பைக்கை வாங்கிக்கொண்டு திருநெல்வேலியில் உள்ள நண்பரை காண செல்கின்றனர்.
அப்போது நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி விளக்கில் வந்தது. அந்த சமயத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி இந்த வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது இந்த பைக் எதிரே வந்த வேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பைக்கில் இருந்த பெட்ரோல் கொட்டியதால் பைக் தீப்பிடித்தது. இந்த விபத்தில் பைக்கில் வந்த 2 வாலிபர்களும் உடல் கருகினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் 2 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பைக் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த காரணத்தால் சுமார் சுமார் 1 மணி நேரம் திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேன்-பைக் மோதி 2 வாலிபர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.