தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அணைக்கட்டு தூர்வாரப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து மேல் பகுதியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணைக்கட்டு தூர்வாரப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதியில் வைத்து காணும்பொங்கலை சிறப்பாக கொண்டாடி வந்தனர். ஆனால் அணைக்கட்டுக்கு கீழ்ப்பகுதியில் முற்செடிகள் ஆக்கிரமிப்பால் நாளடைவில் அந்த விழா மறைந்தது. இந்த ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் இந்த அணைக்கட்டுப்பகுதியில் காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்நிலையில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் அணைக்கட்டுப்பகுதியில் பூங்கா அமைய உள்ள இடத்தினை பார்வையிட வருகை தந்தார். அப்போது அவர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் ஏப்ரல் 14ம் தேதி மாபெரும் உணவுத்திருவிழா நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் உணவுத்திருவிழா நடைபெறும் அணைக்கட்டுப்பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் கருவேல மரங்களை 4 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.