ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் தாமிரபரணி நதிக்கரையோரம் ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளை பகுதியில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அடையாளமாக ஏராளமான மண்தாழிகள் புதைந்து கிடக்கிறது.
இந்தியாவின் சிந்து சமவெளி நாகரீகம் தொன்மையானது எனவும் வரலாற்று காலத்திற்கும் முற்பட்டது. தொல்லியல் ஆராய்ச்சி மையங்களிலும் அகழ்வராய்ச்சிகளிலும் பேசப்படுகிற ஒரே வார்த்தை ஆதிச்சநல்லூர் நாகரீகம். இந்த நாகரீகம் உலகம் முழுவதும் கலாச்சாரம், பண்பாடு, அரசுமுறை, படை, வாழ்க்கை, கலை என அனைத்திலும் முதன்மையானது.
உலக நாகரீகத்தின் தொட்டில் எனக் கருதப்படும் ஆதிச்சநல்லூர் 3500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. ஒரு சில ஆய்வு நூல்களை புரட்டி பார்க்கும் போது கி.மு.8000ம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது தான் ஆதிச்சநல்லூர் நாகரீகம் என்கிறார்கள். பிற்காலத்தில் தோன்றியது தான் ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகம் என்ற கூற்றும் நிலவி வருகிறது. இந்த கூற்றுகளை மெய்பிக்கும் வகையில் 2004ல் நடந்த ஆய்வு அறிக்கை விரைவில் வெளி வர உள்ளது.
இத்தகைய சிறப்பு பெற்ற தாமிரபரணி பாயும் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு கூடுதல் பலம் சேர்ப்பது போல அருகில் உள்ள சிவகளை கிராமத்திலுள்ள பரும்பு பகுதியில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளது.
இந்த சிவகளை கிராமத்தின் மேற்பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ஒரு பரம்பு ஒன்று பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த பரம்பில் ஏராளமான மண் தாழிகள் காணக்கிடக்கிறது. அனைத்தும் புதைந்து கிடக்கிறது. மேலும் அந்த மண் தாழிகள் அருகில் எலும்புகளும், குதிரையின் லாடங்களும் கிடைத்துள்ளது.
இது ஆதிச்சநல்லூர் மண்பரப்பை போன்றது ஆகும். அதே போன்றே மேட்டுப்பகுதி ஆகும். இருபுறங்களிலும் ஆதிச்சநல்லூரை விட நீளம் மற்றும் அகல நிலப்பரப்பு ஆகும்.
இவைகளை மேலும் வெளிகொண்டு வந்து காட்ட அரசு துறைகள் இதில் உடனே நடவடிக்கை எடுத்து சிவகளை பரும்பு பகுதியில் மிகப்பெரிய அளவில் வரலாற்று மற்றும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களை கொண்டு அகழ்வராய்ச்சி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் சிவகளை பரும்பு பகுதியில் உள்ள பழங்கால தொல்பொருட்களையும் கல்வெட்டுக்கள் மற்றும் நடு கற்களையும் சென்னையிலிருந்து தொல்லியல் அலுவலர்கள் லோகநாதன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்ய வந்தனர். அவர்கள் சிவகளை தாஜீசு, உச்சம்பரும்பு பரும்பு, செக்கடி, மேலபரும்பு, பேட்மாநகரபரும்பு, மற்றும் சுந்தரலிங்கநகர பரும்பு பகுதிகளில் காணப்படும் முதுமக்கள் தாழிகள், கல்வெட்டுகள், நடுகற்கள், தாமிரபரணி ஆறு முன்பு ஓடிய பகுதிகள், மேட்டுபகுதிகள் மற்றும் பழங்கால ஆயுதங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பி விரைவில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
====


