தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. குடிநீருக்கும் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு 150 ஆண்டுகள் கடந்த போதும் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் முறையாக செய்யவில்லை.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெறும் பணியை பார்வையிட வந்தார். அவருடன் மாவட்ட சார் ஆட்சியர் பிரசாந்த், ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் உள்பட அரசு அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அணைக்கட்டை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்,
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள விரிசல்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி மூன்று வார காலத்திற்குள் நிறைவடையும். மேலும் அணைக்கட்டில் இருந்து வடகால் பாசனத்தில் வாழை விவசாயிகள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதுகுறித்து இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பேசி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தூரம் வரை மூன்று முறை தாமிரபரணி நதி சுத்தம் செய்யும் பணி நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி 35 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பாய்ந்தோடுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் நதியை தூய்மை செய்யும் பணி துவங்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு குளத்தின் கரைகள் அனைத்தும் பலப்படுத்தும் பணி துவங்கும். மொத்தத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் செய்த அனைத்து நற்பணிகளும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தொடரும் என அவர் தெரிவித்தார்.


